ஐந்தாவது விதி - மயிலன்


the end... by salihguler

எதிரில் அமர்ந்திருப்பவரை
எங்கேயோ பார்த்திருக்கிறேன்
வருவதற்கு முன்பிருந்தே
இங்குதான் இருக்கிறார்
ஆப்பிள் சாலட்' முறைத்துக்கொண்டிருக்கிறார்
ஏதோவொரு விரக்தி அப்பிக்கிடக்கிறது
அந்த காட்சியில்
கண்கள் சிவந்து பொங்கியிருக்கின்றன
எத்தனையாவது சுற்றென்று
தெரியவில்லை
எங்கேயோ பார்த்திருக்கிறேன் அவரை

கண்ணாடி குவளையை
மேசையில் அறைந்து வைத்ததும்
என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு
யாரென்று தெரிந்துவிட்டது
எனக்கு தெரிந்துவிட்டதென்பது
அவருக்கும் புரிந்துவிட்டது
சலனமேயில்லாமல்
ஆம் என்பதுப்போல தலையசைத்தார்
தலையைக் கொஞ்சம்
கிராப் வெட்டியிருக்கிறார்
முகத்தில் ஏகத்துக்கும் சுருக்கங்கள்
அவ்வளவுதான் வித்தியாசம்

மாட்டிறைச்சியை
விரும்பி ருசித்துக்கொண்டிருக்கிறார்
எடுத்துக்கொள் என்று
சமிக்ஞை செய்கிறார்
ஆனால்
ஆப்பிள் சாலட் பக்கமாய் நீண்ட
என் கையைப் பதறி தட்டிவிடுகிறார்
கொஞ்சம் அவமானமாய் இருக்கிறது
அவர் பார்வையைத் தவிர்த்துவிட்டேன்
சிறிது மெளனம் கடந்து
நிறைய எரிச்சலுடன் ஓர் ஆணை
'பேரர், அஞ்சாவது லார்ஜ்'


ஏதோ யோசித்தவர் சட்டென
மேசையில் ஒரு கையூன்றி
என் காதருகே வந்து
அதனை நிதானமாக சொல்லிவிட்டு
அமர்ந்துக்கொண்டார்

'இதுதான் என் ஐந்தாம் விதி'

'அப்போ நாலாவது?'

'அந்த சுற்றை நீ கடந்துவிட்டாய்'