அன்புக் கடலின் பரவல் - மாலதி ராஜ்

Image result for மணல் மீது வாழும் கடல் + குமரகுரு அன்பு

     
                     
     தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் தனக்கென ஓர் உலகில் மிதந்து வருபவர்கள் கவிஞர்கள் என்றொரு கருத்து எனக்கு உண்டு. இன்றுள்ள சமூகத்தில் மக்களிடம் நம்பிக்கையின்மையும், அக்கறையின்மையும் நிலைத்திருக்கக் காண்கிறேன். எந்த பிரச்சனையாயினும் அதன் தீவிரத்தை ஆராயாமல், அதனை ஒதுக்கிவிடும் நிலையே மேம்பட்டு இருக்கிறது. அவ்வப்போது சில சமூக சிக்கல்களை நம் கவனத்தில் எடுத்துக்கொண்டாலும், அதற்கு ஓர் முடிவு கண்டறியும் முன்னரே நம் கவனம் திசைமாறி விடுகிறது. இவ்வாறான உலகில் இதுவரை நான் வாசித்த கவிதைகளில் பெரும்பாலானவை, நிலவி வரும் சமூக பிரச்சனைகளை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்ததே ஒழிய என் மனதை நிலை கொள்ள செய்ததாகத் தெரியவில்லை.
     மாறாக, அன்மையில் நான் படித்த “மணல் மீது வாழும் கடல்” என்ற  குமரகுரு அன்பின் கவிதைத் தொகுப்பு என்னை என் கனவுலகத்திலிருந்து எதார்த்ததிற்குக் கொண்டு வந்தது. இன்றைய இலக்கிய பரப்பில் இது போன்ற படைப்புகள் தான் தமிழ்க் கவிதைகளுக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இக்கவிஞனின் ஒவ்வொரு கோபமான வார்த்தைகளுக்குள்ளும் ஒரு கசப்பான உண்மையும், நிலை கொண்ட அமைதியும் ஒளிந்திருக்கக் காணலாம். இக்கவிதைகளின் மூலம் கவிஞர் உன்மையையும் உன்னதத்தையும் தேடுகிறார், வாசகர்களையும் அந்த உண்மையின் மையத்திற்கு இட்டுச் செல்கிறார்.
     கடல் என்றதும் நம் நினைவிற்கு வருவது அதன் உவர் நீரும் அதை சார்ந்து வாழும் உயிரினங்களுமே. எப்போதும் கடல்களுடன், ஆறுகளுடன், ஊற்றுகளுடன் ஒன்றாய் பயணிக்கும் மணல்- இவற்றை தாங்கி நிற்கும் மணல்- நம் கவனத்தை எப்போதும் பெறுவதில்லை. இது போன்று நாம் கவனிக்க தவறிய உண்மைகள், நம் கவனத்திற்கு அப்பாற்ப்பட்ட உன்மைகள் என பல பேருண்மைகளின் தெளிவான பிரதிபலிப்புகளை இக்கவிதைத் தொகுப்பில் பார்க்க முடிகிறது.
     நிகழ்காலத்தில் இருக்கும் மறுக்கமுடியாத, மறைக்கமுடியாத பல உண்மைகள்  எவ்வாறு நம் நனவிலியை இம்சித்து உறக்கத்தை புறந்தள்ள வைக்கிறது என்பதை உணர்த்தும் கவிதை தான் ‘கங்காரு பை’. அன்றாடம் வாழ்வில் நம் கண்முன்னே நடக்கும் துயர நிகழ்வுகளான, கவனிப்பாரற்ற நாய்க்குட்டி, கிழிந்த சேலை உடுத்திய மாதாக்கோயில் பிச்சைக்காரி, பஸ்ஸிலிருந்து