நினைவில்லாத இடத்தில்
அவளை நினைத்து
அலைந்துகொண்டிருந்தேன்
நெடுங்காலம்
சோர்ந்து ஒரு மரத்தின் அடியில்
அமர்ந்து தூங்கிப்போன என்னை
எழுப்பினாள் அவள் மூச்சுக் காற்றால்
கண்ணீரைத் துடைத்து என்னை
உச்சி மோந்த அவள்
ஆச்சரியமாய் கேட்டாள்
“ நீ மட்டும் எப்படி
இன்னும் இளமையாய் இருக்கின்றாய்” என்று
“கவாபத்தா படித்ததில்லையா நீ”
என்றேன்
திருதிருவென விழித்தவளிடம்
“அகால மரணம் அடைந்தவர்கள்
அதே வயதிலேயே இருப்பார்கள்” என்றேன்
கலகலவென சிரித்தவளை அணைத்தபடி
பறந்து
மலைக்குப் பின் மறைந்தோம்
எங்கும் எதிரொலித்தது
எங்கள் சிரிப்பு