தெருநாய் ஓலங்கள் - ரஞ்சித் மோநான் வரையும் கோலங்கள்
மிகச் சிறந்தவை
மிகப் புதியவை 

என் கோலங்கள் எல்லாம்
இந்த காகிதங்களில் மட்டும் தான்
வாசல்வரை சென்றதில்லை
நானும் வாசல் வரை செல்வதில்லை
நான் படி தாண்டா விபச்சாரி

புள்ளிகள் வைக்கும் போது
அழுத்தமாய் இருப்பவள்
கோடுகள் வரையும் போது
அலட்சியம் செய்வேன்

சில புள்ளிகளை இணைத்தே தீருவேன்
சில புள்ளிகளை நினைத்தே மீறுவேன்
நேர் கோடுகள் என்னை ஈர்ப்பதில்லை
கோணல் கோடுகள் தான் என்னை வசீகரிக்கின்றன

நான் போடும்
ஒவ்வொரு கோலத்தையும் 
முடித்து வைக்க 
தினம் ஒரு ஆண் வருவான்

இவர்கள் யார் தரும் ஆண்கள்?
பூ போல சிலபேர் புயல் போல சிலபேர் 
நாய் போல சிலபேர் தாய் போல சிலபேர் 

இன்று என்னுடைய குழப்பங்கள் எல்லாம் 
புள்ளிகளுக்கும் கோடுகளுக்கும் இடையே 
நான் கோலங்கள் போடுகிறேனா 
இல்லை கோலங்கள் தேடுகிறேனா 
என்பது தான் 

நான் மனிதர்கள் பேசி கேட்பதில்லை
நான் கேட்பதெல்லாம் 
இரவில்  என்னோடு சேர்ந்து கத்தும் 
சில தெருநாய் ஓலங்களை
மட்டும் தான்