ஆசிரியர் பக்கம் – ஆர்.அபிலாஷ்

அகரமுதல்வன்: தீவிரமும் இசைமொழியும்

Image result for அறம் வெல்லும் அஞ்சற்க 

23 வயதாகும் ஈழக்கவிஞர் அகரமுதல்வன் மூன்று தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். அவர் வயதில் நாம் காதலையும் உணர்ச்சி குழப்பத்தையும் கற்பனாவாத கனவுகளை எழுதிக் கொண்டிருந்தோம். எனக்குத் தெரிந்தே பலர் முப்பதுகளில் தான் தீவிரமான எழுத்து நோக்கி நகரவும் கவிதையில் நிலைப்படவும் முயல்கிறார்கள். ஆனால் அகரமுதல்வன் வாழ்க்கையை தொட்டுத் தடவி அறியத் துவங்க வேண்டிய வயதிலேயே வதைமுகாம் அனுபவங்கள், சிதைந்த உடல்கள், கைவிடப்பட்ட குழந்தைகள், நடுக்கடலில் மரணத்தை நோக்கி வெறித்தபடி அமர்ந்திருக்கும் அகதிகள், வல்லுறவின் கடும் வலியின் மத்தியில் பழிவாங்கும் வெறியுடன் யோசிக்கும் பெண் போராளிகள் பற்றி பேசுகிறார். எந்த இந்தியத் தமிழனும் கற்பனை கூட செய்ய முடியாத அநீதிகள், கொடூரங்கள், உடலும் அறமும் முழுக்க அடையாளமற்று சிதைந்து போன சூழல் என பலவற்றை கண்டு கடந்து வந்திருக்கிறார். இது அவரை நாம் எவரையும் விட முதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. நான் ஆன்மீக, தத்துவ முதிர்ச்சியை சொல்லவில்லை. நாற்பது வயதில் ஒரு மனிதன் வாழ்க்கை பற்றி கொள்ளும் நம்பிக்கை வறட்சியும் எந்த தோல்வியையும் ஏற்கத் துணியும் மூர்க்கமும் அவரிடம் இந்த வயதிலேயே தோன்றி விட்டதைக் குறிப்பிட்டேன்.

அகரமுதல்வனிடம் நம் சமகால கவிதைக்கு விதிவிலக்காக ஒரு இசை லயம் உள்ளது. உச்சாடன தொனியுடன் – சற்றே என்.டி ராஜ்குமார் போல் – எழுதுகிறார். அறம் வெல்லும் அஞ்சற்க தொகுப்பில் உள்ள இவரது சில கவிதைகள் மேடையில் படித்தால் அதன் அர்த்தம் தவிர்த்து வெறும் ஓசையே கூட நம்மை உணர்ச்சிவசப்பட வைத்து விடும். ஆனால் வைரமுத்து, மு.மேத்தாவிடம் காணும் வெற்று அலங்கார ஓசைகள் அல்ல இவை. கவிதைக்கு ஆதாரமாய் உள்ள உணர்ச்சியை ஓசை வழியாகவும் மேலெடுத்து வாசகனை கிளர வைக்க இயலும். அதையே அகரமுதல்வன் செய்கிறார். அவர் வானம்பாடிகளைப் போல எதுகை மோனையை அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால் என்.டி ராஜ்குமாரைப் போல் சொற்களின் மாத்திரை அளவை சரியாய் உணர்ந்து அவற்றை கோர்ப்பதன் வழி மத்தள இசையை திரியில் சுடர் ஏற்றுவது போல் உருவாக்குகிறார்.

“நடுங்கிடும் சூரியனின் பயத்தை
வெடித்துப் போன நிலாவை
ஒளிந்து கொள்ளும் நட்சத்திரங்களை
உற்று நோக்கியபடி நிர்வாண சோதனைக்கு ஆட்பட்டிருந்தோம்”
எனும் வரிகளின் உள்ளார்ந்த தாளத்தை, அது அவ்வரிகளில் உருவாக்கும் பதற வைக்கும் வதைமுகாம் சித்தரித்துடன் பொருந்திப் போவதை கவனியுங்கள்.

