ஆசிரியர் பக்கம்

விக்கிரமாதித்யன்: நைட்டியில் தோன்றும் கவிதைகள்
- ஆர்.அபிலாஷ்

Image result for விக்கிரமாதித்யன்

தமிழில் இருவகையான கவிஞர்கள் உண்டு. கவனிக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்படுபவர்கள். பிரமிள், தேவதச்சன், தேவதேவன் போல. ஆர்வமாய் பரவலாய் வாசிக்கப்பட்டு, ஆனால் விமர்சன ரீதியாய் பொருட்படுத்தப்படாதவர்கள். விக்கிரமாதித்யன் இரண்டாவது வகையில் வருகிறார். இறுக்கமாய், ஒரு சொல் கூட மிகாமல், முறுக்கி முறுக்கி, பூடகமாய் கவிதை எழுதப்பட்ட காலத்தில் அவர் கவியுலகம் திறந்து விட்ட ஜன்னலைப் போல் ஏராளமான காற்றை வாசகர்கள் நோக்கி அனுப்பியது. அவர் எழுதியவை திறந்த பாணியிலான கவிதைகள். மிகுந்த சரளத்தன்மையும் வாசகனிடம் உரையாடும் தொனியும் கொண்டவை. அன்றாட வாழ்வின் குறிப்புகள், மத்திய வர்க்க வாழ்க்கையின் அலுப்பு, வேலையும் குடும்பப்பொறுப்பும் கிளிக்கூண்டைப் போல் தன்னை பூட்டி வைத்து விடுமோ எனும் பதற்றம், அரசல்புரசலான தத்துவத் தெறிப்புகள் இவற்றின் கலவையாய் அவர் கவிதையின் பாடுபொருட்கள் இருந்தன. அவ்விதத்தில் அவர் கவிதைகள் அமெரிக்க கவிஞர் புக்காவஸ்கியினுடையவை போன்றவை.

 பெரும்பாலும் விக்கிரமாதித்யன் எழுதுபவை புலம்பல்களாய், அறிக்கைகளாய், காலண்டர் தாள் தத்துவங்களாய் இருப்பதுண்டு. அவர் ஏராளமாய் எழுதியிருக்கிறார். தினமும் எழுதுபவர்கள் உரை எழுத்தாளர்களாய் இருப்பது நலம். அல்லாதபட்சத்தில் கவிதையில் நிறைய குப்பை சேரும். அப்படியான குப்பைகளையும் விக்கிரமாதித்யன் எழுதிக் குவித்திருக்கிறார். அவற்றின் இடையே சில அற்புதமான கவிதைகளையும், கவிதை ஆகும் முயற்சியும் நின்று போன நல்ல படைப்புகளும் இருக்கும்.

