மெய்ப்பாடு தொல்காப்பியம் பேசும் ஒரு கவிதைக்
கோட்பாடு. அதைப் பற்றிச் சில எளிய விளக்கங்களை பார்ப்போம்.
உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை உடலில் காட்டுவது மெய்ப்பாடு. மெய்ப்பாடுகள் கலைகளுக்கு அடிப்படை உணர்வுகளைக் கொடுப்பவை. தொடர்புச் சாதனங்கள் என்ற வகையில் எல்லாக் கலைகளும் அதை வாசிக்கும்/ரசிக்கும் ஒருவரை அடைவதையே நோக்கமாகக் கொண்டவை. இந்த நிலையில் கவிதை தான் அடைய வேண்டிய இலக்கை அடைவதற்கு மெய்ப்பாடு என்பது தேவையா அல்லது மெய்ப்பாடு அதற்குப் பயன்படுமா என்பதைப் பார்ப்போம்.
இலக்கியங்களில் மெய்ப்பாடு பற்றிப் பார்க்க வேண்டியதன் அவசியம் என்ன? மெய்ப்பாடு அதன் இயல்பில் கவிதைக்கான ஒரு உத்தி அல்ல.
பிரதானமாய் அது நிகழ்த்துகலைகளுக்கு உரியதோர் செய்கை அல்லது புலப்பாட்டு முறை. ஒரு கதை, நிகழ்வு, உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்குக் கலைஞர்கள் பின்பற்றும் முறை. இதனால் அந்தக் கலையின் வெளிப்பாடு சிறப்பாக அமையும். இதைக் கவிதையில் பயன்படுத்த முடியுமா? கவிதைக்கு இது ஏற்றதா? கவிதைக்கு மெய்ப்பாடு தேவையா என்ற கேள்விகளையும் எழுப்புவோம்.
நிகழ்த்து கலைகளில் கதை கூறும் போது பாத்திரங்களின்
உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதே முக்கியமாக இருக்கும். பாத்திரங்களின் உணர்ச்சிகளை நிகழ்த்துபவர்கள் குரல் வழியாகவும் (மொழி) உடல் வழியாகவும் (மெய்ப்பாடு) வெளிக்காட்டுவார்கள். இதன்மூலம் அந்தப் பாத்திரம் அந்தச் சூழலில் என்ன விதமான மனநிலையில் இருக்கும் என்று நாம் அறியமுடியும். இதற்குக் கதையும் நமக்கு உதவுகின்றது. எனவே கதையில் வரும் இடத்திற்கேற்ப பாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்த மெய்ப்பாடு பயன்படுத்தப்படுகிறது. இதைப் பார்க்கும் ஒரு பார்வையாளர் உடனே அந்தப் பாத்திரத்தின் மனநிலையை அறிவதுடன் பாத்திரத்துடன் ஒன்றவும் முடியும். எடுத்துக்காட்டாக ஒருவன் கோபப்பட்டான் என்பதை உரையால் சொல்லுதல் அல்லது பாடலால் வெளிப்படுத்துதல் என்ற நிலைகளுடன், அப்போது அவனுடைய உடலும் முகமும் எவ்வாறு இருந்தன அல்லது செயல்பட்டன என்று நிகழ்த்துபவர் ‘காட்டும்போது’ பார்வையாளர்களை அது எளிதில் சென்றடைகிறது, கவர்கிறது. கதை இந்தச் சூழலை அறிவதற்கு அடிப்படையாக அமைய, மெய்ப்பாடு இதை முழுமையாகக் காட்டுவதற்கும் பார்வையாளர் இதை நன்கு உணர்வதற்கும் ஏதுவாக அமைகின்றது. இது நிகழ்த்துகலைக்குத் தேவையானது மட்டுமல்லாமல் அடிப்படையானதும்கூட. நிகழ்த்துகலையில் மொழியும், மெய்ப்பாடும் ஒரு பாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்துவதில் இணைந்து செயல்படுகின்றன.
