பத்திரிகை படிப்பது ஆபத்தானது - மார்க்கரெட் ஆட்வுட் (தமிழில் ஆர்.அபிலாஷ்)




நான் மணற்பெட்டியில் கோட்டைகள்
 கட்டும் போது
அவசரமாய் அமைத்த அகழிகள்
சிதைந்து குவிந்த பிணங்களால் நிரம்பின

மேலும் நான் குளித்து தலைசீவி
பள்ளிக்கூடம் நோக்கி நடந்த போது
சிமிண்ட் தரையின் வெடிப்புகளில் என் பாதம் பட
சிவப்பு வெடிகுண்டுகள் வெடித்தன.

இப்போது வளர்ந்து விட்டேன்
படிப்பை முடித்து விட்டேன்; என் நாற்காலியில்
ஒரு பியூஸைப் போல அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்

வனங்கள் கொழுந்து விட்டெரிகின்றன,
அடிப்புல் பரப்பு வீரர்களால் நிரம்பியிருக்க,
புரியாத வரைபடத்தின் பெயர்கள்
பற்றி எரிகின்றன.
நானே காரணம், நான் ரசாயன பொம்மைகளின்
சேமிப்புக் குவியல், என் உடல்
ஒரு ஆபத்தான உபகரணம்,
அன்புடன் அரவணைக்க கைகள் நீட்டினால் அவை துப்பாக்கிகள் ஆகின்றன,
என் நல்ல நோக்கங்கள் முழுக்க உயிரைப் பறிக்கக் கூடியவை.

என் அப்பாவிக் கண்கள்
பார்வை படுகின்ற எதையும்
குழிகள் விழுந்த கறுப்பு வெள்ளை புகைப்படமாய்
உருமாற்றி விடும்,
எப்படி தடுப்பேன் என்னை
நான்?

பத்திரிகைகள் படிப்பது ஆபத்தானது

என் மின்சார தட்டச்சில்
அமைதியான மரங்கள் பற்றி பேச
ஒவ்வொரு முறையும் ஒரு பொத்தானை தட்டும் போதும்

மற்றொரு கிராமம் வெடித்து தெறிக்கிறது.