கீழே விழுந்தவன், பாட்டியிடம் சண்டையிடும் பேரன், கண் தெரியாதவரை அழைத்துச் சென்ற சிறுமி போன்றவைகளை கண்டும் காணாமல் செல்ல வைக்கிறது நம் சூழ்நிலை. ஆனால் அதே நிகழ்வுகள் நம் நினைவை ஆக்கிரமித்து, நம் அமைதியை சூன்யமாக்குகிறது பிறிதொருவேளையில். இக்கவிதையை வாசித்த பின்னர் நாம் ஒவ்வொரு நாளின் இறுதியிலும் கண்டும் காணாமல் விட்டு வந்த நிகழ்வுகளை நோக்கி நம் எண்ணம் ஓட்டம் பிடிக்கிறது.
     ஒரு கவிதையை படிக்கும் பொழுது நாம் அந்த கவிதையோடு பயணம் செய்ய வேண்டும். பின் அக்கவிதையின் இறுதியில் நிஜ உலகத்திற்கு நம்மை அழைத்து வரும் மணி ஒலிக்கப்பட வேண்டும், அது போதும் நாம் அந்த கவிதையை ரசிப்பதற்கு. அந்த வகையில் குமரகுரு அன்பின் இத்தொகுப்பு கவிதைகளில் பல எனக்கு அந்த உணர்வை ஏற்படுத்திவிட்டது. ‘கடற்கரையில் நான்’, ‘மழை நாளில் ஒரு தவளை’ போன்ற கவிதைகளை படிப்பதன் மூலம் அத்தகைய வினோதமான கவிதை உலகில் தவளை போல இரு வாழ் உயிரியாக (வா)சிக்கலாம்.     
     இவரது கவிதை அனைத்துக்கும் நாயகன், மனிதன். சமூகத்தில் வாழ்ந்து கொண்டே அதனை மாற்றும் திறமை படைத்தவன். இவ்வுலகத்தில் தனக்கேற்றதாக அமையாத பல விஷயங்களை தனக்கு உகந்ததாக மாற்றிக் கொண்டு புதுமை படைத்துக் கொண்டிருக்கிறான். அவனது உறுதியைக் குலைக்கும், வேகத்தைக் கட்டுப்படுத்தும், பிடியைத் தளர்த்தும் கூக்குரல்களின் உண்மை நிலையை தன் முதல் பதிப்பான “மணல் மீது வாழும் கடல்”  மூலம் தெளிவுபடுத்துகிறார் குமரகுரு அன்பு.
     இச்சமுதாய சூழ்நிலையில் கவிஞரகள் அவர்கள் உள்ளங்களில் உருவான சிந்தனைகளை புறந்தள்ளிவிட்டு அகவயமாகத் திரும்பி அவர்களின் உள்ளத்தினுள் வாழ முயற்சி செய்கிறார்கள் என்ற புதுக்கவிஞர்களின் மீதுள்ள குற்றச்சாட்டை மடை திருப்பி குமரகுரு உண்மையின் பிரதிபலிப்பை உள்ளம் உணரும் வண்ணம் தன் கவிதைகளை விதைத்திருக்கிறார்.
     இயற்கையையும் சமுதாயத்தையும் ஒரே நிலையாகக் காணும் இக்கவிஞர் மனசாட்சியுடன் தற்கால சமுதாயத்தின் வரைபடத்தை வரைந்து காட்டியுள்ளார். தற்கொலைக் கவிதையுடன் தன் தொகுப்பை நிறைவு செய்வதன் மூலம் சாவின் விளிம்பில் உலகத்தை நெருக்கமாகக் காணும் சுதந்திரத்தை எடுத்தியம்புகிறார். இதற்கு மேல் இந்த தொகுப்பை விமர்சிக்கும் பணியை வாசகர்களிடம் ஒப்படைக்கிறேன். ஏனெனில்
           நமக்குத் தொழில் கவிதை
           நாட்டுக் குழைத்தல்
           இமைப்பொழுதும் சோராதிருத்தல்..