மனுஷி கவிதைகள்

1. சாத்தானுடன் தேநீர் அருந்துதல்

இள மஞ்சள்நிறத் தேநீரோடு
சூரியனை
வரவேற்பதிலும் வழியனுப்புவதில்
பித்தநிலை
பெருவிருப்பமுடையவன்
சாத்தான்.
சூரியனின் மஞ்சள் நிறம்
தேநீர்க் கோப்பையின் உள்ளிறங்கியதை
உற்றுப் பார்த்தபின்
லயித்து ருசிக்கிறான் முதல் மிடறை.
சாத்தானின் வயிற்றுக்குள் குளிர்ந்து
மிதக்கிறது சூரியன்
ஒளிக்கற்றைகளை மெல்ல பரப்பி.
நிலவு ஒளிரும் சாமப்பொழுதில்
மதுவருந்த அழைக்கிறான் சாத்தான்.
சூரிய உதயத்தில் புறப்பட்ட கடவுள்
சிக்னல் நெரிசலில் சிக்கித்தவிக்கிறார்
மதுவின் முதல் மிடறு சுவைக்கும் பேராசையுடன்.

2. கண்ணீர் மறைவுப் பிரதேசத்தில்
முரண்பாடுகள் வலுக்கும் நாளில்
நடுச்சாமம்
போதையில் திணரும்படி
உனக்கு மிகப்பிடித்தமான 
மதுவகையினைக் கோப்பையில் நிரப்பிக் குடி.
அறைச் சுவர்களில் பரவிப் படரும்படி
சிகரெட் புகையினை ஊதிச்
சுருள் சுருளாக பறக்க விடு.
உன் கோபம் தீரும் மட்டும்
ஒரு பெண்ணுடலைப் புணர்ந்து 
ஆசுவாசம் கொள்.
எல்லாம் முடிந்தபின்
யாருமற்ற நெடுஞ்சாலையில்
பைக்கில் பறந்து செல்
இரவைக் கிழித்தபடி.
உன் நிம்மதியைத் தரும் எதையும்
நீ தயக்கமின்றிச் செய்.
என் கண்ணீர் மறைவுப் பிரதேசத்தில் 
நடந்தேறட்டும்
இவை எல்லாமும்.
உன் மகிழ்ச்சி முக்கியம் 
எனக்கு.