அகரமுதல்வன் நம்மைப் போல் அன்பு, நீதி, மன்னிப்பு, தனிமனித உரிமை ஆகிய இருபதாம் நூற்றாண்டு, உலகப்போருக்கு பிந்தைய விழுமியங்களை நம்புவதில்லை. வ.ஜ.ச ஜெயபாலன், தீபச்செல்வன் போல் இவரும் ஒரு “போர்க்கவிஞர்”. களத்தில் அழியும் உடலை அவர் இழப்புணர்வுடன் பார்த்து இரங்குவதில்லை. வீழும் உடல் விதையாய் முளைத்து பழிவாங்கலுக்கு புது ஆயுதமான உருமாறும் என நம்புகிறார். இந்த நம்பிக்கையை அவர் அப்பட்டமாய் அன்றி நுணுக்கமாய் உணர்த்துகிறார். தன் சொற்களில், உருவகங்களில் ஒளித்து வைக்கிறார். கீழ்வருவதை கவனியுங்கள்:
“முன்னர் படகொன்றில்
புகலிடம் தேடி காணாமல் போனவர்களின்
குருதிகள் அலை அலையாய் எழுவதாய் தோன்றும்
கடல்வெளியில் சவக்குழி மணம் எங்கும் நீந்த
அவலப் பாடலை தேம்பித் தேம்பி பாடுகிறார்கள்
ஆதிமொழியில்
நிச்சயம் இவர்களும் ஈழத்தமிழரே”

இரண்டு விசயங்கள் முக்கியம் இங்கு. ஒன்று குருதி கடல் அலைகளாய் ஆர்ப்பரிப்பதாய் வரும் உருவகம் சக்தி வாய்ந்தது. கூர்மையானது. தமிழ்ச் சூழலில் இப்படியொரு உருவகம் கற்பனை பண்ண முடியாதது. அடுத்தது இப்பத்தியில் “ஆதிமொழி” முக்கியமான திறப்புச்சொல். அழிவின் விளிம்பில் ஈழத்தமிழர் பாடுவது ஆதிமொழி எனும் போது அவர்களின் கூக்குரல் அவலக்குரலாய் அல்லாமல் அடையாளப்போரின் நெடுங்கால முழக்கமாய் மாறுகிறது. இது போல் சட்டென ஒரு சொல் அல்லது உவமை, உருவகம் மூலம் கவிதையின் நிறத்தை மாற்றக் கூடியவர் அகரமுதல்வன்.

எங்கிருந்து ஆரம்பிக்கிறது தனது நிழல் என வினவும் சுந்தர ராமசாமியின் கவிதை நினைவிருக்கும். நிழல் எப்போதுமே கவிதையில் பிரக்ஞையின் குறியீடாய் தோன்றுகிறது. வெளிச்சம் உள்ள இடத்தில் நிழலில் இருந்து தப்ப இயலாதது போல மனிதனால் தனது சதா யோசிக்கும் மனதிடம் இருந்து தப்ப முடிவதில்லை. அகரமுதல்வன் இந்த குறியீட்டுக்கு முழுக்க வேறொரு தீவிர, போர் சார்ந்த நிறத்தை அளிக்கிறார்:
“ரத்த நிறத்திலொரு நிழல்
வன்மம் பீறிட்டு வழிய
நூற்றாண்டுகளுக்கு மேலாக படர்கிறது”

எங்கு சென்றாலும் குருதி பின் தொடரும் ஒரு பிறவியாக ஈழத்தமிழன் இங்கு தோன்றுகிறான். எப்படியான ஒரு துர்விதி இது?

இவரது சித்திரவதைக் கவிதைகள் வித்தியாசமானவை. நமது அரசியல் எழுத்துக்களில் உடல் மீதான வன்முறை ஒடுக்குமுறையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. சித்திரவதை நிறுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே நம் கோரிக்கையாக இருக்கும். பூக்கோவின் தாக்கம் காரணமாய் சித்திரவதையோ மரண தண்டனையோ சமூகத்தை மறைமுகமாய் ஒடுக்குவதற்காய் அரசு செய்யும் காட்சிபூர்வ வன்முறை என்ற அளவில் தமிழில் பேசப் பட்டுள்ளது. ஆனால் அகரமுதல்வனின் கவிதைகளில் வன்முறை, பலாத்காரம், சித்திரவதை ஆகியன பதில் தாக்குதலுக்கு முன்பான பின்னடைவு மட்டுமே. கடுமையாய் நசுக்கப்படும் ஒருவன் தனது சிதைவுறும் உடல் என்பதை நாளை எதிரியை தன் மக்கள் திரும்ப தாக்குவதற்கான முகாந்திரமாய் மட்டுமே பார்க்கிறான். ஒரே நேரம் எதிரியின் தாக்குதலுக்கு உள்ளாகும் உடல் எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் மாறுகிறது:

