தோட்டாக்கள் பாயும் வெளி: மாயத்தில் கவிதையாகும் யதார்த்த வெளி – R.அருள்



இன்று  எந்த கவிதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டாலும் இவைகள் தாம் இக்கவிதைகள்  என அஞ்சனம் கூறி கவிதைக்குள் இலகுவாக பயணிக்கலாம். காரணம் கவிதைகள் தங்களுக்கென பாடுபொருள்களை வைத்துக்கொண்டு அவைகளைச் சுற்றியே பயணிக்கின்றன. கவிதைகள் அழகியலுக்காக மட்டும் செய்யப்படுகின்றனவோ என்ற உணர்வை இவைகள்  ஏற்படுத்துகின்றன. மண் சார்ந்த கவிஞனின் அனுபவம் அரிதாகவே காணப்படுகிறது. கவிதைகள்  அறிவுத் தேடலுக்காகவும் தன சுயம் சார்ந்த  தேடலுக்ககவும் செய்யப்பட்டு தோல்வியடைகின்றன.
சிறந்த நவீன கவிதையோ அவ்வாறில்லாமல் கவிஞனின் ஆன்மாவை முன் நிறுத்தி இப்பிரபஞ்சத்தை குறிப்பாக மண்ணின் மனத்தை வாசகனுக்கு காண்பிக்கிறது. கவிஞனின் ஆன்மத்தினூடாய் பார்க்கப்படும்  இப்பிரபஞ்சத்தின் அழகியலே நவீனக் கவிதையின் இலக்கணம். கவிஞனின் ஆன்மமே  கவிதையின் வடிவம். தனூடாய் காட்டப்படும் பிரபஞ்சமே அதன் அழகியல். கவிஞனுக்கும், கவிதைக்கும், இப்பிரபஞ்ச வெளிக்கும் மத்தியில் நடக்கும் ஊடாட்டமே ஒரு கவிதையை நவீனக் கவிதை என நம்மை அழைக்க தூண்டுகிறது. இந்த இலக்கணத்தை மீறின கவிதைகள் அனைத்தும் ஒரு எழுத்தாளனின் செய்பொருளாக இருக்குமே தவிர கவிஞனின் படைப்பாகாது.
இந்த வகையில் நா. பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளி கவிஞனின் ஆன்மத்தை முன் நிறுத்தி அதினூடாய் நாம் பார்த்து அனுபவிக்கிற அனுதின வாழ்வியலை அதன் சாரமற்ற நிலையிலிருந்து அழகூட்டப்பட்ட மாய உலகமாக பிரதிபலிக்கிறது. இங்கு புரட்சியாளன் என்று யாரும் இல்லை. கவிதையும் புரட்சிக்காக எழுதப்படவில்லை. தலைப்பைப் படித்துவிட்டு தொகுப்பினுள் நுழையும் பொது கவிதைகள் இலட்சியவாதியின் தோட்டாக்கள் அல்லஅவைகள் வெறுமனே ஒரு சாமான்ய மனிதனின் அனுபவங்களே என்ற வியப்பை தருகின்றன.
இந்த சராசரி மனிதன் பல்வேறு பரிமாணங்களில் மகளிடம் அன்பு கனிந்த தந்தையாகவும், மகனிடம் பொறுப்பு மிகுந்தவராகவும், சிறந்த வாசகராகவும், மனம் குழம்பிய குடிமகனாகவும் கவிதைகளில் சிதரிக்கக்கப்படுகிறார். "அணிலாடுமறை" கவிதையில் கவிஞன் சராசரி மனிதனாக அற்ப விசயங்களை நேசிக்கிறவனாக, 

இயல்பில் எதையும் 
செல்லப்பிராணியாக 
வளர்க்கத் தெறியாத எனதறையுள்
எனத் தொடர்ந்து
மகளின் பிடிவாதத்தால்
கதைசொல்லும் கனிவானத் தகப்பனாக மாறுகிறார். ஆனால் கதையில் தந்தைக்குள் இருக்கும், சராசரி மனிதனுக்குள் இருக்கும் கவிஞன் வெளிப்பட்டு 
சகியின் காதலை 
அக்கினியில் பிரவேசிக்க செய்தவனின் 
துரோகக் கோடுகளை
சுமந்து திரியும் அதன் 
கதையை கூறினேன்
என பழமையின் மீது தோட்டாக்களை நவீனக் கவிஞன் வெளியேற்றுகிறான்.
         கவிதைகளில் மகனைப் பற்றி பேசும்போது மட்டும் அன்பு கனிந்தவராக இல்லாமல் பொறுப்பு மிக்க தந்தையாக வெளிப்படுகிறார். மகளை பொறுத்தவரை  தாராளமாகவும் உணர்வு பெருக்குடன் இருக்கும் தந்தை மகன் என்றதும் உணர்வுகள் அடைபட்டு "தலையணை" கவிதையில்,

மற்றொரு நாளில் 
உரித்து வைக்கப்பட்ட ஆரஞ்சுகள் அருகே 
சொடாபீம் அமர்ந்திருக்க 
அதுவும் எனக்கென்றான் 
கிழியும் வரை  வேறேதும் இல்லையென 
நிபந்தனைக்குப்பின் 

