சொற்கள் - யாழன் ஆதி





ஒரு சோப்புக் குமிழியின் அநித்தியத்தைப் போல
நிகழும் இந்தச் சூன்யத்தின்மீது
சேற்றைவாரி இறைக்கிறேன்
சேறு வார்த்தைகளாகியிருந்தன
துன்பத்தின் வரிகள் படிமக் கற்கள்மீதேறி
உரக்கக் கூவுகின்றன
குழந்தையின் அழுகையை நிறுத்தும்
உத்தியாய் காற்றடைத்த பலூன்களென
என் சொற்களை உருமாற்றித் தர
சிவந்த அந்த அந்தி வானத்தின்மீதேறி போகின்றன அவை
பருத்த விருட்சங்களைத் தந்த என் கானகம்
தன்நிலை மறந்து நீர்தேடி
மணல் வாரப்பட்ட என் ஆறு வந்து சேர்ந்தது
எந்திரங்களின் கரங்கள் சுரண்டிய ஆற்றைப் போலவே
உலர்ந்துபோன என் சொற்கள் மீண்டும்
மழையாய்க் கொட்டிட
கானகத்தில் பசும்புற்கள் தலைகாட்டி நிற்கின்றன
தூர்வாரப்பட்ட என் கிணற்றடியில் உள்ள
காய்ந்த மண் திட்டுகளை
குழந்தைகள் அள்ளிச் சென்று கோடைக்கால பொம்மைகளைச்
செய்ய
வெப்பத்தை உமிழும் அப்பொம்மைகளுக்கு
என் சொற்களை மேலும் ஈரப்பதமாக்கித் தந்தேன்
கலவரங்கள் முடிந்து ரத்தக்கறை
புறங்கைகளிலும் பின் மண்டையிலும் உறைந்திருக்க
வந்த மனிதனுக்கு
என் சொற்களில் அன்பை கலக்கி
குடிக்கக் கொடுக்கையில் மாலைநேரத்து
மரநிழல் இணைத்திருந்தது வேறுபாடுகளற்ற நிலத்தினை.