160 பக்கங்கள் கொண்ட பத்மநாபபுரம் அரவிந்தனின் “விரிசலுக்குப்
பிறகு” சற்றே பெரிய தொகுப்பு. ஒரு ஐம்பது கவிதைகளையாவது குறைத்திருக்கலாம். ஆனால் நாம்
முப்பது வருடங்களாய் எழுதியதை தொகுக்கும் போது ஆரம்பத்தில் எழுதிய கவிதைகளை விட்டு
விட தயக்கம் இருக்கும். இது போக நாம் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய நல்ல கவிதைகளும்
இத்தொகுப்பில் உள்ளன. புத்தகத்தை வம்சி பதிப்பகம் பதிப்புத்துள்ளது. ஒரு பழங்கால வீட்டு
மூலையில் இருக்கும் உறியின் படம் முகப்பாக உள்ளது. அரவிந்தனின் கவிதைகளின் தொனியை இப்படம்
அழகாக தொட்டுக் காட்டுகிறது. சிதிலமடைந்த பழங்காலத்து பரம்பரை வீடு, மதிப்பிழந்த நாயர்
பாரம்பரியம், சரியும் சமூக அந்தஸ்து, இதன் இழப்புணர்வு, விரக்தி இவையெல்லாம் அவர் கவிதைகளின்
அடிநாதமாக உள்ளன.
“வலிய வீடு” நான் மேற்சொன்ன விசயத்துக்கு
நல்ல உதாரணம். ஒரு அழிந்து வரும் குடும்ப வீட்டின் அங்கதமான சித்திரத்தை இக்கவிதையில்
அளிக்கிறார். அவ்வீட்டில் வளர்ந்து வரும் கவிதைசொல்லி மூன்றாம் தலைமுறை. அவனுக்கு தன்
அப்பாவும், தாத்தாவும் கதைத்த வீட்டின் பெருமிதங்கள் வேடிக்கையாக அந்நியமாக உள்ளன.
அவன் அதை சிதைவுடன் வாழப் பழகி அதை ரசிக்கவும் தொடங்குகிறான். அடூரின் “எலிப்பத்தாயத்தின்”
ஒரு நிழல் இக்கவிதையில் உள்ளது. இதே விசயத்தை இன்னும் உக்கிரமான நினைவேக்கத்துடன்,
கழிவிரக்கத்துடன், நாடகீயத்துடன் ஜெயமோகன் தன் “பல்லக்கு” கதையில் சித்தரித்திருப்பார்.
இந்த நினைவேக்கம், இழப்புணர்வு
ஆகியவற்றை அரவிந்தனைப் போன்ற கவிஞர்கள் கடந்த சில பத்தாண்டுகளில் சமூகத்தில் ஏற்பட்ட
படிநிலை குலைவினால் இன்னும் உக்கிரமாக கூர்மையாக உணர்கிறார்கள். குறிப்பாக குமரி மாவட்டத்தில்
நாயர்கள் ஒரு காலத்தில் ஒடுக்கி வந்த நாடார்கள் இன்று கண்டுள்ள எழுச்சியும், நாயர்களின்
தளர்ச்சியும் ஒரு பதற்றத்தை, பாதுகாப்பின்மையை நாயர்களுக்கு ஏற்படுத்தியது. இது அரவிந்தனிடம்
நுணுக்கமாக வெளிப்படுகிறது. அவர் தொடர்ந்து சமூக மற்றும் குடும்ப உறவுகளில் உள்ள சமநிலை
குலைவை பற்றி பேசுகிறார்.
“பெயர் சொல்லியழைத்தால்
போதுமென்கிறாய் நீ உன்னை
உன் ஆளுமையின் நீட்சி
வியப்பாய் என்னுள் விரிகையில்
பெயர் சொல்லி அழைப்பதை
தானாக மறுக்கிறதென் மனம்” (அழைப்பு,
பக்.30)
சட்டென சமூக அடுக்கில் மேலேறி
விட்ட ஒரு பழைய நண்பனை சார் என அழைப்பதா பேர் சொல்லி அழைப்பதா? இந்த குழப்பத்தை முப்பது,
நாற்பதுகளில் உள்ள மத்திய வர்க்கத்தினர் சந்தித்திருப்பார்கள். உயரதிகாரி என்றால் சார்
என்று தான் அழைக்க வேண்டும். திடீரென முக்கிய பதிப்பாளர் ஆகி விட்ட ஒரு எழுத்தாளனை
அல்லது வாசகனை ஒரு எழுத்தாளன் புது மரியாதையுடன் தான் அணுக வேண்டும். இதையெல்லாம் நாம்
மிக இயல்பாக செய்து கடந்து விடுகிறோம். நமக்குள் சங்கடங்களோ முரண்களோ அப்போது எழுவதில்லை.
மனம் சட் சட்டென ஒரு நாடகக் காட்சிக்குள் நுழைந்து தன்னை ஒரு பாத்திரமாக்கி நடிக்கிறது.
இதை “அவனும் நானும்” எனும் கவிதை சொல்கிறது. ஒரு நண்பன் பணக்காரனாகி ஊருக்கு வருகிறான்.
