1 ] மீட்கப் பட்ட ஏதேன் தோட்டக் கனி .
இறக்கம் வந்தது
மனிதன் மீது.
இறங்கி வந்தார்
கடவுள் தரைக்கு.
மூட்டையாக்கிச்
சுமந்து சென்றார்
மனித பாவங்களை
தலை மீது .
இளைப்பாற நினைத்து
இறக்கி வைத்து
இமைகள் செருகி
தூங்கி எழ ,
மூட்டையில்லை
வைத்த இடத்தில் .
” பாவமே
இல்லாமல்
வாழ்வது எப்படி ? “
தூரத்தே நின்று
மனிதன் கேட்டான்
மூட்டையைப் பிரித்தவாறு .
2 ] வழிகாட்டிகள் .
புதிய ஊர்
கையில் இருந்த முகவரி
காட்டி வழி கேட்டேன் .
நேராப் போங்க
வள்ளுவர் சிலை வரும் .
போனேன் – வந்தது .
அங்கொருவர் கை காட்டினார் .
இப்படியே போங்க
காந்தி சிலை வரும் .
போனேன் – வந்தது .
காத்திருந்து வந்தவரிடம்
காட்டினேன் முகவரியை .
இதே வழியாப் போனா
ஒரு டாஸ்மாக் கடை வரும் .
போனேன் – வந்தது .
அதன் பிறகு
எப்படிப் போவது
அதைத் தாண்டி
தேடிய முகவரிக்கு ?
3 ] தேசீய ஒருமைப்பாடு .
தங்க நாற்கர நெடுஞ்சாலைகளின்
தவிர்க்க இயலா மேடு பள்ளங்கள்
தடுமாற வைக்கும் அபாய வளைவுகள்
ஊரெல்லைகளில் காசுக்காக நீளும்
காவல் கரங்கள் .
ஓரிடத்தில் ஏறி
வேறிடத்தில் இறங்கும்
முகம் மறந்து போகும்
வாடகைக் கன்னிகள் .
டீசலில் கலக்கும் ஏதோ ஒன்றும்
அதன் விளைவாய் எழும் கரும்புகையும் .
தவறாது தாமதமாய் வரும்
தொடர் வண்டிக்காய் மூடப்படும்
இரும்புக் கதவுகள் திறப்பதற்கான
நீண்ட காத்திருப்புகள் .
ஏதேனும் ஒரு காரணத்திற்காக
எங்கேனும் ஓரிடத்தில் நிச்சயமாய்
எரிக்கப்படும் வாகனங்கள் .
சந்தேகமேயில்லை
தேசிய பெர்மிட் வண்டியோட்டும்
அவனுக்கும் அவனது உதவியாளனுக்கும்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
பாரதம் ஒன்றேதான் .
4 ] அவர்களும் இவர்களும் .
அவர்கள் அப்படி இருக்கிறார்கள்
அவர்கள் இப்படி இருக்கிறார்கள்
அவர்கள் அதைச் செய்தார்கள்
அவர்கள் இதைச் செய்தார்கள்
அவர்கள் அதை வாங்கினார்கள்
அவர்கள் இதை வாங்கினார்கள்
அவர்கள் அப்படிச் சொன்னார்கள்
அவர்கள் இப்படிச் சொன்னார்கள்
அவர்கள் அது வைத்திருக்கிறார்கள்
அவர்கள் இது வைத்திருக்கிறார்கள்
இப்படி
அவர்களைப் பற்றியே
பேசிக் கொண்டும்
நினைத்துக் கொண்டும் இருப்பதினால்
இவர்களது வாழ்க்கையை
வாழ முடியாமலே போய் விடுகிறது
சில இவர்களுக்கு .
வாழாமலே
கழிந்து விடுகிறது வாழ்க்கை .