தமிழ்நாட்டில் பெருவாரியாக கல், உலோகம், மரம், சுதை முதலியவற்றால் செய்யப்பட்ட படிமங்களும் ஓவியங்களும் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை தனிநிலை அமைப்புகளாகவே உள்ளன. ஒவ்வொரு சிற்பமும் தனித்தனியானவை. ஒவ்வொரு சிற்பத்தையும் புரிந்துகொள்ள இன்னொரு சிற்பத்தின் உதவி தேவையில்லை. கதைகளைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் வகையில் தொடர் நிலையில் சிற்பத் தொகுதிகள் அமைக்கப்படவில்லை. அதாவது அவற்றின் அமைப்பைக்கொண்டு அதன் முன்பின் நிகழ்வுகளை விளங்கிக்கொள்ள முடியாது. எனவே அந்தச் சிற்பம் (அதாவது பாத்திரம்) அப்பொழுது அல்லது அந்த இடத்தில் என்ன மனநிலையுடன் இருக்கும் என்று சூழல் சார்ந்து ஊகிப்பது கடினம். ஆனால் அந்தப் படிமம் அல்லது ஓவியம் வெளிப்படுத்தும் மெய்ப்பாட்டைக் கொண்டு அதன் மன உணர்ச்சிகளை அறியமுடியும். அந்த ஒரு தனிநிலை அமைப்பின் வழியாகவே அதன் உணர்ச்சிகளை அறிய வேண்டிய சூழலில் அதைத் தெளிவாக உணரும் விதத்தில் படிமங்களை அமைத்துள்ளனர். இதற்கு அவர்களுக்கு மெய்ப்பாடு நன்கு பயன்பட்டிருக்கிறது. காதல் கொண்டுள்ள ஒரு பெண் படிமம், பெருங்கோபம் கொண்டுள்ள நரசிங்க வடிவம், அமைதியாக அருள் தரும் ஒரு தெய்வ வடிவம் முதலியவற்றைக் கண்டவுடன் நம்மால் அவற்றின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடிகின்றது. மனித உருவத்தைப் போலவே குதிரை, யானை, காளை, குரங்கு முதலிய விலங்கு வடிங்களும் அன்னம், கிளி, மயில், கருடன் முதலிய பறவை வடிவங்களும் கற்பனைப் படைப்புகளான யாளி, சரபப் பறவை வடிவங்களும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குத் தக்கவாறு உரிய மெய்ப்பாடுகளுடன் படைக்கப்பட்டிருக்கின்றன.
நிகழ்த்துகலையிலும் படிமம், ஓவியம் ஆகிய கலைகளிலும் மெய்ப்பாட்டின் அவசியத்தையும் அக்கலைகளில் இவற்றின் வழியே படைப்பாளி சொல்ல வரும் உணர்வைப் புலப்படுத்துவதில் மெய்ப்பாடு பெறும் இடத்தையும் பற்றிச் சுருக்கமாகப் பார்த்த பின்னர் கவிதைக்கு வருவோம். இந்த நேரத்தில் இலக்கியங்களில் மெய்ப்பாடு பற்றிப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? அதற்கு கவிதையில் எந்த அளவிற்கு இடமிருக்கின்றது என்ற வினாவை மீண்டும் எழுப்பிக் கொள்ளலாம்.
இலக்கியம் என்பது ஒரு படைப்பாளி தன்மனத்தில் உணர்ந்ததை மொழிவழியே வெளிப்படுத்தும் ஒரு கலை. மொழி என்பது வேறுவகைகளில் வலுவான ஊடகமாக இருந்தாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் மொழி அத்துனை வசதியானது என்று கூறிவிடமுடியாது. நிகழ்த்து கலைகளிலும் ஓவிய, சிற்பங்களிலும் நேரடியாக வெளிப்படுத்தும் பாவங்களை மொழியால் அந்த அளவுக்குக் கொண்டுவரமுடியாது. எந்தச் சூழலில், எதனால், எந்த அளவுக்குக் கோபம் வந்தது என்று கூறமுடியுமே தவிர, கோபப்பட்டான் என்பதை காட்சி வடிவில் காட்ட முடியாது.
இந்த நிலையில் கவிதையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த படைப்பாளர்கள் வேறு சில முறைகளைக் கையாளுகின்றனர். அதில் ஒன்று ஓசையை அடிப்படையாகக் கொண்டது. உணர்ச்சிகளுக்கு ஏற்பச் சந்தங்களை அமைப்பதும், வல்லின,மெல்லின, குறில், நெடில் உயிர் ஒலிகளை மிகுதியாகப் பயன்படுத்துவதும் கவிஞர்களின் கண்டடைந்த முறை.
கவிதைகளில் ஓசையைக்கொண்டு பாத்திரங்களின் மனநிலைகளை வெளிப்படுத்துவது எல்லாச் சூழல்களுக்கும் ஏற்றது அல்ல என்றாலும் பல சூழல்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.
இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைத் தரலாம். எல்லோருக்கும் நன்கு தெரிந்த எடுத்துக்காட்டுகளையே காட்டுகிறேன்.
