தமிழில் நவீன வடிவில் ரொமாண்டிக்கான
கவிதைகளை எழுதியதில் முன்னோடி கல்யாண்ஜி. அந்த பாணியின் சிறந்த சாதனை என முகுந்த் நாகராஜனின்
கவிதைகளை சொல்லலாம். குழந்தைகள், பயணம், பயணத்தின் போது பார்க்கும் மனிதர்களின் சன்னமான
நெகிழ்ச்சியான பக்கங்கள், விளையாட்டு, இயற்கை சிலாகிப்பு என இவ்வகை கவிதைகளின் தடம்
பே வாட்சில் பமீலா ஆண்டர்ஸன் ஓடி வருகிற வெதுவெதுப்பான மென்மையான வெண்மணல் போன்றே இருக்கும்.
இதே குழந்தைகளின், பயணத்தின், அன்றாட தருணங்களின், விளையாட்டின், இயற்கையின் ஒரு கசப்பான,
குரூரமான, சிக்கலான பக்கத்தை நவீன கவிதை பேசும். தமிழ்க் கவிதையின் ஒரு பக்கம் மல்லிகைப்பூ,
அல்வா ஏந்திய கை என்றால் இன்னொரு புறம் கத்தியும், தூக்குக்கயிறும், மோட்டுவளை சிந்தனையும்
இருக்கும். இரண்டுமே சேர்ந்து தான் கவிதையை பூர்ணமாக்கும். ரொமாண்டிக்கான நவீன கவிதைக்கும்
ஒரு முக்கியத்துவம் உண்டு. அது நம்மை சிரிக்கவும் சிலிர்க்கவும் மெல்ல நெகிழவும் தூண்டும்.
கே.ஸ்டாலின் வனமிழந்த கதை தொகுப்பில் அப்படியான
கவிதைகள் பல உள்ளன.
ஸ்டாலின் முகுந்த் நாகராஜனுக்கு
முன்னரே பிரசுரிக்க ஆரம்பித்தவர் என்றாலும் முகுந்தின் உளவியல் ஆழம் இவருக்கு இல்லை.
முகுந்த் தன் கவிதைகளில் ஒரு சித்திரத்தை வேகமான கோடுகள் இழுத்து சட்டென உருவாக்குவார்.
பிறகு அங்கிருந்து ஒரு தாவல் இருக்கும். ஒன்று மற்றொன்றாக மாறும். அது அவர் கவிதைக்கு
ஒரு தனி பிரகாசம் அளிக்கும். ஸ்டாலின் இதே பாணியில் ஒரு அழகான காட்சியை உறைய வைக்கிறார்.
ஆனால் உறைய வைப்பதோடு நின்று போகிறார். இது அவரது பலவீனம். அபிமன்யுவைப் போல் அவர்
சக்கரவியூகத்தை உருவாக்க சமர்த்தர்; ஆனால் அதை உடைத்து வெளிவரத் தெரியாது.
முகுந்த் பாணியிலான இந்த கவிதையை
பாருங்கள்:
தேர்வுக்கு
பின்பான தேர்வு
தேர்வெழுதிய
பின்
வினாத்தாளை
புரட்டியபடி
தோழியுடன்
விவாதித்துச்
செல்லும் சிறு பெண்
வழியெங்கும்
விடைகளை
இறைத்துச்
செல்கிறாள்.
