மின்சார துண்டிப்பால்
பாதியில் விடுபட்ட
நேற்றைய உரையாடல்கள்...
எப்படியோ தேடி
கண்டுபிடித்து தன்
நட்பை பெற
வேண்டி காத்திருக்கும்
பள்ளிப் பருவ தோழி...
முந்தைய பதிவிற்கு
எப்போதும் போலவே
அனிச்சையாய் விருப்பம்
தந்த கல்லூரி நட்பூக்கள்...
நீயெப்பட திருந்தப் போற
என சலித்துக்கொள்ளும்
இதுவரை பார்த்திரா
என்றும் நலம்விரும்பும்
தொலைதூர அண்ணனொருவன்...
ஏன் இந்நேரமாகியும்
முக உரையாடலிணைப்புக்கு
விழி விளித்தழைத்து
வரவில்லையென காத்திருந்து;
பின் ஊடலில்
"கோச்சுகிட்டேன் போடா"
என செய்தி அனுப்பிவிட்டு
என் உபரி பிரதிபதிலுக்கு
இலவசமாய் இரு
புளிப்பு மிட்டாயுடன்
நாளை சந்திக்க வா வென
வசமாய் அன்பெய்த காதலி...
இவர்களுக்கு இப்போது
தெரிய வாய்ப்பில்லை
விபத்தில் சற்றுமுன்
சிதைந்து பிரிந்த
என் உயிர் பற்றி...
நாளையோ..
பின்னொரு நாளிலோ...
யாரோ
ஒரு தோழன்/தோழியால்
பகிரப்படும் என் புகைப்படம்
R.I.P என்றோ
We Miss You என்றோ...
அதுவரை,
வரும் செய்தி தகவல்கள்.
நட்பு வேண்டுகோள்..
பதிவு விமர்சன விருப்பம்...
பிறந்தநாள் வாழ்த்துக்களென;
இவையாவும் என்றும்
காத்திருப்புகளின் கதவுகளால்
எப்போதும் பூட்டப்படாமல்
எதிர்பார்த்து எத்தனித்திருக்கும்...