”துயரார்ந்த கோடை காலத்தில்
நடுங்கியபடி
நான் சரணடைதலை நிகழ்த்த
பீறிட்டு வெளியே வரும் வன்மங்களோடு
எனக்கான விசாரணை
தொடங்குகிறது…
எனது ஜீவிதம் நிறைவாக்கப்படும்
வீர மரணத்தை எதிர்பார்த்து
இன்னும் என்னென்ன நடக்குமென்று
ஒரு பட்டியலை மனதற்குள்
போடுகிறேன்…
நாயகன் களத்திடை வீழ்ந்தது உறுதியானது
ஏ.கே 47ன் வீரியம் பற்றி
ஆடையொன்றுமில்லாமல் எழுதிக்
 கொண்டிருக்கிறேன்
நான் இழக்கும் குருதிகளால் வலுப்பெற
அக்காவின் குழந்தைகளுக்கு கவிதை”

போராளி சிந்தும் குருதி போராட்டத்தை வளர்த்தெடுக்கும் எனும் நம்பிக்கை இன்று நீர்த்து விட்டது. உடல் மீதான வன்முறையில் பாதிக்கப்படுபவருக்கு எந்த பலனும் இல்லை, உடல் ஒடுக்குபவனின் கையில் ஒரு ஆயுதமாய் மாறுகிறது என்பதே பின்நவீனத்துவ நம்பிக்கை. இடதுசாரிகள் கூட இன்று ரத்தசாட்சிகள் பின் திரளுவதில்லை. ஆனால் அகரமுதல்வன் போராளியின் குருதியை போராட்டத்துக்கான எரிசக்தியாக பார்க்கிறார். உலகப்போருக்கு முன்பான, பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு முன்பான மனநிலை இது. இதில் எந்த குற்றமும் உள்ளதாய் நான் கூறவில்லை. அமெரிக்க ராணுவத்தில் கோட்பாட்டு பிடிப்பின்றி பங்கெடுக்கும் ராணுவ வீரனுக்கு ஏற்படும் கசப்புணர்வும் அவநம்பிக்கையும் வெறுமையும் வியட்நாமில் தன் இருப்புக்காய் போராடும் போராளிக்கு இராது. போரில் பங்கெடுப்பது வேறு வெளியில் இருந்து போரினால் பாதிக்கப்படுபவர்கள் வேறு. உதாரணமாய், சித்தாந்தன் இரண்டாம் வகையினருக்கான கவிதையையும் (ஷோபா சக்தி அவர்களுக்கான புனைவையும்), அகரமுதல்வன், தீபச்செல்வன் போன்றோர் முதல்வகையினருக்கான கவிதையையும் எழுதுகிறார்கள். இரண்டாம் வகையினர் போரைப் பற்றி சமகால சிந்தனையுடனும் முதலாம் வகையினர் நானூறு வருடங்களுக்கு முந்தைய பார்வையுடனும் இருக்கிறார்கள் எனலாம். ஈழத்தில் உள்ள சூழல் காலத்தை நானூறு வருடங்களுக்கு முன்பாக தள்ளி விட்டது என்றும் பார்க்கலாம்.

உடல் ரீதியான வன்முறையை கொண்டாடும் இக்கவிதைகளில் ஒன்றில் அவர் கவிதை எழுதுவது என்பதே மொழியை கொல்லுவது தான் என்கிறார்.
“கருணையென்பது சிறிதளவுமின்றி
எனக்கு முன்னர் தோன்றிய
சொற்களை கொலைப்படுத்தி
கவிதையென்றழைக்கிறேன்”
கொல்லுவது போதாதென்று அவன் மொழியை சிதைக்க, வதைக்க ஏங்குகிறார்.
“என் மரணத்துக்கு பின்னான
ஒரு மழைநாளில்
அளவிட முடியாத கொலையுணர்வோடு
மீண்டும் மீண்டும் சொற்களை கொன்றிருந்தேன்”