அவளின்
பின்புற துப்பட்டாவை
அலைவுறச்
செய்யும் காற்று
அவற்றை
திருத்திச் செல்ல
சிரிக்கும்
கண்கள் கொண்ட
முகங்களை
பொன்னென
ஒளிரச்
செய்யும் அந்தி வெயில்
நூறு
சதம் சரியென ஓத
சிறுநகர
வீதியொன்றில் நிகழும்
இவ்வெளிய
காட்சியைக்
காலத்தின்
பக்கங்களில்
தேர்ச்சியுற்றதாய்
பதிவு
செய்கிறார் கடவுள்
இந்த கவிதையை நீங்கள் எளிதாக அதிகமாய்
கண்ணை கசக்காமல் படித்து விடலாம். இது அவரது ஒரு பலம். அது போல் ஒரு பள்ளி மாணவி பரீட்சை
முடித்து கேள்விகளை கைகளை வீசி விவாதித்து செல்வதும், அவள் துப்பட்டா பின்புலம் அலைவுறுவதும்
உங்கள் கண்முன் சட்டென வந்து தோன்றுகிறது. இப்படி துல்லியமான சித்திரத்தை தோற்றுவிக்கும்
ஒரு திறன் ஸ்டாலினுக்கு உள்ளது. அடுத்து இப்பெண்ணின் நாடகீயம், அதன் அன்றாட அக்கறைகளான
பரீட்சைக்கு மதிப்பெண் வாங்குவதைக் கடந்து, ஒரு ரசிகனின் பார்வையில் இருந்து சிலாகிக்கப்படுகிறது.
பிறகு மொத்த பிரபஞ்சமும் அவளை சிலாகிக்கிறது. அவளது குழந்தைமை கொண்ட, தன்னில் தொலைந்து
போகிற மனப்பான்மையை ஏற்று இயற்கை அவளுக்கு முழு மதிப்பெண்களும் அளிக்கிறது. குழந்தைகள்
தான் பொதுவாக இப்படி இருப்பார்கள். ஆனால் பதின்வயதினரிடமும் அக்குழந்தை அடிக்கடி வெளிப்படும்.
அதை பதிவு பண்ணுவது முகுந்த் பிரபலப்படுத்திய பாணி. அதைத் தான் இங்கு பார்க்கிறோம்:
வளர்ந்தோரிடம் உள்ள குழந்தை.
இந்த கவிதையில் ஒரு பலவீனம் அறிக்கை
போல் வருகிற “காலத்தின் பக்கங்களில் தேர்ச்சியுற்றதாய் பதிவு செய்கிறார் கடவுள்” எனும்
இறுதி வரி. இது போல் அவர் பல கவிதைகளில் முத்தாய்ப்பாய் ஒரு வரியை எழுதி தன் கருத்தை
அழுத்தி சொல்லுகிறார். இது குழந்தையின் முதுகில் கனமான பள்ளிப் பையை சுமத்தி நடக்க
விட்டது போலாகிறது.
இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில்
“வற்றா நதி” எனக்கு மிக பிடித்தமானது:
பொங்கும்
குதூகலத்துடன்
எஞ்சிய
தண்ணீரை
பேருந்தின்
ஜன்னல் வழி
இறைத்து
செல்கிறாள்
அந்தியில்
வீடு திரும்பும் சிறுமி
நடந்து
செல்வோரை
நனைத்து
செல்கிறது
நெடுஞ்சாலையில்
பிரவகிக்கும்
ஒரு நதி
“தரிசனம்” ஒரு பள்ளிக்கூட பிரார்த்தனை
பொழுதை காட்சிப்படுத்துகிறது. எல்லாரும் கண்மூடி ஏகசிரத்தையாய் கடவுள் நினைக்க எத்தனிக்க
ஒரு சிறுவன் மட்டும் ஒற்றைக்கண்ணை திறந்து பார்க்கிறான். அவனுக்கு மட்டும் “கணநேரம்/
தரிசனம் தந்து விட்டு/ போகக் கூடும் கடவுள்” என முடிகிறது. இது ஒரு ஜென் கதை போன்று
தொனிக்கிறது. ஆனால் நம்மை கற்பனையில் விரித்து படிக்க தூண்டும் ஜென் கவிதையாக இல்லை.
ஆனால் இந்த தருணம் முக்கியமானது.