ஆழநெடுந்திரை ஆறுகடந்திவர் போவாரோ
வேழநெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ - கங்கைகாண் படலம் 15
என்ற கவிதையில் பரதன் இராமனைக் காணவரும் நோக்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட குகனின் கோபம் அதிகப்படியான நெடில் எழுத்துகளைத் தொடர்ந்து அமைப்பதன் வழியே புலப்படுத்தப்படுகிறது.
பற்றுதிர் பற்றுதிர் என்பார்
எற்றுதிர் எற்றுதிர் என்பார்
முற்றினர் முற்றும் முனிந்தார்
கற்றுணர் மாருதி கண்டான் - இலங்கை எரியூட்டு படலம் 46
இந்தக் கவிதையில் வாலில் எரியூட்டப்பட்ட பின்னர் அனுமன் இலங்கையில் உள்ள வீடுகளின்மேல் தாவிக்குதித்து அவற்றில் தீயைப் பற்றவைக்கும் நிலையில் அவனைப் பிடிக்க வரும் படைவீரர்களின் செயல்களையும் சொற்களையும் கம்பர் கோப உணர்ச்சி வெளிப்படுமாறு படைத்துள்ளார். இதில் அதிகமாக வல்லின மெய்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக கோபத்தையும் அவர்களின் வேகத்தையும் காட்ட கம்பர் முயலுகின்றார்.
கவிஞர்கள் தம் படைக்கும் பாத்திரங்களின் மனநிலைகளை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்த தேர்ந்தெடுத்துக் கொண்ட இதைப்போன்ற மற்றொரு வெளிப்பாட்டு முறையே ஏற்ற இடங்களில் தக்க மெய்ப்பாடுகளை வெளிப்படுத்துவதாகும். அதாவது ஒரு பாத்திரம் ஒரு நிகழ்வின் போது கோபமாக இருந்தது என்று கவிஞர் பாடவேண்டிய சூழல் என்று வைத்துக்கொள்வோம். இந்தச் சூழலில் கவிஞர் செய்யுளின் ஓசைக்குத் தக்கவாறு வெகுண்டான், கோபித்தான், சினந்தான், கறுத்தான் முதலிய சொற்களுள் ஒன்றையாவது பலவற்றையாவது பயன்படுத்துவார். இதனால் பாத்திரம் சினம் அடைந்தது என்று அதை வாசிக்கும் ஒருவர் அறிய முடியும். இதற்கு மேலும் சென்று கவிஞர் சினம் அடையும்போது அவன் உடலில் தோன்றும் மெய்ப்பாடுகளையும் விவரித்தால் காட்சிகள் நம் கண் முன்னே வரும். மேலும் கவிதைக்கு உண்மைத் தன்மையையும் அது கொடுக்கும். இதற்காகவே கவிஞர்கள் மெய்ப்பாட்டைக் கவிதைகளில் பயன்படுத்துகின்றனர்
கவிதையின் தன்மையை இங்கு சற்று விரிவாகப் பார்ப்போம். கவிதை என்பது மொழியால் ஆக்கப்படும் ஒரு கலை வடிவம். ஒரு காலத்தில் ஒரு இடத்தில் ஒரு சூழலில் அக்காலத்திற்கான மொழியில் ஒரு கவிதை இயற்றப்படுகின்றது. இப்படிஉருவான கவிதையின் வாசகர் யார்? அவரைப்பற்றி கவிஞர் படைக்கும்போது எண்ணியிருப்பாரா? அப்படி என்றால் எந்தச் சூழலில் வாசிக்கும் ஒருவருக்கும் இது சென்று சேரவேண்டும் என்ற எண்ணம் கவிஞரிடம் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தாலும் கவிஞர் தன் காலத்திற்குக் கட்டுப்பட்டவர். அத்துடன் கூட மொழிக்கும் கட்டுப்பட்டவர். ஒரு கவிஞரால் எல்லாக் காலத்திற்கும் ஏற்ற மொழியில் கவிதை இயற்ற முடியாது. எனவே, தான் இயற்றும் கவிதையின் வாசகர் யார் என்று அறியாத நிலையிலேயே எழுதுகின்றார். மிகவும் வலுவாகத் தன் கவிதைகளை எல்லா விதங்களிலும் புரியவைத்து யாவரையும் ஈர்க்கும் வண்ணமாகவும் அமைக்க வேண்டியது கவிஞரின் கடமை.
