செந்தில்குமார் கவிதைகள்


முருகம்மாள்
முருகம்மாள்
களிமண் குழைத்து வீடு கட்டியிருந்தாள்
எருக்க இலை கொண்டு கூரை வேய்ந்திருந்தாள்
ஓடை மணல் பரப்பி தரையாக்கியிருந்தாள்
ஆவாரம்பூ கொண்டு தோரணம் கட்டியிருந்தாள்
மாட்டுசாணம் பிடித்து சாமி சிலை செய்திருந்தாள்
துளசிச்செடி நட்டு தோட்டம் அமைத்திருந்தாள்
நாளை பால் காய்த்து குடி புகவேண்டுமென எண்ணியிருந்தாள்
இன்று பாழாய்ப்போன காய்ச்சலால்
போர்வைக்குள் சுருண்டு கிடக்கிறாள்
வாசல் வழியே முற்றத்தை நோக்குகிறாள்
ஆட்டுக்குட்டி எருக்க இலையைத் தின்று
புழுக்கை இட்டுக்கொண்டிருந்தது
துடித்துப் போனாள் மழைவந்தால் வீடு ஒழுகுமென்று
எழும்ப முடியாமல் ஒருசாய்ந்து படுத்துக் கொண்டாள்
சிறிது நேரத்திற்கெல்லாம் குருசேத்திரப்போரின்
கடைசி நாளாய் மாறியது முற்றம்
வலது பக்க கண்ணீர் மேடேறி இடது கண்ணுக்குள் நுழைந்து
செவிக்குள் நுழைய எத்தனித்தது
நாளை வகுப்பில் மாரியிடம் என்ன சொல்வாள்?
வீட்டில் குடிபுக முடியாமல் போனதற்கு..

அந்த புருவம்

ஊருக்கு கிழக்கே சுடலைமாடனுக்கு சாத்தி வைக்கப்பட்டிருந்த
வீச்சரிவாளின் சிறுவடிவமே அந்த புருவம்

இரண்டும் பட்டை தீட்டப்பட்டிருந்தன

கோடையில் வறண்டு கிடக்கும் குளத்து கரம்பல்களுக்கிடையில்
வைக்கப்பட்ட பிளந்த வெள்ளரி பழத்தையொத்த சிரிப்பு

வெள்ளரி விதையின் பெரிய வடிவம்தான் அந்த இதழ்கள்

நகரும் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் காணக்கிடைத்த தரிசனம்
ஒரு நொடியை மூன்றாய் பிரித்தால் அதன் ஒருபாக நேரமே நீடித்தது

ஏனோ அந்த புருவங்கள் மட்டும் வெகுநாட்களாய் துரத்திக் கொண்டேவந்தன

சுடலைமாடனுக்கு வீச்சருவாள் சாத்துவதாக வேண்டிக்கொண்டேன்.

மாசிலா பாட்டி
மாசிலா பாட்டி
உறவினர் ஊர்க்காரர்
வாயெல்லாம் புன்னகையாக
சரசு மொவனாய்யா நீ என்றவாறே
எப்போது சென்றாலும் அந்த கயிற்றுக் கட்டிலில்
பிடித்து இழுத்து அமர்த்தி விடுவாள்
நான்கைந்து ரேசன் சேலைகள் விரிக்கப்பட்ட கட்டிலில்
பழைய துணிகளை மூட்டையாய் கட்டி தலையணை செய்திருப்பாள்
ஒரேயொரு மகளையும் கட்டிக் கொடுத்தபின் அந்த ஒற்றை அறை குடில்தான்
சகலமும் அவளுக்கு
மாதத்திற்கொருமுறை மகள் வந்து கொடுக்கும் பணத்தில்தான்
கஞ்சி காய்ச்சுவதாக கூறுவாள்
சேலையில் முடிந்து வைத்திருக்கும் சில நாணயங்களை தருவாள்
முட்டாய் வாங்கி சாப்பிடவேண்டி
ஆறு வருடங்கள் கழித்து
ஊருக்கு சென்றிருந்த ஒருநாளில் 
குளத்துக்கரை மேட்டில் முறிக்கப்பட்ட கட்டிலும்,நான்கைந்து ரேசன் சேலைகளும்
ஒரு துணிமூட்டையும் கிடந்தன
மாசிலா பாட்டியாய் இருக்கக் கூடாதென்ற என் எண்ணத்தை 
வீட்டிற்கு வந்ததும் பொய்யாக்கினாள் அம்மா
மீண்டும் ஒருமுறை குளத்துக்கரை நோக்கி சென்றேன்
யாரோ விறகுக்கு கட்டில் காலை உடைத்துக் கொண்டிருந்தார்கள்
எருக்கஞ்செடியில் படர்ந்து காற்றிலாடியது சேலை
ஓடிவந்து அவள் குடிசையை பார்த்தேன்
ஒரு நாய் குட்டியிட்டு முனங்கிக் கொண்டிருந்தது
மனதின் சுமை ஏனோ இரைப்பையின் வாசலையும் 
அடைத்து விட்டிருந்தது இரு நாட்களாய்..!!