கொலையை அவர் ஒருவித விவசாயமாய் பார்க்கிறார். அதை வெற்றியை அறுவடை செய்யும் உடல் மீதான விவசாயம் என்கிறார். இவ்வரிகளை கவனியுங்கள்:
“துப்பாக்கி செடியை
உயிர்முழுவதும் விதைத்து செல்லும்
வன்முறை விவசாயிகளால்
தடயமின்றி சுகவீனமாகிப் போவதைத் தவிர”
எதிரியின் தோட்டாக்கள் இங்கு ஈழப்போராட்டத்தின் விதைகளாய் மறு உருவெடுக்கின்றன. ரவைகளால் துளைக்கப்பட்ட உடலை விவசாய நிலமாய் வேறு யாரும் - உலகக்கவிதையில் கூட - சித்தரித்ததாய் நினைவில்லை.

அன்பும், நிராசையும், அபத்தமும், அரசியல், தத்துவ, அற விசாரமும் சமகால இந்திய தமிழ்க்கவிதையில் பிரதானமாய் இருக்கையில், அகரமுதல்வனின் வரிகளின் அடிநாதமாய் இருப்பது மேற்சொன்னவற்றை நிராகரித்துச் செல்லும் “கொலையுணர்வு” தான். அதாவது கடும் வன்முறையை சித்தரிக்கும் நமது தலித் கவிதைகளில் கூட இந்த கொலையுணர்வு இல்லை. காரணம் நாம் ஒரு ஜனநாயக தளத்தில் இருக்கிறோம். அகரமுதல்வன் ஜனநாயகம் இறந்த, சர்வாதிகாரம் மட்டுமே சாத்தியமுள்ள ஒரு மண்ணில் நின்று எழுதுகிறார்.
நிலத்தை இவர் தொடர்ந்து பெண்ணுடலாகவே சித்தரிக்கிறார்.

“பெரும் மெய்மையற்ற ஊழி
வீரியமில்லாத இருள்மையால்
நிலத்தை புணர்ந்தபடி இருக்கிறது”
விதியை ஆண்மையற்ற காதலனாகவும், அவனது வெற்றுப்புணர்ச்சிக்கு அர்த்தமற்று இடம் அளிப்பவளாக ஈழ அரசியலையும் காட்டுகிறார்.
நேர்மாறாய், வீரம் செறிந்த போராட்ட சூழல் என்பது பெண் எனும் நிலத்தில் வீரியமிக்க ஆண் செய்யும் புணர்ச்சியாக உள்ளது:

“…கண்ணுறங்கும் காலத்தை
காவலரண் ஒன்றை கருத்தரிக்க செலவு செய்
எழுந்து வருகிறது வெள்ளரசு
தமிழ் விழுதுகள் வீழ்த்த”

“இன்னும் போராடும் இசைப்பிரியா” எனும் கவிதையில்
”இனவெறியை கர்ப்பம் தரித்து
கொலைகளை பிரசவிக்கும் நிலமொன்றில்”
எனும் போதும் பெண்ணுடல் செயலற்ற நிலையில் ஆணின் கருவியாகத் தான் இருக்கிறது. இசைப்பிரியாவின் வல்லுறவு காட்சியை சித்தரிக்கும் போது அகரமுதல்வன் அங்கு அவலத்தையோ வேதனையோ முன்னிறுத்தாமல் வீரத்தையும் போராட்ட நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார். ஒருவிதத்தில் அவர் இந்த பலாத்காரத்தை போராட்டத்தின், போரின் அன்றாடப் பகுதியாக, குண்டு படுவது, கைகாலை இழப்பது போல, பார்க்கிறார்.

