ஒரு மழைக்கால
வெளிச்சமற்ற இரவு.
உனக்கும் எனக்குமான விளையாட்டுகள் துவங்குகின்றன.
இரு கை விரல்களை நீட்டி 'ஐ! மரம்' என்கிறாய்.
நானும் கை விரல்களை நீட்டி 'ஐ! மரம்' என்கிறேன்.
'ஐ! மாடு' என்கிறாய்.
'ஐ! மாடு' என்கிறேன்.
'ஐ! பூனை' என்கிறாய்.
'ஐ! பூனை' என்கிறேன்.
'ஐ! பொம்மை' என்கிறாய்.
'ஐ! பொம்மை' என்கிறேன்.
'ஐ! வெளிச்சம்' என்கிறாய்.
'ஐ! வெளிச்சம்' என்கிறேன்.
யாரும் அறியா கள்ளப் புன்னகை சிந்தி
'ஐ! அப்பா' என்கிறாய்.
மகளிடம் தோற்பதில்
மகிழ்வுறும் தகப்பன்களின்
வரிசையில் முதன்மையானவனாக நான்.