சக்திஜோதி கவிதைகள்

Image result for கவிஞர் சக்தி ஜோதி
1.

பறவைகளும் பருவங்களும் :

இந்தப் பருவத்தில்
தன் சின்னஞ்சிறு  மகளிடம்
மிகச்சிறியதாகத் துளிர்த்திருப்பது
முந்தைய தன்னுடையதே போன்ற
முதிராத இறகுகளென்று
அம்மா அறிந்திருக்க
காற்றில் படபடத்த இறகுகளை 
முந்தையத் தன்னைப் போல
சின்னவள் அசைத்துக் கொண்டிருந்தாள்
இந்த உலகையே வலம்வந்து
யாவரையும் ஆசீர்வதிக்கும்
பாவனையில் .

2.

நிகழ்தல் :

பனி பொழிகையில் 
பூவெல்லாம் குளிர்ந்து கிடக்கிறது
கோடை தொடங்குகையில்
வியர்வை கசகசத்து விடுகிறது
இலையுதிர்கையில்
கிளைகளில் புதுத்தளிர் முளைவிடுகிறது
பூ விரிகையில்
தேன் கசியத் தொடங்கிவிடுகிறது
இவ்வாறாக 
ஒன்று நிகழத் தொடங்குகையில்
இன்னொன்றும் நிகழ்கிறது
வானம் தன்னைத் திறந்து கொள்ள
தீயெழுந்து பரவுகிற காதலைப் போல .

3.
பகிர்ந்துவிட இயலாத மிதத்தல் :

என்னிடம் பகிர்ந்துவிடு
என்கின்றன பறவைகள்
என்னிடம் பகிர்ந்துவிடு
என்கிறது வானம் 

அத்தனை எளிதில் பகிர்ந்துவிட இயலாத
அப்படியான  ஒரு அனுபவம் வாய்த்தது அவளுக்கு
நீண்ட ஆழமான
நிகழ்வின்  நீட்சியாக
பறத்தலின் விளிம்பில்
மிதத்தலின் துவக்கத்தில்
தன்னை உணர்த்திய அது   
அனுபவம் என்கிற ஒற்றைச் சொல்லில்
கடந்துவிட இயலாதது

4.

எல்லாவற்றிற்கும் பதிலியாக:

என்னிடம் 
மலையும் மலைமுகடுகளும்  இருக்கின்றன 
பெய்யும் மழை ஏந்தி 
பச்சைத் தாவரங்களைத் 
துளிர்க்கச் செய்யும்படியாக 

என்னிடம் 
பரந்த சமவெளியும் 
அகன்ற நதிப்பரப்பும் இருக்கின்றன 
இங்கே தழைத்திருக்கும்  தாவரங்களைப் 
பூத்துக் கனியச் செய்யும்படியாக 

என்னிடம் 
விரிந்த கடலும் 
எண்ணிக்கையற்ற  மீன்களும் இருக்கின்றன 
அலைகளின் ஓயாதிருத்தலையும்  
மீனின் துடிப்பையும் ஏந்தி 
உயிர்த்திருக்கும்படியாக 

மேலும் என்னிடம் 
சதாப்பொழுதும் திகுதிகுவென எரிந்து
கனலுகின்ற  
பெரு நெருப்புண்டு 

எல்லாவற்றிற்கும் பதிலியாக
உன்னிடம்  
வேறு என்ன கேட்டுவிடப் போகிறேன் 
ஒரே ஒரு முத்தம் 
அல்லது 
துளி நீலம் .

5.
இலைகளுக்கடியில் மறைந்திருக்கும் கனிகள் :

எப்பொழுதும் மூடிய கதவுகளுக்குள்
தன்னை இருத்தியிருப்பவள்

அவளுக்குத் தெரியாதது
தான் இருப்பது ஒரு கூடு என்றும்
அதற்கொரு கதவு இருக்கிறது என்றும்
சாளரங்கள் வழியாக
தெரிகிற உலகமே
உலகமெனத்
தரிசித்துக் கொண்டிருப்பவளுமான அவளுக்கு
ஒருமுறையேனும் சுவரின் சிறு திறப்பை
கதவென்று அறிந்துகொள்ள தெரியாமலிருந்தது

அவள் வெளியே பறப்பதற்கும்
பின்பு கூடு திரும்புவதற்கும்
அல்லது திரும்பாமல்
எங்கேனும் முதுமரத்தின் கிளையொன்றில்
அமர்ந்திருக்கவுமான திறப்பொன்றை
அவள் அறிந்து கொள்ளவும் அவசியமிருந்தது

திறப்பின் நாளில்
அவள் உணர்ந்துகொள்ளும்
வேறு ஒரு உண்மையும் உண்டு
கனிமரங்கள் எப்பொழுதும்
பறவைகளுக்கான கனியை
தன் இலையினடியில் மறைத்துவைத்து
உண்ணக் கொடுக்க மறப்பதேயில்லை.
6.
மாசி மழை :

அவள் மழையை மழையாகப் பார்த்தது
அது நான்காவது முறை

முதல் முறை மழை பெய்த பொழுது
மழை என்று அம்மா சொல்லித் தந்தாள்
இரண்டாம் முறை மண் வாசம் சொல்லித் தந்தாள்
அடுத்தமுறை எப்படி நனைவது என்பது பற்றி
யாரும் சொல்லித் தராமலேயே உணர்ந்துகொண்டாள்

எத்தனை முறை பார்த்த மழை இது
எத்தனை முறை நனைந்த மழை இது
எத்தனை முறை உணர்ந்த மழை இது

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு முகமாகத் தோற்றம் காட்டுகிறது

இம்முறை
வெளியே நனைத்து
உள்ளே இறங்கி மயக்கமூட்டுகிற
மழையாக இருக்கிறது

முன்பொருமுறை அம்மா தான் சொன்னாள்
மாசி மழை
இப்படித்தான் உதிர்ந்த இலை துளிர்க்க
உள்ளிறங்கிப் பெய்யுமாம்

துளிர்க்கிறது .

7.
தீண்டலின் எல்லை 
தொலை தூரம் என்றாலும்
சட்டென்று 
அவன் வந்துவிடுவான் 
சற்றைக்கெல்லாம் சென்றும் விடுவான்
அதன் பின்பு
பொங்கிய  உன்மத்தம் பெருக
மூடிய கண்களுக்குள் சுடரவும்
ஒளிர்வுக்குள் தொலைந்து போகவுமான 
கிளர்ந்த நிலையில் இருக்குமவளிடம் 
அவன் வந்து சென்ற தடயம் 
எதுவுமில்லை
காதலில் நலிந்த அவளின் மனதைத் தவிர .

8.
இடம்பெயரும் வெற்றிடம்:
துயருற்ற  மனதின்  இயலாமையை
உணர்கையில் 
செய்யவேண்டியது ஒன்றுமில்லை 
பழமையான நாட்டுப் பாடலொன்றின்  
சொல்லெடுத்துப் பாடலாம் 
அல்லது 
பண்டைய கடலோடியின் 
உப்புப் படிந்த இசைக்குறிப்பொன்றை
வாசிக்கலாம் 
அப்போது 
முந்தைய காலத்தின் இசையில் கரைந்து  
இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் 

மனதில் படிந்திருக்கும் வெற்றிடம் .