பருவநிலைக்கு ஒரு பொத்தான்- பா.சரவணன்


 the rainbow's end . by M0THart

ஒரு பொத்தானை அழுத்தியதும்
வருகிறது குளிர்காலம்

தேயிலைத் தோட்டத்தில் இவளுடன் நடந்ததை
கொட்டும் மழையில் காத்திருந்ததை
முன்பனிக்காலத்தில் அவள் அணைத்ததை
திருமாலின் தரிசனத்துக்காகக் காத்திருக்கையில்
மழைநீரின் ஈரத்தில்
சற்றே சறுக்கி
மேலே சாய்ந்தவளின் குளிர்ந்த சூட்டை

மார்கழியில் நெஞ்சில் பதிந்த
பிஞ்சுப்பாதங்களின் சில்லென்ற மென்மையை
பீரின் நுரையை
பிறகொரு மழைநாளில்
நடுங்கிபடி நிகழ்ந்த ஆம்புலனஸ் பயணத்தை

நினைவூட்டியபடி
வந்தது குளிர்காலம்
ஒரு பொத்தானை அழுத்தியதும்

வெளியில்

வழக்கமான உக்கிரத்துடன் காய்கிறது வெயில்