தமிழ் திரைப்படப் பாடல்களில் கவித்துவம் (3) – ஆர்.அபிலாஷ்


Image result for வைரமுத்து 

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?

வைரமுத்துவின் “புது வெள்ளை மழை” என ஆரம்பிக்கும் ரோஜாப் பட பாடலில் வரும் பத்தி இது. பூ மெல்ல மெல்ல காதலின், இச்சையின் உருவகமாய் ஆரம்பித்து மொத்த பெண்ணுடலாய் சட்டென உருவெடுக்கும் ஆச்சரியத்தை இவ்வரிகளில் காணலாம்.

பூ தொடர்ந்து கவிதையில் பாடு பொருள் ஆவதற்கு அதன் மிருதுத்தன்மையும், வாசமும் மட்டுமல்ல காரணம், அதன் வடிவமும் தான். பூ குவிந்து விரிந்த வடிவிலானது. அது பனித்துளிகளையும் மழைத்துளிகளையும் தன்னுள் வாங்கி ஏந்தி குலுங்குவது. உள்வாங்கி பூரிக்கும் அதன் தன்மை நமக்கு பெண்ணின் அல்குலை நினைவுபடுத்துகிறது. அதனால் தான் பூ மிக மிக செறிவான ஒரு காமக் குறியீடாக இருக்கிறது.
தாமரையின் இவ்வரிகளைப் பாருங்கள்:

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை (வாரணம் ஆயிரம்)
உமாதேவியின் இவ்வரிகளை கவனியுங்கள்:
தாபப்பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே (மெட்ராஸ்)

தாமரையின் பூ சித்தரிப்பில் ஒரு விநோதம் அது ஆண் பாடுவதாய் உள்ளது தான். ஆனால் நீரில் மூழ்கும் தாமரை எனும் குறிப்பு நிறைந்து மெல்ல கசியும் ஒரு பெண் குறியை தான் அது நம் மனதுக்கு கொண்டு வருகிறது. “பூவின் தாகம் நீ” என காதலனை பெண் அழைக்கும் வரி கூட ஒரு மெல்லிய காம ஏக்கம் தொனிப்பது தான்.

இனி வைரமுத்துவின் பாடலுக்கு திரும்புவோம். அவன் பெண்கள் 
இல்லாத ஊரில் பூவுக்கு தேவையில்லை என்கிறான். அவள் அவ்வூரில் பூவே பூப்பதில்லை என்கிறாள். இவ்வரியில் பூத்தல் பூப்படைதலாக, இச்சை நிறைவேறும் போது பெண் உடல் கொள்ளும் பூரிப்பாக மாறுகிறது. அடுத்த வரி தான் முக்கியம்.
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்/
 இந்த பூமி/
 பூப்பூத்தது

அப்பெண் எதேச்சையாய் தன் மாராப்பை நழுவ விட அவளது அப்போது மார்புகள் புலப்பட, அதைக் கண்ட கிளர்ச்சியில் பூரிப்பில் தூண்டுதலில் மொத்த பூமியும் பூவாக மலர்ந்ததாய் கூறுகிறார். அந்த பூக்களாய் பூரித்த பூமி என்பது அந்த ஆணின் மனம் தான். முழுக்க முழுக்க பூக்களால் நிரம்பிய பூமி உருளையை நினைத்துப் பாருங்கள். அது மயிர்க்கூச்செறிந்த மனித உடலை நினைவுபடுத்துகிறதா? கிளர்ச்சியில் உடல் முழுக்க மயிர்க்கூச்செறிந்த ஆணைப் போல் பூமி மாறுவதாய் கூட இவ்வரிகளை புரிந்து கொள்ளலாம். படிக்க படிக்க கேட்க கேட்க மிகுந்த மன எழுச்சி தருகிற வரிகள் இவை.

அதே பாடலில் வரும் இவ்வரிகள் பெண்ணுடல் பற்றி மற்றொரு புரிதலைத் தருகின்றன. பெண்ணுடல் கலவியின் போது மெல்ல மெல்லத் தான் சூடேறும். ஆனால் உச்சம் அடையும் நொடியில் இருந்து அது நீண்ட நேரம் இச்சையை இழக்காது சாம்பலுக்குள் மறைந்த கனல்துண்டைப் போல் இருக்கும். தொடர்ந்த தழுவலையும் தீண்டலையும் முத்தங்களையும் அன்பையும் ஆதரவையும் பெண்ணுடல் கோரியபடி இருக்கும். ஆண் தன் உச்சத்தை விரைவில் எட்டி விரைவில் இழந்த பின் அவளை விட்டு நீங்க எத்தனிப்பான். அப்போது அவள் எவ்வாறு வேதனைப்படுவாள் என்பதை இவ்வரிகள் காட்டுகின்றன.

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்

                                                         (தொடரும்)