இப்போதும் அவன்
கிராமத்துவாசி தான்.
நகர நெருக்கடியில்
நண்பனின் அறையில் குடியேறியவன்
தினமும் உறங்கத் தொடங்குகிறான்
நகரத்தை சபித்தபடியே.
பொதுக் கழிப்பறைக் கூட்டத்தில்
அடக்கிக் கொண்டு நிற்பவனுக்கு
இந்த நகரத்தின் மீதே
அதைக் கழித்துவிடத் தோன்றுகிறது.
விழித்திருந்தாலும் விழியிருக்கிறதாவென
சரிபார்த்தபடி இருக்க வேண்டியிருப்பதாய்
வேதனைப் பட்டுக் கொண்டேயிருப்பான்
எப்போதும்.
அன்றோருநாள்
லாரி மோதி ரத்த வெள்ளத்தில்
செத்துக் கொண்டிருக்குமொருவனைப்
பார்த்தபடியே அவன்
தெரு முக்கில்
தேநீர் குடித்துக் கொண்டிருந்தான்.