அந்த
பிரம்மாண்ட
ஷாப்பிங் மால்
என்னை ஒருபோதும்
அழைத்ததில்லை...
பெருநகரத்தின்
நெருக்கடியில்
அதன் ஓயாத
இரைச்சலில்
வேரெங்குமே
உட்கார இடம் கிடைக்காமல்
நானாகத்தான் அந்த
மாலுக்குள் நுழைந்தேன்...
உள்நுழைந்ததுமே
என் வியர்வையின்
நெடி
சில கணங்களில்
காணாமல்போனது...
குழந்தையின்
கன்னத்தையொத்த
வழவழப்பான
தரையில்
நடக்கத்
தெரியாமல்
வழுக்கிவிட்டு
நேரே போய்
ஒரு ராட்சதனின்
காலடியில் விழுந்தேன்...
ஆம்
காலி பிளாஸ்டிக்
குப்பிகளால் ஆன
ஆகப் பெரிய
ராட்சதன்...
மாலின்
நடுப்பகுதியில் நிற்கவைத்திருந்தார்கள்...
அவனின்
பளபளக்கும் பிளாஸ்டிக்
முகத்தில்
வழிந்து
கொண்டிருந்த எச்சில் சிரிப்பில்
‘கிலி’
பிடித்துப் போய்
தலைதெறிக்கத்
திரும்பி வந்தேன்...
திடுக்கிட்டு
எழுந்த ஒரு இராத்திரியின்
நிசப்தமான
இருட்டில்
ஷாப்பிங்
மாலுக்குள்
அந்த ராட்சதன் நடமாடிக்கொண்டிருக்கும்
ஓசை கேட்டது...!