புலி - விநாயக முருகன்





புலி ஓவியம் வரைபவன்
ஒருபோதும்
புலியின் கண்களை
முதலில் வரைவது இல்லை
புலி ஓவியம் வரைபவன்
எப்போதும்
புலியின் கால்களிலிருந்தே
தனது கோடுகளை தொடங்குகிறான்
புலி ஓவியம் வரைபவன்
எப்போதும்
மஞ்சளும் வெள்ளையும் கலந்த  
வண்ணங்களையே முதலில் விரும்புகிறான்  
புலி ஒவியம் வரைபவன்  
அறையின் ஜன்னல்களிலிருந்து   
எப்போதும்
மஞ்சள் பிரகாசமிக்க ஒளி கசிகிறது
புலி ஓவியம் வரைபவன்
எப்போதும்
பசித்த புலியின் வயிற்றையே
வரைய விரும்புகிறான்
புலி ஓவியம் வரைபவன்
ஒருபோதும்
அவனது அறைக்குள்
மற்றவர்களை அனுமதிப்பது இல்லை  
புலி ஓவியம் வரைபவன்
ஒருபோதும்
தனது முழுமையற்ற புலியை
மற்றவர்கள் கண்ணில் காட்டுவதில்லை
புலி ஒவியம் வரைபவன்  
இறுதியாக
அதன் கண்களை வரையும்போது
அங்கு அமைதி நிலவுகிறது
பிறகு
பேரமைதி நிலவும்
அந்த அறையின் ரகசியக்கதவுகள்
ஒருபோதும் திறக்கப்படுவதே இல்லை.