தொட்டுத்
தொடங்கி
பட்டுப் படர்ந்து
கட்டித் தழுவி
கொட்டித் தீர்த்து
தொட்டுத் தொடராமல்
பொழிந்த மேகமும்
தணிந்த தேகமும்
விட்டு விலகும்
யோகம்
——————-
கச்சேரி செய்ய
இடமும் நேரமும் போதாமல்
விளம்பரப்பாடலாய்
சட்டெனத் தொடங்கி
பட்டென முடியும்
விளம்பரமில்லாமல்
----------------------------------------
மின்னல் இல்லை
மின்மினியின் மினுக்கல்தான்
என்றாலும் என்ன
ம்?
————
அசை சேர்த்து
தளைகூட்டி
வரிகள் அடுக்க அவசியமில்லை
சில மாத்திரைகளில் முடியும்
மந்திரம்
ம்.
—————————–
குறுகத் தரித்த
குறள்போல் கூடல்
எனில்
இலக்கணப்பிழை இல்லையே?
————-
பாலையில் பொழியும் மழை
சுவடுகள் விட்டுச்செல்லவில்லை
என்றாலும் நிகழ்ந்தது
————–
கடுகு சிறுத்தாலும் காரம்
பழமொழியைப் பழகுதல்
பாவனையில்லை எனில் பாவமில்லை
————————-
மீண்டும் நிகழாதது என்பதால்
வேண்டாம் என்பதில்லை
மீண்டோம் என்றும் இல்லை
—————
சிறுபொறியில் குளிர்காய்ந்து
ஒரு துளியில் மூழ்கி
மணல் துகளில் மலையேற்றி
வானவில்லில் நாணேற்றி முறித்து
கூடி விலகிய இடத்தில் காற்றில் கரையும் இரு வாசம்
————————-
கவசம் ஏதும் பாட
அவகாசம் தராமல்
அவசரமாய்
மோதிக் கூடி சுவடின்றி விலகினர்
மோகினியும் பிரம்மராட்சனும்
அரூபத்தின் அதிர்வு
நகர்ந்துகொண்டிருக்கிறது
அடுத்த இரை தேடி
———-
இருவர் எழுதும்
ஹைக்கூ
வேறு இலக்கணங்கள் இல்லை
————–
கணநேரம் வெட்டும் மின்னல்
கனவாய்ப் போகலாம்
அல்லது
கண்ணைப் பறிக்கலாம்
அதனால் என்ன?