இவரது கவிதைகள் அங்கங்கே அட்டகாசமான
அவதானிப்புகள், உவமைகள் தோன்றும். இதைப் பாருங்கள்:
”அழகு நிலையமொன்றில்
ஒப்பனையூட்டப்பட்டு
இரு சக்கர வாகனத்தின் பின்னிருத்தி
அழைத்து செல்லப்படும் பெண்
நெரிசல் மிக்க கடைவீதியைக்
கடந்து செல்லும் போது
தனது முகத்தின் வண்ணங்களை
எல்லார் மீதும்
பிரதிபலிக்க செய்கிறாள்” (“வெட்கத்தின்
வண்ணம்”)
அப்பெண் தன் வண்ணத்தை பிறரில்
பிரதிபலிக்க செய்கிறாள் என்பது ஒரு அழகான அவதானிப்பு. நமது மனம் இன்னொருவரை பிரதிபலிக்க
கூடியதாகவே இருக்கிறது. ஒருவர் சேற்றை வாரி பூசிக் கொண்டு வீதியில் நடந்தால் அவரது
சேறு அவரை கடந்து செல்பவர்களின் உணர்வுகளிலும் ஒட்டிக் கொள்கிறது. அது போன்றே ஒரு அழகான
பெண் ஓரிடத்தில் வந்ததும் கண்ணுக்கு தெரியா அழகொன்று அனைவர் மீதும் ஒட்டிக் கொள்கிறது.
குழந்தையை பள்ளிக்கு சென்று அங்குள்ள
சூழலில் காணும் பெற்றோரின் மனநிலை பற்றின கவிதை “விலகிச் செல்லும் நதி”. அப்போது அக்குழந்தைக்குள்
அதுவரை காணாத ஒரு பெரிய மனிதத்தனம், அந்நியத்தன்மை தோன்றுகிறது:
வலிந்து
திணிக்கும் தின்பண்டங்களை
வாங்கிக்
கொள்ளும் குழந்தையின்
உள்ளங்கைகளில்
முதன்முதலாய்
ஸ்பரிசிக்கிறோம்
நமது
குழந்தையின் வியர்வையை
இந்த கணம் எப்படி இருக்கும்? நாம்
மிக லகுவான வாழ்க்கை அமைத்துத் தர விரும்பும் போது அக்குழந்தை எங்கோ சிக்குண்டு அவஸ்தைப்பட்டு
நம் முன்னே வந்து நிற்கிறது. கசங்கின பூவாக தோன்றுகிறது. அலுவலம் போய் திரும்பும் ஆளைப்
போல் தோன்றுகிறது. குழந்தை சட்டென நம்மைப் போல் ஆகிறது. இவ்வரிகளில் ஸ்டாலின் ரொமாண்டிசத்தில்
இருந்து விலகி ஒரு நவீனத்துவ மனநிலைக்கு சட்டென தாவுகிறார். அவர் கவிதைகளில் ஒரு அரிய
கணம் இது. பொதுவாக குழந்தைகளின் சிரிப்பு, வாசனை, மென்மை பற்றி பேசுபவர் வியர்வை பற்றி
யோசிக்கிறார். ஆனால் ஒரு கணம் தான். அடுத்து உடனே கல்யாண்ஜியின் செருப்பை உதறிப் போட்டுக்
கொண்டு “பள்ளியை விட்டகலும் போது/ நம் மீது உதிரும் கொன்றைப் பூக்களோடு” என மீண்டும்
பூவைப் பற்றிக் கொள்கிறார் தான்.
“பின் தொடரும் கடவுளின் குரல்”
எனும் நல்ல கவிதையில் கோடை பற்றி ஒரு அழகான உவமை வருகிறது. பொதுவாக பாம்பைத் தான் சாலைக்கு
உவமை ஆக்குவார்கள். ஆனால் இவர் சாலையில் நெளியும் மாயப்பாம்பைப் போன்றது கோடை என்கிறார்.