விக்கிரமாதித்யனிடம் உள்ள நேரடித்தன்மை, லகுவான வாசிப்பனுபவம், அதிர்ச்சி மதிப்பு, எதிர்க்கலாச்சார கூறு ஆகியன வாசகர்களை ஈர்ப்பன. குறிப்பாய் ஆரம்பநிலை வாசகர்கள். சொல்லப்போனால் எப்படி தீவிர புனைவு வாசிப்பை தி,ஜாவிடம் இருந்து துவங்கலாமோ அது போல் தீவிர கவிதை வாசிப்பை நான் விக்கிரமாதித்யனிடம் இருந்தும் துவங்கலாம்.
விக்கிரமாதித்யனின் முக்கியமான சிறப்பாக எளிமையை சொல்லலாம். அதாவது கருத்தாழமுள்ள எளிய வரிகளை அவரால் எழுத முடியும். அதுவும் பல குட்டிக்கவிதைகளில் அவர் உருவாக்கும் மாயம் வியக்கத்தக்கது. இந்த இரு வரிக் கவிதையை பாருங்கள்:
“இருட்டுக்கு
நட்சத்திரங்கள் நிறைய”
இருட்டைச் சுற்றி இத்தனை நட்சத்திரங்கள் எதற்கு? அவற்றால் இருளை வெளிச்சமாக்க முடியாதல்லவா? அவை வெறுமனே இருளுக்கு துணையிருக்கின்றன. இருளுக்கும் பயனின்றி, அவற்றுக்கும் பயனின்றி. இது போன்று எவருக்கும் பயனின்றி பல நல்ல விசயங்கள் நடந்து முடிந்து சாம்பலாவதுண்டு. அதைச் சொல்வதாக இக்கவிதையை பார்க்கலாம். இக்கவிதையின் மையம் “நிறைய” எனும் அழுத்தம் தரும் சொல்லில் இருக்கிறது. எவ்வளவு நிறைய? நிறைய நிறைய. வாழ்க்கை இருட்டாக உள்ள ஒரு எழுத்தாளனை, கவிஞனை, கலைஞனை எடுத்துக் கொள்ளுங்கள், அவன் தன் படைப்பாக்கம் மூலம் தன்னைச் சுற்றி வெளிச்சமாய் நிறைய பெருக்கிக் கொள்கிறான். ஆனாலும் இருள் தான் அவன் நிதர்சன நிலை. தன்னை அந்நிலைக்கு இழக்காமல் இருக்க பக்கத்தில் வெளிச்சத்தை பெருக்கி வைத்து அதில் அவன் காய்கிறான். இருட்டுக்கும் பலியாகாமல் வெளிச்சத்துக்கும் முழுக்க தன்னை ஒப்புக் கொடுக்க முடியாதவன் தான் ஒவ்வொரு கலைஞனும். அவனுக்கும் இரண்டும் தேவையாக உள்ளது. இப்படி இக்கவிதைக்கு எண்ணற்ற அர்த்தங்கள் கொடுக்கலாம்.

விக்கிரமாதித்யனால் எளிய அன்றாட வாழ்க்கைச் சித்திரம் ஒன்றை கசப்பு சொட்டும் படிமமாக மாற்ற இயலும். இக்கவிதையை பாருங்கள்:

வேலையில்லாதவன்
கைலியுடுத்திக்
கிழிக்க
வெள்ளைச்
சேலையுடுத்திக்
கிழிப்பாள் விதவை
சமைந்தவள்
தாவணி போட்டுக்
கிழிக்க
கலருடுத்திக்
கிழிப்பாள்
கல்யாணமானவள்
கிழியக்
கிழியக்
கிழிசல்
பழந்துணியாகி
வீடு மெழுக
இட்லித் துணியாக
சட்டிபிடித் துணியாக
கோவணம் கட்ட
ஓயாது காற்று

இளமை துவங்கி சம்சாரம் வரையிலான வாழ்வின் நிலையாமையை, அர்த்தமின்மையை, கீழ்மையை பகடி செய்யும் பட்டினத்தார் பாணி கவிதை இது. இறுதி வரி இருக்கிறதில்லையா “ஓயாது காற்று” அது தான் இக்கவிதையை ஒரு அற்புதமான படிமமாக்குகிறது. நீண்ட கயிற்றில் காயும் இட்லித்துணி, கரித்துணி, கோமணங்களை கற்பனை பண்ணுங்கள். அவற்றை காற்று அலைகழித்துக் கொண்டபடி இருக்கின்றன. இத்துணிகள் இளமையின், வாலிபத்தின், சம்சார சுகத்தின், பற்பல அன்றாட பொறுப்புகளின் இறுதி நிலையை சுட்டும் ஒரு அபாரமான சித்திரமாய் நம் முன் விரிகின்றது. தமிழில் எழுதப்பட்ட மிக மிக எளிதான, அதேவேளை துல்லியமும் ஆழமும் கொண்ட படிமக் கவிதைகளில் இதுவும் ஒன்று. ஆனால் முதல் தோற்றத்தில் இது படிமக் கவிதையாகவே தோன்றாது. ஏனென்றால் படிமக் கவிதை என்றால் கலகலவென கைவளையல்கள் ஒலிக்க, முகத்தில் பூச்சு வியர்வையில் கலைந்து ஒழுக பேந்த முழிக்கும் கல்யாணப்பெண்ணை போன்றொரு சித்திரம் தான் நமக்கு. ஒரு படிமக் கவிதை இது போல் நைட்டியிலும் தோன்றலாம்.