ரிஷி கவிதைகள்

Vacuum Of Souls by reddeath-689

அடையாளம்
சதீஷ்
சுரேஷ்
ரமேஷ்
தினேஷ்
அடுத்தமுறை நீங்கள் சாகும்போது                                   
உங்கள் செல்போனை
சவக்குழிக்கு வெளியே வையுங்கள்

செத்தும்
செல்போனில் பேச
என்னையவா அழைப்பீர்கள்

செய்திகள் வாசிப்பது

கடந்தமுறை அவள்
கற்பழிக்கப்படும்போது
தாலியும்
கறுப்பு சட்டையும் அகற்றப்பட்டதற்கு
கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது

தாலிகட்டிய
கர்ப்பமாக்கிய
யாரையாவது கண்டுபிடித்து
மறுபடியும் தாலி கட்டப்படும் என்று
உறுதி அளிக்கப்பட்டது

வழக்கம்போல்  கறுப்பு சட்டையின் முகத்தை அவள்
முதுகில் வைத்து பொத்தானிட உத்தரவிடப்பட்டது



கலாச்சாரகாப்போன்
போருக்குமுன் பூஜிப்பது மரபு
போர் எச்சரிக்க
பூஜை மழைவேண்டி
இதிலென்ன தவறிருக்க முடியும்?
பற்றறுத்தலின் முதல்நிலை நிர்வாணம்
அவள் அதற்காகவே ஆசிர்வதிக்கப்பட்டவள், தேர்ந்தேடுக்கப்பட்டவளுங்கூட
உங்கள் கவனம் சிலைமீது மட்டும் குவிந்திருக்கட்டும்
அவளும் சிலையைப் போலத்தான் இருக்கிறாள்
அவளது புடைத்த

முத்தமிடாதே முத்தமிடாதே பொதுவிடத்தில் முத்தமிடாதே
போர் வெடித்தது
வேண்டுதல் பலித்தது
சற்றுதள்ளி பலமாகப் பெய்துகொண்டிருந்தது முத்தமழை


முடிவு
புத்தகம்
தன் முடிவை
கடைசிப் பக்கத்தில் எழுதிக்கொண்டிருந்தது
ஏதோ சொல்ல எத்தனிக்கையில்
அதன் வாய் மீது
ஜிகினா தாள் ஒட்டி
'திருமண வாழ்த்துகள்' என்றெழுதினேன்.









பலகை பொம்மையானது
ஏறாத கோயிலேறி
வேண்டாத சாமிய வேண்டி
தவமா தவமிருந்து
சதுர மரப்பலகையை வரமாகப் பெற்றாள்

கோந்தில்
தன்னைச் சுற்றி
வரைந்த வட்டத்தில் மட்டும்
தவழட்டுமென்று
கால்கள் செதுக்கினாள்
பலகை படிதாண்ட ஆரம்பித்தது

பிஞ்சு விரல்களின் மென்மையைப்
பிடித்து நடக்க ஒத்தாசைக்கி
கைகள் செதுக்கினாள்
அவளது இஷ்ட தெய்வத்தின் சிலையைத்
தெருவில் போட்டுடைத்தது

தண்ணீரில் தன்னைப் பார்த்து
பார்த்து பார்த்து
முகம் செதுக்கினாள்
அவள் சாயல் பிடிக்காமல்
சாயத்தை முகத்தில் அப்பிக்கொண்டது

மொட்டையாக நிற்கிறதேயென்று
ஆண்குறி செதுக்கினாள்
சேலையுடுத்திய பொம்மையொன்றை கூட்டிவந்தது

உளியை மேலும்
கூராக்கிக் கொண்டிருந்தாள்.

மாற்றம்
'நீ முன்ன மாதிரி இல்லை
ரொம்ப மாறிட்ட' என்றாள்
நிர்வாணத்தைக் களைந்து
சுடிதாருக்கு மாறிக்கொண்டே

அடர்ந்த மரத்தின் மீது பச்சைநிற தார்ப்பாய்ப் போர்த்தப்பட்டிருந்தது

நேற்றுவரை இல்லாத
அடர்ந்த மரம்
வெய்யிலை பொத்தலிட்டு
அந்த மேட்டின்மீது புதிதாக முளைத்திருந்தது
பசியுடன்
தடித்த கண்ணாடியைத் துடைத்துபோட்டுக்கொண்டு
நிழல் விரிக்கும் அம்மரம் நோக்கி நடந்தேன்
பாதி மேட்டில்
மூச்சிரைக்க நிமிர்ந்து பார்க்கையில்
மரம் சப்தமின்றிச் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு
புகைகிளப்பி இடத்தைக் காலிசெய்தது
மீதி மேடேற
மரமுமில்லை
நிழழுமில்லை












மரணத்துக்கு முன் ஓர் அழைப்பு

இறந்தவர்களிடம் பேச அழைக்கவேண்டிய
ரகசிய எண்ணுக்கு டயல் செய்தேன்
மறுமுனையில் பெண்ணின் அழகிய குரல்
இறந்தவர்களைப் பட்டியல் போட்டது

எண் 1ஐ அழுத்தி அப்பாவை அழைத்தேன்
'ம்' என்றார்
சாப்ட்வேர் இன்ஜினியராகி அமெரிக்காவில் செட்டிலாகியிருந்தார்
அவர் சொல்லை ஒருபோதும் கேட்காததற்கு வருந்தினார்
ஒரு ஜென்ம இடைவெளி இருந்தும் பேசுவதற்கு
எங்களிடம் இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஏதுமில்லை


எண் 2ஐ அழுத்தி அம்மாவை அழைத்தேன்
'காலைல சாப்ட்டியா?
எனக்கு முடி இப்போ அடர்த்தியா இருக்கு தெரியுமா?
நா நெனச்சபடியே எய்ம்ஸ்ல டாக்டருக்குப் படிக்கிறேன்
ஒரு டாக்டரா பாத்துதான் கல்யாணம் பண்ணனும்'
என்றவளிடம்
அப்பாவிடம் பேசியதை சொன்னேன்
இணைப்பு அவசரமாகத் துண்டிக்கப்பட்டது

எண் 3ஐ அழுத்தி நண்பனை அழைத்தேன்
'காசேதான் கடவுளப்பா' ரிங்டோன் ஒலித்தது
சிவப்புப் பட்டனை அழுத்தினேன்

எண் 4ஐ அழுத்தி காதலியை அழைத்தேன்
தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாள்



எண் 5ஐ அழுத்தி வாத்தியாரை அழைத்தேன்
'இன்னும் நீ நடுத்தெருவுலதான் நிக்கிறியா?
அடுத்து என்ன செய்யற மாறி உத்தேசம்?' என்றார்
கவிதையை அடுத்த வரியில் முடித்து
சாக இருக்கிறேன் என்றேன்.