ஒரே கேள்வி - பா.சரவணன்


எவருடைய ஆவிகளை
மேகமாகக் காலில் தூக்கி
எங்கே போகிறது காகம்?
தற்கொலை செய்துகொண்ட மோகன்
ஆவியானால்
யாரைத் தேடிப் போவான்                                          ப்ரியாவா நிர்மலாவா?
ஆத்மாநாமின் பேனா
என்ன ஆகியிருக்கும்?
எல்லாம் அவிழ்க்கத்தான் என்று
கவிதை எழுதியவள்
செல்வியா சிவரமணியா?
மருத்துவர் சொன்ன மாத்திரைகளை வாங்கி
போட்டுக்கொள்ளாமல்
கழிவறையில் போட்டு நீரூற்றுவது
வாழ்வா தற்கொலையா?
தன் நிழலையே  தின்று பெருத்துக்கொண்டிருப்பது
மரணமில்லாப் பெருவாழ்வா?
கனவில் வரும் முதலைகளைக்
கொல்லவா தாண்டிச் செல்லவா?
சாகக்கிடப்பவனை                                                                                                         முத்தமிட்டு உயிரூட்டி
துடிக்கவிட்டுச் செல்வது
வாழ்வின் கருணையா குரூரமா?