இனி வாசகருக்கு வருவோம். ஒரு கவிதையை வாசிப்பவரால் இதன் ஆசிரியர் எந்தச் சூழலில் என்ன மன ஓட்டத்தில் இதை இயற்றியிருப்பார் என்று உணர முடியாது. அந்தக் காலத்து மொழியின் தன்மையையும் முழுவதும் உணர முடியாது. ஏனென்றால் இவர் வசிக்கும் உலகம் வேறு. கவிஞர் சொல்ல நினைத்தது அவரது மொழி வழியாக மட்டுமே வாசகரை வந்து அடைகின்றது.
படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையில் உள்ள இடைவெளியை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். இது ஒரு ஆண்டாகவும் இருக்கலாம், ஒரு நூற்றாண்டாகவும் இருக்கலாம் ஓராயிரம் ஆண்டாகவும் இருக்கலாம். அதற்கு மேலாகவும் இருக்கலாம். இந்த இடைவெளியைக் கடந்து கவிதை ஒரு வசகனிடம் வந்து சேருகின்றது. அப்போது வாசகன் தான் வாழும் சூழலில், தான் அறிந்த மொழியைக்கொண்டு, தான் வாழும் சூழலின் கவிதையியலைக்கொண்டு வேறு எதோ ஒரு சூழலில், காலத்தில் இயற்றப்பட்ட கவிதையை விளங்கிக்கொள்ள முயல்கின்றான். இந்த இரண்டிற்கும் இடையே பாலமாகத் திகழ்வது மொழி மட்டுமே. மொழிவழியாகத் தான் அடைந்த கவிதையை வாசகன் தன் காலத்தைக் கடந்து சென்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது. இந்த இரண்டு காலங்களுக்கிடையே மொழியிலும் கலையைப் புரிந்து கொள்வதிலும் கலையின் அடிநாதம் எது என்பதிலும் பெருத்த வேறுபாடுகள் தோன்றியிருக்கும். எனவே கடந்த காலக் கவிதையைத் தன் காலத்திய அழகுணர்ச்சியுடன் புரிந்துகொள்ளும் வாசகனுக்குப் புரியவைக்கும் பெரும் கடமை படைப்பாளியின் முன்னர் உள்ளது.
இங்கே படைப்பு என்பதை இப்படி விளங்கிக்கொள்ளலாம். ஒரு படைப்பாளி படைப்பைத் தன் மனத்தில் கற்பனையாக உருவாக்கிக்கொள்கிறான். காட்சிகளாக அவை படைப்பாளியின் மனத்தில் தோன்றுகின்றன. தான் கற்பனையில் கண்டதைத் தன்னுடைய படைப்புத் திறன் (ஆளுமை) வழியே, தனக்கு உரிய ஊடகத்தின் வழியே வெளிப்படுத்துகிறான். இந்த ஊடகம் சிற்பிக்கு கல், மண், உலோகம், மரம் முதலியனவாகவும், ஒவியனுக்கு சுவர், வண்ணம் முதலியனவாகவும், கவிஞனுக்கு (சொற்களாலான) மொழியாகவும் இருக்கும். நிகழ்த்துகலைப் படைப்பாளிக்கு இது நேரடியான காட்சி ஊடகமாகவே அமையும். ஆகவே தன் மனத்தில் தோன்றும் கற்பனையைப் படைப்பாளி தன்னுடைய திறன் வழியே வெளிப்படுத்தியதே கலை வடிவங்கள். இவற்றில் நேரடிக் காட்சி ஊடகமான நிகழ்த்துகலை வடிவங்கள் மிகவும் வலுவான ஊடகமாகத் திகழ்வதை அனைவரும் அறிவோம். காலங்கள் கடந்தாலும் அழியாமல் நின்று புன்னகை புரிந்துகொண்டிருக்கும் படிமங்களும் ஓவியங்களும் கூட வலுவான ஊடகங்களாலேயே உருவாக்கப்பட்டவை என்பதும் நாம் அறிந்ததே.
