கிணற்றைச் சுமந்து அலைபவன் -அருண் காந்தி





இதற்கு மேலும்
இந்தக் கிணற்றைச்
சுமந்துகொண்டு
அலையப் போவதில்லை
ஒரே மூச்சாய் இரைத்து
விடலாமென்றிருக்கிறேன்

ஒவ்வொரு வாளியாய்
முக்கால் கிணறுவரை
இரைத்தாகிவிட்டது
இதற்கு மேலும்
குனிந்து கிடந்து
இரைக்க மனமில்லை
இனி கிணற்றினுள்
இறங்கிச் சுமக்கத்தான்
போகிறேன்

சுவற்றோரமாய்
எட்ட எட்டப்
பதித்திருக்கும்
படிக்கற்களை
லாவகமாய்
எட்டிப் பிடித்து
ஒருமுறை சிலமுறை
இதுவரை பலமுறை
கிணற்றுக்குள் ஏறி
இறங்கிவிட்டேன்
படிகளில் தாவ
பாதங்கள் பழகிவிட்டன
வீட்டின் ஒட்டுத்திண்ணையில்
அமர்ந்திருப்பதைப் போலவே
அவ்வப்போது கிணற்றுப் படிகளில்
கால்களை ஆட்டிக்கொண்டே
இளைப்பாறிய  பின்னர்
சுமந்து செல்கிறேன்

இப்பொழுதெல்லாம்
என்னையறியாமலே
கிணற்றுத் தவளைகளோடு
பேசவும் துவங்கிவிட்டேன்
மீன் குஞ்சுகளை
கொஞ்சுவதில் எனக்கு
வெட்கமேதுமில்லை
சுவற்றோரப்
பாசிகளின்
நடனத்திற்கு
மயங்க ஆரம்பித்து
நாழிகள்
கடந்துவிட்டன

வழமை போல
இந்தப் பொழுதும்
கிணற்றினுள்ளேயே
தான் கழிந்துவிடப்
போகிறது எனக்கு
கயிற்றின் பிடியைத்
தவறவிட்டு
வாளியையும்
தொலைத்துவிட்டு
காமக் கிணற்றின்
அடியாழத்தில் நான்
என்ன செய்து
கொண்டிருக்கிறேன்?
மெதுவாய்
பெருகி வரும்
நீரில் முழுதாய்
மூழ்குவதற்குள்
எட்ட எட்டப்
பதித்திருக்கும்
படிக்கற்களை
லாவகமாய்
எட்டிப் பிடித்து
வெளியேறி
கிணற்றைச்
சுமக்க முடியாமல்
சுமந்தவாறு
இன்னமும் அலைந்து
கொண்டிருக்கிறேன்...