பிரியாணி - கிரிஜா ஹரிஹரன்



 
நீயும் நானும்
நேற்று சேர்ந்து உணவருந்தினோம்.

பிரியாணி பிரமாதம்.

கண் சிவந்து போனதால்
உன் தாய்  என் நெற்றியில்
கை வைத்து ஜுரமா என்று
பார்த்தாள்.

அதனால் சொல்கிறேன்.

போய் விடு.

உன் பிரியங்கள்
எனக்கு ஞாபகம் இருக்காது.

உன் பிள்ளைகள் இறக்கும் போது
வெறுமனே உச்சுக்கொட்டி விட்டு
உன் பெண்டிரின்
உடம்புகளை ரசிக்கப் போய் விடுவேன்.

பெருந்தன்மையாய் நாங்கள்
கொடுத்த வரவேற்பு இதோ முடிகிறது.

பக்கத்து நாடு ரத்தத்தில்
அழிகையில் நான் சிரித்து விட்டு
எங்கள் ஓங்கிய கலாச்சாரத்தின்
பெருமையை உன் காது கிழிய
ஓதுவேன்.

விருந்தினனாய் வந்தவன் நீ
போவதுதான் உசிதம்.

நீ தங்க நினைத்தால்
உலகெங்கும் உள்ள உங்கள் ஆட்களின்
அராஜகத்திற்கு நீ பதில் சொல்ல வேண்டி வரும்.

போ போ!
சாப்பாடு என்ன குற்றம் செய்தது
பிரியாணியை மட்டும்
விட்டு விட்டு போ.