கழுவேற்றப்படுதல் - பா.சரவணன்



மையம் விட்டு விலகும் எலும்புகள்
குத்திக் கிழிக்கின்றன தோலை
பிளந்துகொண்ட கீழ்முதுகில்
தொங்கிக்கொண்டிருக்கும் பெருங்குடலில்
அழுகிய நறுமணத்துடன் நிறைந்திருக்கின்றன
கொல்லப்பட்ட ஆசைகள்
பிளந்து கிடக்கும் குறிக்கும்
ஆண்மை பெருத்த தொடைக்கும்
பால் இல்லை
கிழிந்த கழுத்திலிருந்து தொங்கும்
பின்மூளையில் வீசும்
சாராயம் செண்ட் மல்லிகை
ஊடாடும்
தூமைகளின் வாசம்
தலைக்குமேல் எட்டிப்பார்க்கும் மூளையில்
நடக்கும் பள்ளிப் பாடத்தினிடையே
தோன்றும் அவள் முகம்
வலியின் உச்சத்திலும்
துடிக்கும் இதயத்தில்
நாளை நாளை எனும் தவிப்பு

அடங்கும் இழுப்பில்
வில்லாய் வளையும் உடலைப் பிளந்து
அண்ட சராசரங்கள் நடுங்க
வெடித்துப் பாயும் அம்பு
இலக்கில்லா இலக்கு நோக்கி

இங்குதான் முடியும்
இந்தக் கவிதை என்று
நொடி முள் அசையும் கணத்தில்
சிரிக்கும் கூர் முனையில் இறங்கும்
மேலும் ஒரு குதம்.