நமக்கிடையிலான தொலைவு: ஒடுக்கப்பட்டவர்களின் சாதியத்திற்கு எதிரான குரலும், மனிதத்திற்கான விழைவும் எட்டியிருக்கும் தொலைவு - தீபா ராமமூர்த்தி


Image result for நமக்கிடையிலான தொலைவு மதிவண்ணன்                                                                                                            


நமக்கிடையிலான தொலைவு என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் மதிவண்ணன் அவர்கள், சாதியத்தின் கொடுமைகளை நியாயப்படுத்தி, குற்றங்களை கெளரவிக்கிற இச்சமூகத்தை கடுமையாகச் சாடுகிறார். இவரது கவிதைகளை கற்பிக்கப்பட்ட புனிதங்களைத் தகர்த்தெறியும் ஆற்றல்மிக்க ஆயுதம் என்றே சொல்லலாம். இந்துத்துவத்தையும் அது போதிக்கும் சாதியத்தையும் மட்டுமின்றி, பாலின அரசியலையும் எதிர்த்து தனது கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். அலங்காரச் சொற்கள் ஏதுமின்றி, தலித்/அருந்ததியர் இருப்பு நிலையை பட்டவர்த்தனமாய்ச் சொல்லும் விதம் பிரஞ்சுக் கவிஞர் சார்லஸ் போதெலெயரின் ”தீமையின் மலர்கள்” கவிதைத் தொகுப்பை நினைவூட்டுகிறது. இவரது கவிதைகளில் பிராமணத்தையும் சாதியத்தையும் சாடும் கருப்பொருளுக்கு அப்பாற்பட்ட தூய்தமிழுக்கு எதிரான மொழியமைப்பே இவரது தலித்திய அடையாளத்தை அழுத்தமாய்ச் சொல்கிறது. தலித்/அருந்ததிய மக்களின் வாழ்க்கை முறை, சாதிய ஒடுக்கத்திற்கு எதிரான அவர்களது பார்வை ஆகியவற்றை அவர்களின் வாழ்வியல் மொழியுனூடே பதிவு செய்திருப்பதாலேயே கவிதைகளில் எதிர்ப்பின் வலு கூடியிருக்கிறது.
”வெட்டியெடுத்துச் செல்ல தோதாய் முடி கொண்ட தலைகளின் கீதம்” எனும் கவிதை, சாதியப் போராட்டங்களில், வாழ்வா சாவா என்ற நிச்சயமற்ற, நிம்மதியற்ற சூழழ்களில் இருப்பு நிலை இலக்கியமாய் மாற்றப்படுவதைச் சொல்கிறது.
     வாளோடும் வார்த்தைகளோடும்
     நீ வருவது
     அடுத்த நிமிடமாய்க் கூட இருக்கலாம்.
     பத்திரமாய் ஒளித்து வைக்கிறேன்
     என் உயிரை
     பதட்டத்தில் துடிக்கும்
     இதயத்தின் தாளத்திலான
     இந்தப் பாடல்களில்.
தலைப்பிடப்படாதக் கவிதைகளில் ஒன்றான, “எதிர்ப்படும் போதெல்லாம்” எனத் தொடங்கும் கவிதை, தன் உயர் நிலையை முன்னிறுத்திக் காட்டுவதற்கென்றே பிறரை இழிநிலைக்குத் தள்ளும், சாதிய இந்துக்களின் கீழ்க் குணத்தை இனங்கண்டுச் சொல்கிறது,
     தாமதமாகவே உறைத்தது
     உன் வெள்ளுடுப்பை
     வெட்டி அதிகாரத்தை
     இன்ன பிறவற்றை
     நிச்சயிக்கவென்றே
     எச்சில் நீர் உனக்கு
     ஊறும் ரகசியம்.
     இப்போதெல்லாம்,
     உன் வாயிலடைக்க
     கைகளில் கொண்டு திரிகிறேன்
     தூமைத் துணிகளையும்
     தூமையில் தோய்ந்த
     இக்கவிதைகளையும்,
இக்கவிதையில் வெளிப்படும் கோபமும் ஆவேசமும், சாதியச் சமுதாயம் காலங்காலமாய் தலித்திய/அருந்ததியச் சமூகத்தினருக்குத் தந்து வரும் மன நெருக்கடியின் விளைவே.
ஒரு சில சமூக அவலங்களை எடுத்துரைக்கும் கவிதைகளில், பக்திப் பாடல்களின் மொழியமைப்பைக் கையாண்டு உயர் வழக்கு, தொனி ஆகியவற்றை பகடி செய்துள்ளார், எடுத்துக்காட்டாக,
     ….பார்ப்பனர் புகழுரைத்தல்,
     புளுகு பரப்பல்,
     காவலர் பொய்த்திறன் வியத்தல்
     பாலியல் பெருங்கதைகள் புனைதல்
     ஊடகக் கூற்று நிகழுமிடங்கள்
     இவை என்மனார் புலவர்.
ஊடக அறம் என்பதே மறந்து, உண்மைக்கு மாறான புரளிகளைத் திரித்து, பொய்யான தகவல்களை மக்களிடையே பரப்பும் ஊடகத் துறையை இக்கவிதையில் பகடி செய்துள்ளார்.
இந்நூல் வெறும் சாதியெதிர்ப்புக் கவிதைகள் எனும் வகைப்பாட்டுக்குள் அடங்காத வண்ணம், காதல், காமம், சுதந்திரம், அடையாளம், சமூக அவலங்கள் என பல்வேறு கருப்பொருள்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகவே வந்துள்ளது. பொது இலக்கிய வட்டத்துள் பயன்படுத்தத் தயங்கும் பல அமங்கலச் சொற்களும், வசைச் சொற்களும் இத்தொகுப்பு முழுவதும் பரவலாக புழங்குகின்றன. அத்தகைய பயன்பாடே ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வெழுச்சிகளை, அவர்களுக்கே உரித்தான சீற்றத்துடன் வெளிப்படுத்துகிறது. சாதியவாதிகளுக்கு எதிரான தனது கருத்துக்களை பொட்டிலறைந்தாற் போல் இவர் சொல்லியிருக்கும் விதம் பாராட்டத் தகுந்ததே. இத்தொகுப்பின் மூலம், என்.டி.ராஜ்குமார், இமையம் முதலான எழுத்தாளர்களைப் போல தமிழ் தலித் இலக்கியத்திற்கு புதியதொரு மொழியமைப்பை பங்களித்திருப்பது வரவேற்கத்தக்கது.