விடுதலை கீதங்களின் தேசியத் தேடல் - R.அருள்

Image result for dylan thomas

செய்யுள் விதிகளுக்குட்பட்ட மரபுக் கவிதைகளையும், விதிகளைக் கலைந்த நவீனக் கவிதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஒன்றையொன்று விரோதிக்கும் நிலையிலே அவைகள் முரண்பட்டு நிற்கின்றன, நவீனக் கவிதைகள் தங்களுக்கென்று எந்த விதிமுறைகளையும் கொண்டிருப்பதில்லை என்பது மரபுக்கவிதையின் குற்றச்சாட்டு. இதற்கு எதிரிடையாக மரபுக்கவிதைகள் தங்களுக்கென்று எந்த கவிதைத் தன்மையையும் செய்யுள் வடிவத்தில் கொண்டிருக்கவில்லை என்பது மரபுக் கவிதையின் மீதான நவீனக் கவிதையின் குற்றசாட்டு. நவீனக் கவிதைகள் மொழி அலங்காரங்களான பா வகைகளை முற்றும் களைந்து நிர்வாண  நிலையில் நிற்கின்றன. கவிதையின் தத்துவமும் உருவகங்களுமே இலக்கண  வரையறை அற்ற நவீனத்தை கவிதையாக சாத்தியப்படுத்துகிறது. நவீனக்  கவிதை இலக்கண விதிகளுக்கு உட்படுமாயின்  தத்துவம் சார்ந்த தன் உயிரை இழந்து விடுகிறது. இலக்கண விதிமுறைகளுக்காகவே படைக்கப்பட்டு கவிதை தன் ஆன்மாவை தொலைத்துவிடுகிறது. நவீன வாசகனை அவை கவருவதில்லை. அதே நேரத்தில் நவீனக் கவிதை என்ற தன் சுதந்திர நிலையில் கவிதை இலக்கண விதிமுறைகளை உதாசீனம் செய்து இலக்கண மரபை காலத்தில் எடுத்து செல்லும் தன் பொறுப்பை இழந்து விடுகிறது. இவ்வாறு இலக்கணம் சார்ந்த கவிதைகள் மரபு சார்ந்த கவிதைகள் எனவும் நவீனக் கவிதைகள் தற்போதைய காலத்தின் அடையாளம் எனவும் தங்களை வேறுபடுத்திக் கொண்டு இருவேறு துருவங்களாகிவிடுகின்றன.
இந்நிலையில் நவீனக்கவிதையின் பொறுப்பு தனக்கென இலக்கண வடிவத்தை  காலதிற்க்கு ஏற்ப உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மரபின் வடிவம் இங்கு அழியாமல் மற்றொரு வடிவத்தில் நவீனக் கவிதையின் மூலம் பரிணமிக்க வேண்டியிருக்கிறது. இந்த பரிணமித்தல் கவிஞனின் சொந்த விருப்பத்தின் பேரில் உருவாக்கப்பட வாய்ப்பே  இல்லை. கவிஞனின் சமூகச் சூழலே கவிதைக்கான வடிவத்தை தீர்மானிக்க வகை செய்கிறது. சமூகச் சூழல் படைப்பாளியை நிர்பந்திக்காவிடில் வெறுமனே மேற்கூறிய நிர்வாண நிலையிலேயே  கவிதை நின்றுவிடுகிறது.
