மேற்கத்திய சர்ரியலியக் கவிதைகள் (3) - ஹேரி கிராஸ்பை (1898-1929)


தீப்பந்தம்  
நம் காலத்தின் புரட்சி உணர்வு பற்றின உங்கள் எண்ணம் என்ன, உதாரணமாய் கம்யூனிஸம், சர்ரியலிசம், அராஜகவாதம் போன்ற இயக்கங்களில் வெளிப்படுவது போன்று?
நம் காலத்தின் புரட்சி உணர்வு என்பது (கம்யூனிஸம், சர்ரியலிசம், அராஜகவாதம் ஆகியவை வெளிப்படுத்துவது போல) ஒரு தகிக்கும் தீப்பந்தத்தை உலகின் இருட்டு லாந்தருக்குள் திணிப்பதை போல் ஆகும்.
இன்னும் ஒன்பது பத்தாண்டுகளில்
“பைத்திய ராணி” பிறப்பாள்

தரிசனம்
“பைத்திய ராணியும்” நானும் கண்களை பரிமாறுகிறோம்

கண்ணாடி என் முகத்தில் பட்டு உடைந்து
ஆயிரம் சூரியன்களாய் தெறிக்கிறது
நகரம் முழுக்க கொடிகள் பட்பட்டென வெடித்து ஒன்றோடொன்று மோதுகின்றன
மூடுபனி அபாய சங்குகள் துறைமுகத்தில் அலறுகின்றன
புயல் ஜன்னல்வழி சீறி எழுகிறது
குர்திய மேய்ப்பன்களுடன் நான் நடனமாட ஆரம்பிக்கிறேன்

தரையில் உதைத்து ஒலியெழுப்பி
சூபி ஞானிகள் போல் சுழல்கிறேன்

நிறங்கள் ஆடைகளை அணிந்தும் துறந்தும் சுழல்கின்றன
நான் வெஞ்சினத்தில் அவற்றை சொடுக்கி அடிக்கிறேன்
தூய வெள்ளை இரும்பு கருமையுடன்
கண்ணை எரிக்கும் சிவப்பு நீலத்துடன்
கடல் பச்சை பளீர் ஆரஞ்சுடன்
தங்க நிறம் மட்டுமே நிர்வாணமாய்

எழுந்து மூழ்கும் எக்கு தூண்கள்
தோன்றி மறைகின்றன
என் ஆத்மாவின் நதியை உந்துதண்டால்
மேல்நோக்கி குத்துகின்றன
கீழ்நோக்கி குத்துகின்றன
உள்நோக்கி குத்துகின்றன
வெளிநோக்கி குத்துகின்றன
துளைக்கின்றன

நான் வலியால் ஆர்ப்பரிக்கிறேன்
கருங்கால் பூனைகள் துளைகளுக்குள் மறைகின்றன

என் முதுகில் பச்சை குத்தப்பட்ட சூரியன்
சுழலத்தொடங்குகிறது
வேகமாய் இன்னும் வேகமாய்
சுழற்றியடிக்கிறது சுழற்றியடிக்கிறது
கம்பீரமாய் தீப்பொறிகளை பறக்க விடுகிறது
பொறிகள் அண்டத்துக்குள் துளைத்தேறுகின்றன
எரிகற்களுக்குள் துளைத்தேறுகின்றன
எரிகற்கள் வால்நட்சத்திரங்களுடன் மோதுகின்றன

வெடிப்புகள்
நிர்வாண நிறங்கள்
சிவப்பு பேராபத்துகளாய்
வெடிக்கின்றன

நிர்வாணமாய் ஜன்னலை உடைத்து
தாவி
பற்றிப் பரவி நிற்கும்
ஒரு ஹிலியோஸரஸ் டைனோசரஸின் மீது நின்று
ஒரு சதுர கூம்பகத் தூணைப் பிழுது
கருங்கடலின் மைப்புட்டிக்குள் திணித்து எடுத்து
ஒரு சொல்லை எழுதுகிறேன்
“சூரியன்”