நட்சத்திர இரவு - பா.வேல் முருகன்





நானும் அவளும்
மொட்டைமாடி 
பாய்மேல் 
இடைவெளியின்றி 
இடைகளது  
இணைந்திருக்க 
நட்சத்திரங்கள் 
எண்ணிக்கொண்டிருந்தோம்...

எங்களின் 
சிந்தனை கலையாதிருக்க
நிலவு ஓழித்துக்கொண்டது தன்னை 
எங்களுக்குத் தெரியாத 
வான்வெளியில் 
எங்கேயோ...

அவள் காக்கா 
என்கிற காகங்களும்  
புடா என்கிற புறாக்களும்
பேரட் என்கிற கிளிகளும் 
குயி என்கிற குருவிகளும் 
கூடடைந்து 
குறட்டை விட்டிருந்தன...

அங்கு என்னையும் 
அவளையும் தவிர 
எங்களை இணக்கமாக 
இறுக்கியவாரே  இருளும் 
சூழ்ந்து கிடந்தது...

நட்சத்திரங்களை 
எண்ணத்தொடங்கியிருந்தோம்
ஓன்று,இரண்டு என நானும் 
ஓன், டு, த்ரி, என அவளும்...
எனது எண்ணிக்கை 
நான்கினைத் தாண்டவில்லை 
அவளோ எண்ணுவதை
நிறுத்தவே இல்லை 
அவ்வளவு நட்ச்சத்திரங்கள் 
அவளுக்கு மட்டும் தன்னை 
காண்பித்துக் கொண்டிருந்தன போலும்
இயற்கை இயல்பாக 
எனது கண்ணுக்குத்
தெரிவதேயில்லை எப்பொழுதும்...

தொடர்ந்து அவளோடு 
நட்சத்திரங்கள் 
எண்ணியதில் 
அரைமணிநேரத்தில் 
என் ஆயுளில் 
ஆரம்ப நிலைக்கு 
சென்று திரும்பியிருந்தேன் நான்...

விளையாட்டை முடித்து 
வீடு நுழைகையில் 
அவளின் ஒரு கையில் 
ஒளிந்திருந்த நிலவையும் 
எனக்கு எண்ணக் கிடைக்காத 
சில நட்சத்திரங்களையும் 
நான் பார்க்கவேயில்லை.