அரசியல் மற்றும் சமூக நெருக்கடியில் கவிஞன் தான் பேச முன்வரும் செய்தியை வெறுமனே பழைய செய்யுள் வடிவிலோ அல்லது பாடல் தன்மையற்ற நவீனக் கவிதையிலோ கூற முடியாதவனாகிறான். இந்த நெருக்கடியில் கவிதையின் புது வடிவத்தை உற்பத்தி செய்கிறான். இப்படிப்பட்ட கவிதைகளை வாசிக்கும் போது நம் முன் நிற்பது கவிதை தான் கூற முற்படும் செய்தி அல்ல மாறாக கவிதையின் வினோத வடிவமே. உதாரணமாக டிலன் தாமஸ் என்ற வேல்ஸ் நாட்டுக் கவிஞரின் "Do not go gentle into that good night " கவிதையை எடுத்துக் கொள்ளலாம். மரணப் படுக்கையில் இருக்கும் தன் தந்தைக்கு எழுதும் கவிதை இது. இக்கவிதையில் டிலன் தாமஸ் வில்லனால் என்ற அதிகம் புழக்கத்தில் இல்லாத இத்தாலிய கவிதை வடிவத்தை கையாளுகிறார். இந்த கவிதை வகை பெரும்பாலும் இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்களாகவே பயன்படுத்தப்பட்டது. இலக்கிய அந்தஸ்த்து பெறாத பா வகை இது. அடிப்படியில் வாய் மொழிப் பாடல்களுக்காகவே இப்பாவகை இருந்துவந்தது. இக்கவிதையை வாசிக்கும் மாணவர்கள் கவிதையின் வடிவமான வில்லனையும் அந்த உடனடிப் புரிதலான தன் தந்தையின் மரணப் படுக்கையில் உயிர் துறக்கும் தருவாயையும் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். சற்று கூர்ந்து கவனித்தால் இந்த பா வகை வெறுமனே தந்தைக்கு மகன் கூறும் நம்பிக்கையின் வார்த்தைகளாக மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள  முடியாது. அதற்கும் மேலே கவிதை தேச விடுதலைக்கான கீதமாக முழங்கப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். இங்கிலாந்து  தனக்குள் கையபப்படுதிக் கொண்ட மூன்று நாடுகளான அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவை தங்கள் மொழி ஆங்கிலமாக இருப்பினும் தங்கள் தனித்தன்மையை விட்டு முழுவதும் தங்களை பிரித்தானியர்களாக மாற்றிக் கொள்ள உடன்பட வில்லை. பண்பாட்டு ரீதியில் எப்போதுமே தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர். தங்கள் பொது மொழி ஆங்கிலமாக இருப்பினும் பண்பாட்டு  ரீதியில் வேறுபட்டவர்கள் என்ற எதிர்ப்புக் குரலும் இலக்கியத் தனித் தன்மையும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இவ்வகையில்  டிளன் தாமஸ்ன் "Do not go gentle into that good night " வேல்ஸ்ன் தேசியப் பின்னணியில் இருந்து வாசிக்க வேண்டி இருக்கிறது.
 Do not go gentle into that good night,
Old age should burn and rage at close of day;
Rage, rage against the dying of the light.
என்று முதிர் வயதில் ஒளிர்விட்டு அணையப்போகும் தன் தந்தையை பார்த்து மரணம் என்ற இரவை ஆத்திரம் கொண்டு எதிர் கொள் என்று பாடுகிறார். பின் வரும் வரிகளில் எவ்வாறு வேறுபட்ட மனிதர்கள் மரணம் தவிர்க்க முடியாததாயினும் அதை எதிர்கொண்டு நின்றார்கள் என்பதையும்  பாடுகிறார்.
முதிர் வயதில் மரணம் என்ற இரவை சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆயினும் கவிஞன் தன் தந்தை அதை ஒரு கோழையாக சந்திக்க விரும்பவில்லை . ஒரு போராளியாக மரணத்தை எதிர்கொள் என்று உற்சாகம் ஊட்டுகிறார் . கடைசி சரணத்தில்,
 And you, my father, there on the sad height,
Curse, bless me now with your fierce tears, I pray.
Do not go gentle into that good night.
Rage, rage against the dying of the light.
தன் பொங்கிப்பெருகும்  கண்ணீரால் ஒன்று சாபமிடு அல்லது ஆசீர்வதி  ஆனால் அமைதியாக அந்த நள்ளிரவில் நுழையாதே என்று முடிக்கிறார்.