கோடை வெக்கையில் அப்படி ஒரு மாயத்தன்மை உள்ளது. அது கண் தெரியாத ஊசிகளால் நம்மை குத்தி
உறிஞ்சிக் கொண்டிருக்கும். மறைவில் இருந்து நம்மை கொத்தி தளர்வடைய வைக்கும். ஒரு பாம்பைப்
போல் நெளிந்து ஊர்ந்து நம்முடனே வந்து கொண்டிருக்கும். நம் அன்றாட செய்கைகளில் உள்ள
ஒரு கண்காணா தெய்வீகத் தன்மையை பற்றியது இக்கவிதை. ஒரு குடும்பம் தன் சுற்றுலாவுக்கு
இடையே வெயில் தாளாமல் மரத்தடியில் ஓய்வெடுக்கிறது. அப்போது குழந்தையின் அம்மா மீதமாகும்
சோறை கவனிக்காமல் கொட்டுகிறாள். அது அங்கு மரத்தடியில் பல காலமாய் படையிலின்றி பசித்திருக்கும்
சாமிக்கும் ஒரு காகத்துக்கும் உணவாகிறது. காகம் அவர்களை ஆசீர்வதிக்கிறது.
“நகரத்தை விலை பேசுபவன்” ஒரு வழக்கமான
நவீனத்துவ பாணி கவிதை. ஒரு அன்றாட வாழ்க்கை தருணத்தை உறைய வைக்கிறது. நகரத்தில் ஒருவன்
நடைபாதையில் ஆளுயர கண்ணாடி வாங்குகிறான். அடுத்து இதில் உள்ள ஒரு உள்முரணை (paradox),
அபத்தத்தை காட்டுகிறது. கண்ணாடியை அவன் விலை பேசி எடுத்து செல்லும் போது நகரத்தில்
உள்ள பல காட்சிகள் அதில் பிரதிபலிக்கின்றன. அவன் அந்நகர காட்சிகளையும் இழுத்து தன்
வீட்டுக்கு கொண்டு போகப் போகிறானா? இக்கவிதையின் இறுதி வரிகள் கவிதையை இன்னொரு அடி
உயரே தூக்கி விடுகிறது:
“இன்று மதியம் இறங்கி வந்து
தனது முகம் கண்டு அதிர்ந்து சென்ற
சிறு அணிலொன்று
உச்சியில் இருந்து பார்த்தபடியே
இருக்கிறது
தன்னையே
வாங்கிச் செல்லும் ஒருவனை”
“தன்னையே / வாங்கிச் செல்லும்
ஒருவனை” என்பது இங்கு தேவையில்லை. அது இன்றி கவிதை இன்னும் நேர்த்தி பெறும். இங்கு
அணில் அன்றி ஒரு மனிதன் வந்தாலும் கூட ஒரு கணநேர அதிர்ச்சி அவனுக்கு தோன்றாமல் இருக்காது.
கண்ணாடியில் பார்க்கும் பிம்பம் நாம் தான் என நம்பி பழகி விட்டோம். இன்னொருவர் கண்ணாடியில்
நாம் தோன்றினால் அது நாமா அல்லது வேறொருவரா? இந்த குழப்பம் சுவாரஸ்யமானது. முன்னர்
குறிப்பிட்ட கவிதையில் அந்த ஒப்பனையிட்ட கல்யாணப் பெண் தன் வண்ணங்களை அடுத்தவர் மீது
பிரதிபலிப்பது போன்ற ஒரு பார்வை இது.
இது ஒரு கலவையான தொகுப்பு. வைரமுத்து,
கல்யாண்ஜி, முகுந்த் நாகராஜன் முதல் செறிவான நவீன கவிதை வரை இதற்கும் மாறி மாறி தெரிகிறது.
கே.ஸ்டாலின் இதை விட மிக சிறந்த
கவிதைகளை எழுத தகுதியானவர் தான். அதற்கு அவர் தன் கவிதைகளின் தலைக்கு மேல் தெரியும்
குடுமியான அந்த இறுதி வரியை தவிர்க்க வேண்டும். அடுத்து பூ, சிறகு, மழை, வனம், மரம்
இதையெல்லாம் செருப்பை வாசலில் விடுவது போல் விட்டு விட்டு வர வேண்டும். மழையையும் வானத்தையும்
பேசி பேசி மழைக்கும் வானத்துக்குமே அலுத்து விட்டது. ஸ்டாலினுக்கும் சீக்கிரம் அலுக்கும்
என எதிர்பார்ப்போம்.
வனமிழந்த கதை
வம்சி
விலை ரூ 70
வம்சி எண்: 9445870995