ரோஸ் பவுடர் - கிரிஜா ஹரிஹரன்

பத்து வயது இருக்கும்.
முதல் முறை
என் முகத்தில்
யாரோ பூசினார்கள்.

”எவ்வளவு அழகு!”
வியந்தார்கள்.

அன்று நான் தூங்கவில்லை.
முகம் கழுவ மறுத்தேன்.

செதில் செதிலாய்
விழுந்தது அப்போதும்
என் புதிய முகத்தை
அழிக்க விரும்பவில்லை.

இத்தனை வயது கழிந்தது.
யாரோ பூசியதை
என் முகத்தில் இருந்து
இப்போது மெதுவாய்
அழிக்கிறேன்.

முழுவதுமாய் போவதற்குள்
”எவ்வளவு அழகு!”
வியக்கிறார்கள்.

இன்னும் நான் தூங்கவில்லை.