”குருதிப்பிரியர்களால் துயிலுரியப்பட்டவள்
அவயங்களைக் கீறிய மிருகங்களின் முகத்தில்
காறி உமிழ்ந்து மரணத்தை அழைத்திருப்பாள்”

”காறி உமிழ்ந்து மரணத்தை” அழைக்கிறார் இசைப்பிரியா. அவர் வேதனை பொறுக்காது கூக்குரலிடவில்லை. தில்லியில் கொடூரமாய் பலாத்காரம் பண்ணப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயா பற்றி நமக்கு கிடைத்த, நாமே உருவாக்கிக் கொண்ட சித்திரம் முற்றிலும் மாறுபட்டது. பொதுவாய் இந்தியாவில் பெண் மீதான பாலியல் வன்முறை பலவீனர்கள் மீதான ஒடுக்குமுறையாய் பார்க்கப்படுகிறது. அகரமுதல்வன் இங்கு இசைப்பிரியாவை பாதிக்கப்பட்டவராய் காட்டுவதை தவிர்க்கிறார். அவருக்கு பெண்ணுடல் அனுபவிக்கும் கொடுமைகள், அவமானங்களை விட அது எதிர்வரும் போராட்டத்திற்கு எப்படியான முகாந்திரமாகப் போகிறது என்பது தான் முக்கியமோ என எண்ணத் தோன்றுகிறது.
பெண்ணுடலை இது போன்று இந்திய தமிழ்க்கவிதையில் சித்தரிப்பது இன்று கற்பனை செய்ய முடியாதது. அப்படிச் செய்யும் கவிஞனை பெண்ணியவாதிகள் ஊறுகாய் போட்டு விடுவார்கள்.

அகரமுதல்வனுக்கு பெண்ணுடல் மட்டுமல்ல பிரபாகரனின் உடல் கூட வெறும் கருவி தான் என்பது “தலைவன் என்பவனும் தசைகளின் கூட்டுறவே” எனும் கவிதையில் தெரிய வருகிறது. மரித்து கடலடியில் மீன்களால் உண்ணப்படும் தலைவரின் உடலை மறந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இறந்த மறுநொடி பிரபாகரனின் முக்கியத்துவம் இல்லாமல் ஆகி விடுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்க் கவிதை வெகுவாக எளிமைப்பட்டிருக்கிறது. அனுபவங்களை நேரடியான மொழியில் எழுதுவது, பெரும்பாலும் உருவகங்களை தவிர்த்து உவமைகளை பயன்படுத்துவது, குறியீடுகளை நெற்றியில் பொட்டு போல பயன்படுத்துவது தான் இப்போதைய போக்கு. மாறாக அகரமுதல்வனின் கவிதை இடுப்புக் கச்சையிலும் வாளிலும் ஏகப்பட்ட மணிகளை கோர்த்து கிலுகிலுவென துள்ளும் கேரளாவின் சாமியாடிகளைப் போல் நம் முன் வருகிறது. ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் ஒரு உருவகம் கோர்க்கிறார். இது அவரது கவிதையை படிக்க சிரமமாக்குகிறது. கீழ்வரும் பத்தியை பாருங்கள்:

“பூதைகுழி வாழ்வின் பூரண மடியில்
பரவி வீழும் நீதியின்மைகள்
இரக்கக் கீற்றுகளற்று
தொடர் யுகக் கொலை நிகழ்த்தும்
புரியாத மரண சமிக்ஞை
லாடங்களில் படர
நாடோடிக் குதிரைகளென
எங்கேனும் வாழப் பழகி
குளம்படிக் காயங்களோடு
இருண்ட எல்லை நோக்கி
விரைந்து
டோலருக்குள் மறைகிறோம்”

புதைகுழி வாழ்வு, இரக்கக் கீற்று, குளம்படிக் காயம், டோலர் என ஒரு நீண்ட வாக்கியத்துள் நான்கு உருவகங்களுக்கு மேல் வருகிறது. இப்படி சரம் சரமாய் வரும் உருவகங்கள் குறைந்தால் அவரது கவிதைக்குள் வெளிச்சம் அதிகமாகும்.
கீழ்வருவது போன்ற மிகவும் காட்சிபூர்வமான அட்டகாசமான வரிகளையும் அகரமுதல்வன் அங்கங்கே எழுதுகிறார்.
“மழையடித்து குமுழியிடுகிற ஊற்றில்
நட்சத்திரங்கள் தோன்றித் தோன்றி மறைய
இரவுப்புதர்களால் நகரத் தொடங்கின
நிலங்களை களவாடும் இனவாத மிருகங்கள்”
இவ்வரியில் மூன்று விதமான சலனங்கள் வருகின்றன. மழையில் குமிழியிடும் நீர்நிலை, குமிழிகள் மத்தியில் தோன்றி மறையும் நட்சத்திர பிரதிபலிப்பு, இவையிரண்டையும் போன்றே மாய்மாலமாய் நகர்ந்து சூழும் எதிரிப்படையினரின் “இரவுப்புதர்கள்”. இரவின் சிறுசிறு அசைவுகளும் அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் மெல்ல மெல்ல உச்சநிலைக்கு கொண்டு போகிறவை. தாக்குதல் எனும் ஒரு பெரிய அசைவை காட்ட இது போன்ற பீதியூட்டும் சிறு அசைவுகளை சித்தரித்தால் போதும்.