இதில் வரும் 'அந்த நள்ளிரவு" வெறுமனே தந்தையின் மரணமாக மட்டுமே பார்க்கமுடியாது. இதில் வரும் தந்தையும் வெறுமனே கவிஞனின் உறவு சம்பந்தப்பட்ட நபராகவும் பார்க்க முடியாது. மாறாக இந்த தந்தை பொதுப்படையில் முழு வேல்ஸ் தேசத்தையே குறிக்கிறது. இப்போது இது இங்கிலாந்து என்ற அந்த நள்ளிரவில் அது சப்தமின்றி அழிந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலம் என்ற இவர்களின் பொதுபடையான மொழி கலாசார வேறுபாடுகளை அழித்து அனைத்தையும் பிரித்தானிய மயமாக்குகின்ற நிலையில் அனைவரையும் தன் தனித் தன்மையை அரசியல் ரீதியில் நிலைநிறுத்த முடியாதவர்களாக மாற்றுகிறது. இனி வேல்ஸ் அதன் ஆங்கிலம் காரணமாக தன் மரபுகளை அழித்துக்கொண்டு இங்கிலாந்து என்ற அந்த நள்ளிரவில் அடக்கம் செய்யப்படப்போகிறது. இங்கு தங்களுகென்று தனித்துவம் எதுவம் இல்லை எனினும் தன் அழுகுரலாவது தங்களைத் தனிமைபடுதிக் காட்டும் என்ற நம்பிக்கையில்தான் டிலன் தாமஸ் இந்த புதுக்கவிதையை கையாளுகிறார். இதில் துக்கம் தரும் இன்னொரு காரியம் எவ்வாறு தன் தேசியம் இங்கிலாந்தால் விழுங்கப்பட்டதோ அதே போன்று வேல்ஸ் இலக்கியமும் அதனுள் விழுங்கப்பட்டுவிட்டது. கல்விப்புலங்களில் இவைகள் ஆங்கில இலக்கியங்களாக போதிக்கப்படுகின்றனவே அன்றி வேல்ஸ் இலக்கியமாக அறிமுகம் கூட செய்யப்படுவதில்லை.
இந்நிலையில் வேல்ஸ் மற்றும் அயர்லாந்தின் பிரச்னை நம்மை விட பரிதாபமாகக் இருக்கிறது. நாம் பாரதியைப் பற்றி பேசும் போது கவிதையின் அழகியல், பொருண்மை என்பதையும் மீறி கவிதையில் கவிஞன் தேசிய விடுதலை உணர்வை மூன்றாவது அடுக்குகளில் பார்க்கிறோம். டிலன் தாமஸின் ஆவேசத்தை பாரதியின் "தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" என்ற வரிகளில் நாம் பார்க்க முடியும். ஆயினும் சர்வாதிகாரத்திற்கு  எதிரான நம்முடைய விடுதலை கீதம் நம்பிக்கை தருவதாக இருந்தது. ஆனால், இங்கிலாந்தின் கூட்டு நாடுகள் தங்களுக்கான சுதந்திரம் என்ற பேச்சே இல்லாமல் மெல்ல மெல்ல பிரித்தானியமயமாக்கப்பட்டன. இங்கு தனி நாட்டிற்கான வாய்ப்பு இல்லையென்றாலும் கவிஞனின் குமுறல் எதிர்ப்புக் குரலாக புதுக்கவிதையில் பதிவு செய்யப்படுகிறது.

 தங்கள் நாட்டிற்க்குள்ளேயே அகதிகளாக்கப்பட்ட நிலையில்தான் படைய்ப்பாளிகள் தங்கள் பேச முடியாத பிரச்சனைகளை முன்வைக்க புதுப் புது இலக்கிய உத்திகளை கண்டைந்தனர். இதன் செயல் வடிவம்தான் நவீனத்துவம் ஓர் இயக்கமாக ஐரோப்பாவில் வடிவெடுத்தது. இவ்வியக்கத்தில் இருந்த பெரும்பான்மையானவர்கள் அயர்லாந்தை சார்ந்த உள்நாட்டு அகதிகளே. டிலன் தமஸையும் நவீனத்துவ இயக்கத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இன்றும் இடது சாரிகள் என்ற நிலையிலேயே அரசியல் ரீதியில் தங்கள் நிலையை காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.   இப்பின்னணியில் நாம்  கவிதையின் நூதனத் தன்மையையும் அதன் உடனடி பொருண்மையையும் எடுத்துக்கொண்டு கவிதையை சமூகம் சாராத ஓர் அழகியல் காட்சிபொருளாக மாற்றி தனிமைப்படுத்தி விடுகிறோம். இப்படியாக கவிதையின் சமூக அக்கறையையும், பிரச்சனையை முன் வைக்கும் கவிதைக்கான ஆற்றலையும் முடக்கி விடுகிறோம். இந்த வகையில் புதுக்கவிதை எவ்வாறு மரபின் செய்யுள் வடிவத்தை தன்னுள் காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொண்டு சொல்லவரும் பிரச்சனையும் முன்வைக்கும் ஆற்றல் வாய்ந்த சாதனமாகிறது என்பதை புரிந்து கொள்கிறோம். சொல்ல வரும் பிரச்னையை விட சொல்லப்படும் விதத்தை கவிதை வடிவத்தில் எவ்வளவு செறிவாக நிகழ்த்தப்படுகிறது என்பதே முக்கியமாக  புதுக் கவிதையில் இடம்பெறுகிறது.