என் கரம் பற்றிக் கொண்டாய் – மார்கரெட் ஆட்வுட் (தமிழில் ஆர்.அபிலாஷ்)


Image result for margaret atwood

நீ என் கரம் பற்றிக் கொண்டாய்
சட்டென நான் இருக்கிறேன் ஒரு மட்டமான திரைப்படத்தின் முன்பு,
அது முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது;
நான் ஏன் இவ்வளவு சொக்கிப் போகிறேன்?

மெதுவாக சுழல் நடனம் ஆடுகிறோம்
பழமொழிகளின் புளித்த நெடி வீசும் காற்றினூடாக
குரோட்டன்ஸ் பனைகள் நிற்கும் முடிவற்ற தொட்டிகளுக்கு பின்னால் நாம் சந்திக்கிறோம்
நீ தவறான ஜன்னல்களினூடாய் ஏறுகிறாய்

பிறர் வெளியேறுகிறார்கள்
ஆனால் இறுதி வரை நான் மட்டும் எப்போதும் இருக்கிறேன்,
காசு கொடுத்திருக்கிறேன் அல்லவா,
என்ன நடக்கப் போகிறது என நான் பார்க்க வேண்டும்.

புகையாகவும் உருகின செல்லுலாய்டாகவும் வடிவெடுத்த உன்னை
எதேச்சையாய் எதிர்படும் குளியல் தொட்டிகளில்,
என்னிலிருந்து உரித்து போட வேண்டும்

இதை நான் எதிர்கொண்டாக வேண்டும்
நான் கடைசியாய் போதைக்கு அடிமையாகி விட்டேன்
பாப்கார்ன் மற்றும் பிய்ந்த பஞ்சிருக்கையின் வாசனைகள்

வாரக்கணக்காய் என்னை விட்டு நீங்காது.