இன்னொரு நண்பன் டீ மாஸ்டராக இருக்கிறான். பழைய நண்பனின் பதிவிசான தோற்றத்தை கண்டதும்
இவன் அதிராமல் இருக்கிறான். வாயிலுள்ள பீடியை அகற்றாமல் நண்பனை நோக்கி கேட்கிறான்:
“டீ ஸ்டாங்கா லைட்டா?”. இந்த உளவியல் அழகானது.
“மாறும் நிலை” ஒரு கப்பலில் நடக்கிறது
(பக்.47). சிகரெட் பஞ்சம். ஒரு கீழ்நிலை பணியாளனிடம் சிகரெட் கையிருப்பு உள்ளது. அதனால்
அவனுக்கு சட்டென மதிப்பு உயர்கிறது. கேப்டன் கூட அவனிடம் அன்பாக மரியாதையுடன் பழகுகிறார்.
பின் பயணம் முடிந்து சிகரெட் பஞ்சம் தீர்ந்ததும் அவன் மீண்டும் கீழ்த்தட்டுக்கு தள்ளப்படுகிறான்.
இந்த படிநிலை உயர்வின் பாலான பகடி மேலே இருந்து சில படிகள் கீழே வந்தவனின் ஒரு கோபச்சிரிப்பும்
தான். “கோமறத்தாடியின் மறுநாட் கவலையும்” இது போல் ஒன்று தான் (பக்.104) கோமறத்தாடி
எனும் சாமியாடி வருடத்துக்கு ஒருமுறை வரும் திருவிழாவில் திடீரென பிரத்யேக அந்தஸ்து
பெறுகிறான். குடித்து போதையில் ஆடி சன்னதம் பெற்று துள்ளுகிறான். அவனை பிடித்தடக்க
யாராலும் முடியாது. அன்றவனுக்கு சாப்பிட நல்ல கறிச்சோறு வேறு. ஆனால் அடுத்த நாள் முதல்
அவன் மீண்டும் மதிப்பிழப்பான். வேலையின்றி கோயில் திண்ணையில் உடலை தேய்த்துக் கொண்டு
இருப்பான். ஊர்க்காரர்களுக்கு வேடிக்கை இலக்காவான். அவர்கள் சொல்வார்கள்:
“சும்மா கோவில்ல கெடந்து எளவெடுக்காமே
எதாவது சோலி மையிருக்கு போவும்
ஓய்”
இப்படி அரவிந்தன் சாதிய கட்டுமானக்
குலைவின் கசப்பில் இருந்து உறவுகளின் சமநிலை குலைவுக்கு வந்து சேரும் பயணம் சுவாரஸ்யமானது.
ஏனென்றால் விக்கிரமாதித்யனில் போல சமூக வருத்தம் இவரிடம் வெளிப்படையாக இல்லை. “வலிய
வீடு”, “யாழ் இழந்த பாணன்” மற்றும் வீடு பற்றின குறிப்புகள் வரும் பல்வேறு கவிதைகளில்
இருந்து உறவு பற்றின கவிதைகளை முடிச்சிடும் போது தான் நாம் இதை கவனிக்க முடியும். நாம்
ஒருவிதத்தில் அவரிடம் விக்கிரமாதித்யனும் கலாப்ரியாவும் இணைவதைப் பார்க்கிறோம். நாயர்களைப்
போன்றே வெள்ளாளர்களும் கடந்த சில பத்தாண்டுகளில் தம் சமூக அந்தஸ்தை இழந்தவர்கள் தானே!
அவர்களும் நவீன கவிதையில் அந்த பதற்றத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
“நட்சத்திரங்களைப் பிடித்து
நெற்றிப் பொட்டு வைப்பேனென்று
சொல்ல மாட்டேன்
பக்கத்துக் கடையில்
ஒட்டுப் பொட்டு வாங்கித் தருவேன்…
இவையெல்லாம் சம்மதமெனில்
தொடர் உன் காதலை என்னுடன்”
எனும் அரவிந்தனின் கவிதை ஒரு கலாப்ரியா
முத்திரை உள்ள கவிதை. கலாப்ரியாவின் அதே கசப்பும், சுயநிராகரிப்பும், ஏமாற்றத்தை எதார்த்தமென
ஏற்கும் இரக்க உணர்வும் கொண்ட சில பிரிவுக் கவிதைகளை நினைவுபடுத்தும் வரிகளையும் இவரும்
எழுதியிருக்கிறார். அதனால் தான் நமக்கு இத்தொகுப்பை படிக்கையில் எழுபதுகளின் கவிதைகளை
தூசு தட்டி உதறி பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இது இன்னொரு தலைமுறையின் கவிதை.
இன்னொரு தலைமுறையின் பதிவு.