அகரமுதல்வனின் சிறப்பு அவரது சரளமான, காட்சிபூர்வமான உருவக மொழிதான். மிக நுணுக்கமான உணர்வுகளை தீவிரமாய் கண்முன் கொண்டு வர அவரால் இயல்கிறது. உதாரணமாய் உடலுக்குள் புதைந்து அரிக்கும் காமம் பற்றின இச்சித்தரிப்பை பாருங்கள்:
“முத்தங்கள் விரிக்கும் காமத்தின் நாகம்
ஸ்பரிசங்களுக்குள் புற்று எழுப்பியிருந்தது”

அல்லது காதல் நினைவுகளைச் சுட்டும் இந்த உருவகத்தை கவனியுங்கள்:
“பொழிந்து கொண்டிருக்கும் மழையில்
அசைந்தபடி செல்லும் தூறலின் அமிழ்தம்
இலைகளில் தொங்கி என்னில் படுகிறது
மாயங்கள் மரித்த பிம்பங்களின் முத்தமிடலோடு”
மழை பெய்த பின் மரக்கிளைகளின் கீழ் நிற்கும்/நடக்கும் எவரும் சில்லென ஒரு துளி எதிர்பாராது கன்னத்தில் விழுந்து தீண்டும் போது திடுக்கிடுவோம். அது சட்டென நம் மனநிலை மாற்றி நினைவுகளை புரட்டிப் போடும். அது போன்று, காதல் பற்றின சிந்தனையின் போது ஏதாவது ஒரு நினைவு, ஒரு சொல், ஒரு வாசனை நம்மை மனம் குலைய வைக்கக் கூடும்.

”அச்சமடையத் துவங்கும் இரவுப் பொழுதுகளில்
யுத்தவெளியின் குருதிக் கறைகளை
தீராக் கனவுகளில் வரித்து தூங்குகிறோம்”
போன்ற மிக உக்கிரமான வரிகளையும் அவர் உருவாக்குகிறார்.
அகரமுதல்வனின் முக்கியமான பலவீனம் வடிவச் சிதறல் தான். அவரது கவிதைகள் பாதரசத்தை தரையில் சிந்தினாற் போல் உள்ளன. பல அழகான கவிதைகள் ஒரு புள்ளியை நோக்கி நகராமல் தனித்தோடுகின்றன. சில கவிதைகளில் மைய உணர்ச்சியில் இருந்து விலகி விவரிப்புகள், கூற்றுகள், சித்தரிப்புகள் என கவனம் சிதறி வடிவ நேர்த்தியை இழக்கிறார். கவிதை அடிப்படையில் மென் உணர்ச்சிகளால் ஆனது. அதன் மென்மையான உடல் பாரமான உருவகங்கள், குறியீடுகளை அளவுக்கு மேல் அடுக்கினால் தாங்காது. இன்னும் கச்சிதமாய் திருத்தி தேவையற்ற உருவகங்களை நீக்கும் பட்சத்தில், எளிய வரிகள் மூலம் உக்கியமான உணர்ச்சிகளை சித்தரிக்க அவரால் இயலும். உடலுறவில் போல கவிதையிலும் உச்சகட்டம் ஒருமுறை தான் நிகழ வேண்டும். அதுவரை சன்னமான, எளிய நேர்த்தியான இயக்கம் போதும். அகரமுதல்வன் இந்த சமநிலையை விரைவில் அடைவார் என எதிர்பார்ப்போம்.


இந்த நூலை இவ்வளவு அழகாய், நேர்த்தியாய் வெளியிட்டுள்ள சாய்ராம் பதிப்பகம் மற்றும் யாவரும்.காமை நிச்சயம் பாராட்ட வேண்டும். கவிதைத்தொகுப்புகள் இவ்வளவு கவனமுடன் தயாரிக்கப்படுவது அரிது தான்.