கண்ணாமூச்சி - மயோரா யோகா

இப்பொழுதோ எப்பொழுதோ
அதைத் தொலைத்தேன்
என்று தெரியவில்லை.
அது எந்த நிறம்?
கருப்போ சிவப்போ
என்று யோசிக்கிறேன்.

செவ்வகமா ? வட்டமா என்று
அதன் வடிவம் கூட
எனக்கு மறந்துவிட்டது.

அது என்னிடம் இருந்த பொழுது
நான் எப்படி இருந்தேன் ?
அது தொலைந்த பொழுது
என்னிடம் அது 
எந்த மாற்றத்தை
விளைவித்தது என்று எனக்கு
விளங்கவே இல்லை.

என் கையில் அது இருந்த பொழுது
அது என்ன தன்மையுடன்
இருந்தது என்று நான் எப்படி
யோசிக்காமல் போனேன் என்று
குழம்புகிறேன்.

அது இருந்ததற்கான சுவடே
என்னிடம் இல்லை என்று
நினைக்கையில் நான் பைத்தியம்
என்று நினைத்துக் கொண்டேன்.

சில சமயங்களில்
ஒரு வெற்றிடத்தை
நோக்கி மாய வித்தைகள் செய்து
அது என்னிடம் சேர்ந்து விடாதா
என்று நப்பாசை கொள்கிறேன்.

பல நேரங்களில் நியாய
தர்மங்கள் படி நடக்கும்
என்னை விட்டு  அது
ஏன் விலகி சென்றது
என்று ஐய்யப்படுகிறேன்.

பின்னர் அது இல்லாத
ஒரு வாழ்விற்க்கு ஆயத்தமாகிறேன்