என கவிதையில் தந்தையின் பொறுப்புணர்வு மேலிடுகிறது. அதோடு தலையணை மேகத் துண்டாக கனவுலகில் மாயமாகிறது. இந்த சராசரி தந்தையை பார்க்கும் பொது டால்ஸ்டாயின் அன்னா கரினினாவில் வரும் சம்பவம் நினைவிற்கு வருகிறது. நாவலின் ஆரம்பத்தில் குழப்பம் மிகுந்த சூழ்நிலையில் ஒப்லான்ஸ்கி தன் மகன் மற்றும் மகளை அணைக்கும் பொது தந்தையின் மகள் மீதான அன்பு ஈர்ப்பு மிகுந்ததாகவும் அதுவே மகன் 
மீது இடைவெளி கொண்டதாகவும் உணருவார் . இது அனுதின சாதாரண வாழ்வியல்  விசயமாக இருந்தாலும் இலக்கியத்தில் பிரபஞ்சமளவில் இயங்கும் மனித உணர்வாக மிளிருகிறது. 
கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் சிறு விசயங்களை பெரியசாமி தன் கவிதைகளில் அழகியல் ததும்ப மெருகூட்டுகிறார். விலைவாசிப் பிரச்சனை சாமான்ய மனிதனின் மிகப்பெரிய எதிரி அதே நேரத்தில் அதிகம் கணக்கில் கொண்டு பேசப்படாத ஒன்று. தைப்பற்றி பேசினாலும் அதை ஒரு பிரச்சனையாகவே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. தன் மாய வார்த்தைகளில் பிரச்சனையை இவர் கவிதைப்படுத்துகிறார்.  "வேர்கள் வான் நோக்கி வளர்ந்தன" கவிதையில் 

ஆடுமாடுகள் அந்தரத்தில் பறந்தன 
அந்தரத்திலேயே தங்கின 
................
...
லிட்டர் ஐம்பதுக்கு விற்றது காக்கைப்பால் 
மும்மடங்கு விலை அதிகம் குருவிப்பால் 
...............,,..........
இப்படிதான் 
காக்கை மருத்துவரை அணுகினேன் 
ஒரு  மண்டலம் காக்கைக் குஞ்சின் மூத்திரம் தேக்க 
குமாகிவிடும் தீராத மூட்டு லியுமென்றார்.

என கேலியுடன் முடிந்தாலும்  த்தியாவசியத் தேவைகளே  பூர்த்தியாக்கப்படாமலிருக்கும் அவலத்தைதான் கவிதை தாங்கி நிற்கிறது. இதே போன்ற வலியைத்தான் "யாருடைய கைகள் அவை" நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த சராசரி மனிதனுக்கு தன் குடும்ப தேவைகள் பூர்த்தியாக்கப்படாதது முற்றும் பெரிய பிரச்னை அல்ல, இவனை நோக்கி அரசியல் சதியும் வாழ்க்கையை இல்பொருளாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை "நெட்டிலிங்கப் பூ" நமக்கு தெரிவிக்கிறது. ஓருபுறம் கறைபடிந்த அரசியல் தன் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்க அதைத் தவிர்க்க "மூதாயில் 

பெரும் மூச்சிரைப்போடு 
பாட்சா மலையுச்சி 
அடையும் சராசரி மனிதனுக்கு காத்திருப்பது 

விந்து உறைந்த லூப்புகளும் 
விட்டு சென்ற பரா ஜட்டிகளும்
..................
டாஸ்மாக் பாட்டில் நீர் உறைளெ 
மாசுபட்ட சீரழிந்த சமுகமே.
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் மத்தியில் இவனுக்கு இருக்கும் ஒரே ஆதரவு புத்தகங்களில் உயிர் கொண்டிருக்கும் எங்கல்சும், மார்க்சும், மார்க்வேசும், போர்ஹெவும் தான். தன் "மேல்தளத்தில் அமைந்த குறு அறைக்குள்" நுழைந்த உடனே இந்த மேதைகள் இவனது அந்தரங்க உலகத்தில் புத்தகங்களில் இருந்து உயிர் பெற்று உரையாடல் நடத்த வந்து விடுகின்றனர். நிஜ உலகிலிருந்து பாலாவும்  கலந்து கொள்கிறார். இந்த உரையாலில் சராசரி மனிதன் யாரும் பொருட்படுத்தாத தன் பிரச்சனைகளை முக்கியப்படுத்தி பேச ஒரு உத்தியை கண்டுபிடித்துவிடுகிறார். இவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இயல்பாகிவிட்ட நிலையில் யதார்த்தத்தை மாயாஜாலமாக்குகிறார். "அக்டோபர் முதல் நாளில்" மரித்த தேசப்பிதாவை தட்டியெழுப்பி  கடைதெருவில் தன்னோடு நடக்க வைக்கிறார். சமூகச் சீரழிவை கண்ட தேசப்பிதா " ஐயோவென மயங்கி சரிகிறார் "பாகெட்  பாலை, அதுவும் கலப்படம், ஆட்டுப்பாலென கொடுத்து "இனி உங்கள் ஜனன நாளில் மட்டும் வாருங்கள்" என்று வழியனுப்பபடுகிறார்.
ஆக கவிதைத் தன் பாடுபொருளாக அன்றாட பிரச்சனைகளைத் தவிர்த்து தன் அழகியலுக்காக மாத்திரம் பொருண்மைகளைத் தேடுமானால்  அது   சமூகப்  பொறுப்பற்ற ஒரு  அழகு பொருள் மட்டுமே. அதே  நேரத்தில்  சமூகப் பிரச்னைகள் ட்டுமே கவிதையின் பொருண்மையானால் யதார்த்தம் இலக்கியத்தின் மீதான தன் பொறுப்பை உதாசீனம் செய்கிறது. இரண்டிற்குமான பொறுப்பு பரஸ்பரமானது. இவைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடமாகத்தான் நா. பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளியை  நான் பார்க்கிறேன். இங்கு காண்பிக்கப்படும் புற உலகம் யதார்த்த உலகமாக இருப்பினும் கவிஞனின் ஆன்மத்தின் வழியே யதார்த்தம் மாயத்தில்  கவிதைப்படுத்தப்படுகிறது.