கவிதைக்கலைப்பு - பா.வேல்முருகன்

Seasons change. by beHead

தொழுகைக்கான அழைப்புமணி 
ஒலிக்கையில்
தொலைக்காட்சியில் 
இந்துத்துவா தலைவரெனப்படும்   
ஒருவர் ஒலிப்பெருக்கி முன்நின்று 
ஒலியெழுப்பிக் கொண்டிருக்கையில்
கானல் நீராய்
கண்ணில் தெரிந்து 
கடந்து போனதது  

சாலையோரப் பூங்காவில் 
தண்ணீர் தெரிப்பதற்கு நடுவே 
விளையாடிக் கொண்டிருந்த 
இரு சிறார்களுக்கிடையேயும் 
இமைப்பதற்குள் 
இலகுவாய் மறைந்து போனதது  

பத்தொன்பதாம் மாடி 
பணியறையில் இருந்து 
பள்ளம் பார்க்கையில் 
கண்ணில் அகப்பட்டு 
கையில் சிக்காது 
கரைந்து போனதது  

இரவின் இருளில் 
இருளின் ஒளியில் 
ஓரமாய் ஒளிந்து 
உயரமாய் உதித்து 
எழுந்து உட்காருகையில் 
ஏங்கவைத்து 
மறைந்து போனதது