பெயர்க்காரணம் – பா.சரவணன்


 In the End by Teh-cHix0r

பெயரில் என்ன இருக்கிறது

சிலுக்காய் மாறிய விஜயலட்சுமி
உலுக்கினாள்
நல்லுலகத்தை

மரபணு மாற்றிய விதைக்கு
பைந்தமிழில் பெயரிட்டு
பயிரிடச் செய்தனர்

காவியமான காதலனின் பெயரை
குழந்தைக்கு வைக்க முடியாவிட்டாலும்
கேட்கும்போதெல்லாம் சிலிர்க்கத்தான் செய்கிறது

கான் என்று முடியும் பெயர்களை
கணிணியால் பிரித்து
கவனமாய் விசாரிக்கின்றனர்
விமான நிலையக் காவலர்கள்

காண்டம் என்றோ
நாப்கின் என்றோ
கத்திச் சொல்ல முடிவதில்லை

நான்கெழுத்தைச் சொல்லி
முப்பதாண்டு காலமும்
மூன்றெழுத்தைச் சொல்லி
நாற்பதாண்டு காலமும்
ஆள முடிகின்றதென்றால்

என்னென்னமோ இருக்கிறது பெயரில்