சாமான்யன் - மாதவன் ஸ்ரீரங்கம்

Beheaded by candarama

கில்லட்டின் முறைத்தது என்னை
அல்லது கில்லட்டினை நான்
வழக்கம்போல என் பிள்ளையை முத்தமிட்டு
காய்ந்த ரொட்டியை கொறித்துவிட்டு
பணிக்கு தாமதமான பதற்றத்தோடு மனைவியை கட்டியணைத்துவிட்டு
கிழிந்த காலுறையை காவிக்கொண்டு
தெருவிலிறங்கி நடந்தபோது
அவர்கள் என்னை பிடித்துச்சென்றார்கள்
என் தேசத்தின் கிளர்ச்சியாளர்கள்
எவர்மீதோ எவருக்கோ பெருங்கோபம்
கிடைத்தவர்களையெல்லாம் இழுத்துச்சென்று கில்லட்டினுக்கு இறையாக்கினார்கள்
நான் அவர்களிடம் மன்றாடினேன்
கிளர்ச்சியின் வெறியோடிய அவர்கள் கூக்குரலில் விழவில்லை என் ஒலிமங்கிய குரல்
அவர்களில் யாருக்கும் கொம்புகள் இல்லை
கைகள் கால்களில் எல்லாம் மாறுதல் இல்லை
கோரைப்பற்களோ ரத்தவாடையோ தென்படவில்லை
என்னைப்போலவே எல்லாமும் கொண்டிருந்ததை வியந்துபார்த்தேன்
இறுதியாக கில்லட்டின் முன்பான வரிசையில் என்னை நிறுத்தியபோது ஒருமுறை வாயிலெடுத்தேன்
தலை துண்டித்த எட்டாம் நொடியில் மரணமென்று எப்போதோ எவரோ சொன்னது நினைவுவந்தது
வரிசையில் இருந்தவர்கள் அறைகுறை உயிருடன்
இரண்டுபேர் என்னை முண்டித்தள்ளி பின்னால் சென்றார்கள்
தப்பிக்கமுனைந்து ஒடிய சிலரை துப்பாக்கியால் சுட்டுச்சிரித்தார்கள்
செயலற்று நின்றிருந்த என்மீது இரக்கம்கொள்ள வரவேயில்லை என் தேவதூதன்
நான் எந்தத்தவறும் செய்துவிடவில்லை
புரட்சி வெடித்த ஒரு பிரதேசத்தின் சாமான்யனாக இருந்ததைத்தவிர
இனி என் மனைவியை யார் கட்டியணைப்பது ?
என் பிள்ளையை யார் கொஞ்சி மகிழ்வது?
இனி எப்போது நான் வீட்டிற்கு செல்வது ?
என்முறை வந்து என்னை கில்லட்டினில் குனியவைக்கப்பட்டபோதும்
எனக்கான எந்த தாமதங்களுமின்றி என் தலையை துண்டித்தபின்பு
நான் யாருமாக இல்லை
பள்ளிப்பிள்ளைகள் வாசிக்கும் பிரஞ்சு புரட்சி சரித்திரத்தில் நான் இப்போதும் இருக்கிறேன்
எப்போதும் போல அடையாளங்கள் ஏதுமற்ற
ஒரு சாமான்யனாக