இதிலிருந்து என்னை வெளியேற்றுங்கள் - நாகபிரகாஷ்

இதிலிருந்து என்னை வெளியேற்றுங்கள்
இயலாதெனில் இந்த இடைவெளியை
எதையாவது இட்டு நிரப்புங்கள்
ஏதோவொரு ஸ்வரஸ்தானத்தை தொட்டுத்
தொடங்கிய அது தன் நிறங்களை மாற்றியவாறே
அடர்த்தியாகி காதை அடைக்கிறது
இமைகளைத் தொட்டு நிற்கும் கண்ணீர்
அதை நான் ஏன் சேமிக்கிறேன்
அழத் தனியிடம் வேண்டியிருக்குமோ?

அதை சங்கீதத்தின் மடியெனக் கொள்கிறேன்
அதற்கென நேரம் வேண்டுகிறேன்
அது துரத்த ஓடுகிறேன்
அதை துரத்த மறைந்தோடுகிறது
அதுவே பின்வந்து கட்டியணைக்கிறது
கடைசிவரை தனிமையை தொடாமல்
அது ஓய்வதே இல்லை

இதில்
வரிகளைக் குற்றம் சொல்லி
என்னதான் பயன்