நாகபிரகாஷ் கவிதைகள்

CHANGE by LittleVeeg

கன்னிமை
நிர்வாணத்துக்கும் இல்லாத
சக்திகொண்டு தாக்கிய
அந்த சிறுவிலகலின் சலனம்
இழுத்துச்சென்ற பாதையில்
மிச்சமிருந்த முட்கள்
கிழித்துக்கொண்டு உள்ளேறி
பிடித்து நிறுத்தின
எனக்கான அனுசரிப்புகள்
வழுவினால் என்னவென்று
முடிவுசெய்தவளாய் கேட்கிறாள்
வழிகாட்டிகள் உடலில்
பொதுவாய்த்தெரிந்த
வடுக்களுக்குப்பின்னிருந்த
காரணம் புரிந்த இந்தநொடி
மனதை உதைக்கும்
பலம் வந்தது
நீ அவளல்ல வென்றேன்
கட்டற்றவை
கட்டுக்கோப்பில் காட்டும்
நேசத்தின் விளைவாக
சில நாசங்கள்.

ஒற்றை மரணத்துக்குப்பின்.


துர்மரணத்துக்கு அறிகுறியாய்
சிதறிக்கிடக்கும் எள்மணிகளை
பொறுக்கித்தின்பவள் நிச்சயம்
என் தாயாக இருக்கமுடியாது

கூறுபோடுவதற்கான
குறைந்த விலைச்சலுகையை
அறிவித்த அறுப்பவனுக்கு
பரிசாய் சிரிப்பைத்தர
முடியாமற்போனது

சுமைதூக்கி கேட்டதை
சுமந்துநான் நசுங்காமலிருக்க
தோள் கொடுத்தவர்
நான் வளர்ந்தாலும்
ரொம்பவும் உயரமானவர்


அக்காளாக மட்டுமே
சொல்ல விரும்பும்
அண்மையானோரும்
அம்மாளாக மாறத் தயங்கா தினம்


மின்மயமான மயானம்
போக வழியில்லை
என் தாய் போனது சுடுகாடு.