நீர்மாலை* - அரிஷ்டநேமி



ஒரு பனிக்கால விடியல்
ரோட்டோர மனிதர்கள் நடக்கிறார்கள்.
வாகனங்கள் விரைகின்றன.
சாலை தாண்டிய
உள் சாலைகளில் நாய்கள்
பெரும் விளையாட்டுகள் விளையாடுகின்றன.
தன் வயது ஒத்தவர்களுடன் பேசி
மகிழ்வாகவே நடக்கிறார்கள் பள்ளிச் சிறுமிகள்.
'கட்டைல போற கம்மனாட்டிஎன்று
கணவனை விளித்து அவன் கைகளில்
சில நோட்டுக்களைத் திணிக்கிறாள் மனைவி.
புதுமணத் தாலி மின்ன
மனைவியும் கணவனுமாய்
சிரித்து மகிழ்த்தபடி குழு ஒன்று.
காத்திருக்கும் சில நிமிடங்களில்
தலை ஈரத்தை சரி செய்கிறாள்
சற்றே நரை கொண்ட முதிர் கன்னி.
கனத்த சரீரத்தின் கனம் குறைக்க
வேர்வைகளை துடைத்து ஓடியபடி சிலர்.
தொலை தூர குயிலின் ஓசையை
உள்வாங்கி தலைதிருப்பி
உற்றுக் கேட்டபடி ஒருவன்.
இவை அனைத்தையும் கவனியாது
அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது
முகம் முழுவது அடி வாங்கிய நாய் ஒன்று.
ஒரு பனிக்கால விடியல்
ரோட்டோர மனிதர்கள் நடக்கிறார்கள்.


*நீர்மாலை – பிணத்தைக் குளிப்பாட்ட நீர் கொண்டு வரும் சடங்கு