தொடர்புச் சாதனம் என்ற வகையில் இவற்றுடன் போட்டியிடும் மொழி சற்றுப் பின்தங்கியதாகவே தெரிகின்றது. தான் எடுத்துகொண்ட ஊடகம் மற்ற ஊடகங்களிலிருந்து சற்று வலுக்குறைவானதாகவே இருப்பதால் மொழிவழியே படைப்பை வெளியிடுவதில் கூடுதல் சுமை ஏற்படுகின்றது என்பதையும் கவிஞர் நன்கு உணர்ந்துள்ளார். எனவே காலம், தொலைவு ஆகிய இடைவெளிகளைக் கடந்து செல்ல வேண்டிய படைப்புகளைப் படைக்க நினைக்கும் படைப்பாளி, தன்னுடைய பொறுப்பை நன்கு உணர்ந்த நிலையில் வாசகனிடம் அழுத்தமான தொடர்பை மொழிவழியே ஏற்படுத்தும் விதமாகப் படைப்பை ஆக்குகின்றார். இதற்கு அவருக்கு மிகவும் உதவுவதாக இருப்பது தன்னுடைய கற்பனையைக் காட்சிப்படுத்துவதே ஆகும். கற்பனையை ஏன் காட்சிப்படுத்த வேண்டும்? என்று கேட்கலாம். காட்சிப்படுத்துவதே வாசகனிடம் தான் நினைத்ததை கொண்டு சென்று சேர்ப்பதற்குக் கவிஞருக்கு உள்ள வலுவான வழியாகும். காட்சிப்படுத்த வேண்டுமானால் கவிஞர் தன் மனத்தில் நிகழ்வதை மொழியால் வரைந்து காட்ட வேண்டும். கவிதை என்பது வண்ணங்களும் கோடுகளும் இல்லாத ஓவியம். இவ்வாறு தீட்டப்படும் நிலையிலேயே கவிதை வாசகனிடம் தான் உண்டாக்க வேண்டிய பாதிப்பை ஏற்படுத்தும். அதற்காகக் கவிஞர் தான் கண்ட கற்பனையை மொழிக்கு மாற்றுகிறார். அவ்வாறு மாற்றுவதற்கு அவருக்குக் கைகொடுப்பதாக இருப்பது மெய்ப்பாடு.
கண்ட காட்சியை அப்படியே சொல்வதற்கு என்ன செய்யவேண்டும் என்பது கவிஞருக்குத் தெரியாமலா போகும்? பாத்திரங்களின் மன உணர்வுகளை உடலில் காட்டுவதே இதற்கு ஏற்ற சரியான வழி. இதையே நாம் மெய்ப்பாடு என்கிறோம். சற்று நீண்டுவிட்ட இந்த விளக்கத்தை இத்துடன் நிறுத்திவிட்டு இதை எடுத்துக்காட்டு வழியாகப் பார்க்கலாம். பின்வரும் செய்யுள் நல்ல எடுத்துக்காட்டு.
விழுதல், விம்முதல், மெய்யுற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயருழந்து உயிர்த்தல்,
அழுதல், அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் - கம்பராமாயணம், காட்சிப்படலம் 5
இலங்கையில் சிறைவைக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அனுமன் வழியே இராமனின் கணையாழியைப் பார்க்கும் சீதையின் மனநிலையையும் அவளது மெய்ப்பாடுகளையும் கம்பர் இந்தக் கவிதையில் காட்டுகின்றார். இந்தச் சொற்களுக்குப் பொருள் கூறவேண்டியதில்லை. இவை பொருளையும் கடந்து சீதையின் மனநிலையைச் செயல்களின் வழியே உணர்த்தும் சொற்கள்.
முன்பு சொன்ன. காலம், இடம் ஆகிய இடைவெளிகள், மொழியின் தொடர்புத் திறன் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு இந்தச் செய்யுளை வாசிக்கலாம்.
இது சீதையின் மனநிலையை அவளது செயல்களின் - அதாவது மெய்ப்பாடுகளின் வழியே ‘காட்டுதல்’ என்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே செய்யுளில் இவ்வளவு மெய்ப்பாடுகளையும் காட்டி வாசிப்பவர்களைச் சீதையின் மனநிலையை உணரும்படிச் செய்கின்றார் கம்பர். மெய்ப்பாடுகளின் வழியே மனநிலையைக் காட்டுதல் இரண்டு வழிகளில் கவிதையைச் செழுமையாக்குகிறது. 1 இந்த மெய்ப்பாடுகளின் வழியே சீதையின் மனநிலையை வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்ளுதல். 2 இப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்று உய்த்துணர வைத்தல்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு சூழலில் ஒரு கவிஞரால் இயற்றப்பட்ட ஒரு கவிதை இன்றும் நம்முடைய மனத்தைத் திறந்து ஒரு காட்சியைக் காண வைப்பதை நம்மால் அறிய முடிகின்றது. இந்தக் கவிதையில் உள்ள சொற்களின் பொருளையும் அறிந்துகொள்ளும்போது நாம் பல இடைவெளிகளைக் கடந்து கம்பரிடம் சென்றுகிடுகிறோம். இதுவே கதைதைக்கு மெய்ப்பாடு அவசியமாக வேண்டும்என்தை நமக்குத் தெரிவிக்கப் போதுமானது என எண்ணுகிறேன்.