எ.கிருஷ்ணகுமார் கவிதைகள்












எஸ்கலேட்டருகளில் கால் வைக்க பயப்படுபவர்களின் சாதனை


பஸ் கிடைத்தது மதியவேளையில்
தான்

மடிப்புப்பை சன்னல்
தூக்க பொழிந்து வீசிய
கிரண வெம்மையை எரிக்க ஆரம்பித்தது
குழந்தை

கத்தி பீறிட்டு அழுகின்ற
போது
வண்டி நகர நகர சில்லு காத்து
அடிக்குமென உதட்டைக் குவித்து
நெற்றியில் ஊதுகிறாள்
அம்மா

பிடரி வியர்வையும் வாயோரமாக விழும்
நீரும்
சீலை முனைப்போடு பதிகிறது

அம்மாவுக்கும் அவளுக்கும்
ஒரே இலை
விருந்தில்

தனக்கு வந்த கறித்துண்டை
பொடியெலும்புகளற்றி
பக்கத்து இலைக்கு மாற்றுகிறார்
அப்பா

அப்போது
சில நூறு வருட யுத்தத்தின் வளர்ச்சி
குறித்த
செய்தித் தாளின் அறிக்கையை மடித்து
பக்கத்தில் விசிறியபடி
இருப்பவரிடமிருந்து
தகவலறிக்கை
காற்றில் மறைய ஆரம்பித்தது
ஒவ்வொரு விசிறலுக்கும் ஒரு சொல் வீதம்
சொற்கள் உருகி உருவமில்லாது
அழிகிறது
ஆச்சர்யப்படவென ஒன்று மட்டும் இங்கு இருக்கிறது
நகர எஸ்கலேட்டருகளில் காலிருத்தவே
பதறும் இவர்களைப் போன்றவர்களால் மட்டும்
எப்படி ஒரு
போரைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததென்று
------------------------------------------------------------------


ஒரே ஆள்

காட்டமாக
கழுத்திறுக்கிப்
புணர்ந்தவன் ஜோப்பிலிருந்த காசெடுத்து
ஆகாரகாரியமாக கோயிலுக்குச் செய்கிறான்.
பெரியவர்களிடம் எட்டாங்கமாய் வணங்குகிறான்.
குழந்தைகளை நெருங்கி அன்பு பழகுகிறான்
சத்தம் வெளிக்கேளாதபடி குசு விடுகிறான்
மனைவியின் வீட்டில் பவ்யம் காட்டுகிறான்
நண்பனுக்கருகில் பொய் பகிர்கிறான்
குளுமையோடு குடிப்பவன்
காய்ந்துபோன சோடாவில் கலந்து குடிக்கிறான்
அந்தரங்கமாக மறைத்த ஒரு பாடலை
மெல்லிய ஒலி வைத்துக் கேட்கிறான்
அன்று இரவே
படுக்கையில் கழுத்தணைத்துக்
கத்தாதபடி புணருகிறான்

----------------------------------------------------------------


பொடிசுகளின் நட்சத்திரங்கள்

சிகப்பாய்
பிளாஸ்டிக் நட்சத்திரத்துக்குள்
குண்டு பல்பின் ஒளி
அதை பிறையின் நடுவே
வைக்கும் ஒரு சிறுவன்
பிளாஸ்டிக்கை எடுத்து சுவரில் தொங்கவிட்டுக்கொண்டிருந்தாள்
ஒருத்தி
அருந்ததியாய் யாரோ பார்த்ததாக
அவன்
அந்த தொங்கும் நட்சத்திரத்தை சொல்கிறான்

மூவரும்
ஒரே நட்சத்திரத்தின்
போதாத
வெளிச்சத்தில் கண்ணுறை மாற்றி
தேடிப்பிடித்துக்கொள்கிறார்கள்