பென்சிலை கீழே வைக்கும் முன் - சுப்பிரமணி இரமேஷ்







கல் தோன்றுவதற்கு
முன்பு தோன்றிய
கடல்தான் அவன் முதலில் வரைந்தது.
கடலுக்கு வானத்தின் நிறம்
தீட்டியதைத் தொடர்ந்து
அவன் வரைந்தது
சிகரங்களோடுகூடிய மலையை.
இரு சிகரங்களுக்கிடையில்
கதிரவன் செந்நிறத்தோடு
தோன்றி வளர்ந்தான்.


ஆற்றங்கரையில்
வயலோடு சேர்ந்த
ஒரு வீட்டை உருவாக்கினான்.
காற்றுக்கு ஒரு ஜன்னல்
இரண்டு தென்னை மரங்கள்.
ஆண் உழுதான்;
பெண் நடவு போட்டாள்.

இருவர் நான்காயினர்
வீடு ஊரானது
ஊர் நகரமானது
நகரம் நாடானது
நாடு உலகமானது
உலகத்தைச் சிருஷ்டித்த
பெருமிதத்தோடு
அவன்
பென்ஸிலைக் கீழே வைத்தான்!