வானத்தில் இருந்து விழுந்த பன்றி - குமார நந்தன்ஒரே ஒரு மழைத்துளி
என்மேல் விழுந்தது.
அப்பொழுது நல்ல வெய்யிலாய் இருந்தது
அதைத் தொடர்ந்த மழைத்துளிகள் எதுவும்
விழவில்லை.
இதை நான் உலகுக்கு அறிவித்தேன்.
ஆனால் விழுந்தது மழைத்துளியாய் இருக்க முடியாது
இது மழைக்காலம் இல்லை
வானில் மழை மேகம் இல்லை
குளிர்ந்த காற்று வீசவில்லை
மேலும் அந்தத் துளி இப்போது உன்மீது இல்லை
எனவே விழுந்தது மழைத்துளியாய் இருக்கமுடியாது
என்றுவிட்டனர்
பிறகு நான்
ஒரு பன்றியைப் பிடித்துவைத்துக் கொண்டு
வானத்தில் இருந்து என்மீது
பன்றி விழுந்ததாகச் சொன்னேன்
இப்போது உலகெங்கும்
அதைப்பற்றிய
ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.