”வலிய”, “சுவாசகோசம்” போன்ற மலையாள
கொச்சை கொண்ட ஒரு தமிழில் அரவிந்தன் எழுதுகிறார். அப்போதெல்லாம் இவர் கலாப்ரியா வகையில்லை
ஒரு குமரி மாவட்ட எழுத்தாளர் என நமக்கு தோன்றுகிறது. குமரி மாவட்ட சமகால எழுத்தாளர்களின்
சில போக்குகளை இவரிடமும் பார்க்கிறோம். குமரி மாவட்ட கவிஞர்களான என்.டி ராஜ்குமார்
தொடங்கி ஜெயமோகன், குமார செல்வா போன்ற புனைவெழுத்தாளர்களிடமும் உறவுகளின் அதிகாரம்
மீதான ஒரு பகடியை பார்க்கலாம். பரஸ்பரம் வாருவதும், தாக்குவதும் சேர்ந்து தான் அப்பகுதியில்
மக்களிடையே நட்பும் பிற உறவுகளும் உருக்கொள்கின்றன. அது கொஞ்சம் கேரளத் தன்மை கொண்ட
ஒரு பண்பாடு. இதை “நெளிந்திறங்கும் சாத்தான்” கவிதையில் காண்கிறோம் (பக்.68). சற்றே
வயது கூடின நண்பர். குடி போதையில் அவரிடம் கவிதைசொல்லி தகாத வார்த்தைகளை சொல்லி விடுகிறான்.
அடுத்த நாள் குற்றவுணர்வுடன் அவரைப் பார்க்க செல்கிறான். மன்னிப்பு கேட்கிறான். அவர்
சட்டென கோபமாகி:
“நீ என்னடே…பெரிய இவனா?
தண்ணிய போட்டுட்டு
சொல்லுறத சொல்லிட்டு
மன்னிப்பு கேக்குறியா…நாய்ப்பயலே”
என்கிறார். பிறகு இருவரும் மீண்டும்
மாறி மாறி திட்டிக் கொள்கின்றனர். ஆனால் அடுத்த நாள் மீண்டும் சமாதானமாகி தண்ணியடிக்க
உட்காருவார்கள் என சொல்ல வேண்டியதில்லை. இப்படி சமநிலை குலைந்தும் பிற மீண்டும் சமநிலை
கொண்டும் இந்த உறவு அலைகழிந்தபடி இருக்கும். அப்படித் தான் இருக்க முடியும். அது தான்
அம்மண்ணின் இயல்பு.
“உதிரும் சிறகுகளின் இறகுகள்”
போன்ற கவிதைகளில் ஊர் பற்றின நுட்பமான சித்தரிப்புகள் வருகின்றன (பக் 74).
“அறுவடைக் காலங்களில் தெருவெங்கும்
கதிரடிப்பும் மாடுகளின் மணி ஒலியும்
உலர்த்தும் வைக்கோல் மேல் உடலரிக்க
சொறிந்தபடி விளையாட்டு”
ஆகிய வரிகளை ரசித்தேன்.
“ஓர் இறக்கைக் காகம்” போன்ற கவிதைகளில்
வாய்மொழி தொன்மங்களை திரும்ப சொல்லும் பாணியை பார்க்கிறோம். இதுவும் குமரி மாவட்ட எழுத்தின்
ஒரு தனித்தன்மை தான் (பக்.87).
இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த
கவிதை “மாலை மழை” (பக்.157). மாலை நேர மழையில் “பெருகியோடிய தண்ணீரில்/ போகுமிடம் தெரியாமல்/
சுழல்கின்றன குப்பைகள்”. பறவைகள் ஈரமாகி கூட்டைத் தேடி விரைகின்றன. பழைய பேப்பர் பொறுக்குகிறவனின்
மொத்த பொருளும் ஈரமாகி வீணாகிறது. குழந்தைகள் காகிதக்கப்பல் செய்து தரக் கேட்டு சிணுங்குகின்றன.
உதிர்ந்த பூக்கள் நீரில் மிதக்கின்றன.
“ஒழுகும் குடிசையை
அண்ணாந்து பார்க்கிறார்கள் பலர்
பால்கனியியில் அமர்ந்து
மழை ரசித்து
ருசிக்கிறானவன்”.
இப்படி பலவிதமான வாழ்நிலைகள் மழையில்
ஒன்று கூடி வருகின்றன. மழை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கிறது. ஒருவன் எந்த கவலையுமற்று
மது அருந்துகிறான். மழை இவர்கள் அத்தனை பேருக்கும் வெளியே ஒரு தனி இருப்பாய் உள்ளது.
மழை வாழ்க்கையை தீண்டாமல் வெளியே இருக்கிறது எனும் ஒரு காட்சி இக்கவிதையில் தோன்றுகிறது.
ஒரு அபூர்வமான மனநிலை இது. இது போன்ற ஒரு மனநிலையை அவர் இக்கவிதையில் மட்டுமே அடைகிறார்.
இக்கவிதை அவரது பிற கவிதைகளில் இருந்து உதிரியாக தனித்து நிற்கிறது. இது தொகுப்பின்
இறுதிக் கவிதையும் கூட. அரவிந்தன் இக்கவிதையில் இருந்து தான் தனது அடுத்த பயணத்தை துவங்க
வேண்டும் எனத் தோன்றுகிறது.