சுக்கிலத்தின் பிரகாச நிறம் – போகன்





எவ்வளவு முயன்றும்
 முதல் சுக்கிலத்தின் பிரகாச நிறத்தை அவளால்
 மறக்கவே முடியவில்லை
 ஒவ்வொரு புணர்ச்சிக்குப்
 பிறகும்
 அது மேலும்
 ஒளி கூடிக் கொண்டே
 செல்வதாய்
 இப்போது அவளுக்குத்
 தோன்றுகிறது
 புதியவர்கள்
 என்று குவிகிறவர்கள்
 எப்படி எப்போதும்
 பழைய சுக்கிலத்தையே
 கொண்டு வருகிறார்கள்
 என்றவள் ஒவ்வொரு
 இரவும் வியக்கிறாள்

 பிறக்கையிலேயே
 துருப்பிடித்த பாத்திரம் போல
 அவர்கள் இருக்கிறார்கள்
வளர்ந்து உயர்ந்து
 அவர்கள் கொண்டு வருவதும்
 மக்கிய விதைகளையே
 அவற்றைக் கொண்டு
 அவள் வனத்தை நிரப்ப
 அவள் விரும்பவில்லை
 இருந்தாலும்
 காச நோயாளியின் கோழை
 மிதக்கும் குளம் போல
 அவை அவள் மேல்
 மிதக்கின்றன
 எல்லாவற்றையும்
 துடைத்து விட்டு
 அவள் தனது முதல்
 சுக்கிலத்தின் தூய்மைக்குத்
 திரும்ப விரும்புகிறாள்
 அதன் முதல் வெம்மைக்கு
 தொடைகளில் பரவிய
 அதன் முதல் ஈரத்துக்கு
 சிசுப்பையின் முதல்
 நடுக்கத்துக்கு

 இருப்பினும்
 அவள் அறிவாள்
 அவளது நங்கூரங்கள்
 பூட்டப்பட்டிருக்கின்றன
 அவள் இப்போது ஒரு
 பழைய மரக் கலம்
 புதிய தேறல்களை
 கொள்ளும் போது
 அவள் குடுவைகள்
 பீறிப் போடும்
 அவளை இப்போது திறக்க
 துருப்பிடித்த சாவிகள்
 போதும்
 அல்லது
 துருப்பிடித்த சாவிகளே வேண்டும்

 கடவுளே
 அவள் ஏன் இந்தக்
 கதையைக் கேட்கத்
 தொடங்கினாள் ?
 அதுவும் முடிவில் ஒரு நீதி
 எப்போதும் உள்ள
 இந்த கேடுகெட்ட கதையை ?