வானம்பாடி
இயக்கமும் அதனது வரலாற்றுப் படிப்பினைகளும் குறித்து கோவை ஞானி எழுதியிருக்கும் நூலை(வானம்பாடிகளின்
கவிதை இயக்கம் : வரலாறும் படிப்பினையும் : 2011 : காவ்யா) வாசித்தேன். இது குறித்து
அக்னிபுத்திரன், தமிழ்நாடன் போன்றோரும் எழுதியிருப்பதாக அறிகிறேன். இந்தக் கட்டுரை
மேற்கோள்களையும் குறிப்பான தரவுகளையும் முன்வைத்துப் பேசும் கட்டுரை இல்லை. வானம்பாடிகள்
இயக்கமும் அதனது வரலாறும் அதன் மீதான விமர்சனங்களும் அரசியலும் கவிதையும் எனும் பிரச்சினை
சார்ந்து எழுப்பியிருக்கும் கருத்து சார்ந்த கேள்விகளை எதிர்கொள்வதே இக்கட்டுரையின்
நோக்கம்.
வானம்பாடி
முழு இதழ்களையும் நான் வாசித்திருக்கிறேன். கோவை வடகோவை தேசியக் கல்வியகத்தில் நடந்த வானம்பாடிகள் கூட்டங்களில்
பார்வையாளனாக இருந்திருக்கிறேன். வானம்பாடிகளின் பிளவின் பின் வெளியான ‘வெளிச்சங்கள்’
தொகுதி வெளியீட்டில் கலந்து கொண்டிருக்கிறேன். வானம்பாடிகளுக்குள் முரண்கள் உச்சத்தில்
இருந்த காலத்தில் தேசியக் கல்வியகக் கூட்டமொன்றில் அரசியலும் கவிதையும் குறித்து ஒரு
விரிவான கட்டுரைiயுயும் எழுதி நான் வாசித்திருக்கிறேன். அக்கட்டுரை பல வாதப் பிரதிவாதங்களையும்
கோபதாபங்களையும் அன்று எழுப்பியது.
அப்போது
எனது கல்லூரி நாட்களின் ஆரம்ப ஆண்டுகள் என்பதும் இப்போது ஞாபகம் இருக்கிறது. வானம்பாடிகள்
ஒரு இயக்கமாகச் செயலிழந்த பின்னும் வாசிப்பு மற்றும் தனிப்பட்ட உறவு எனும் வகையில்
கோவை ஞானி, சிற்பி, புவியரசு போன்றோரையும் நான் தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்.
தமிழகத்தில்
வானம்பாடிகளின் கவியரங்கம் நடக்காத கல்லூரிகளே அன்று இல்லை எனலாம். அக்னிபுத்திரன்
மற்றும் மு.மேத்தா இருவரும் அப்போது கோவை அரசுக்கல்லூரி தமிழ்த்துறையில் பணியாற்றி
வந்தார்கள். வானம்பாடிகளின் தோற்றுநர்களில் ஒருவரான முல்லை ஆதவன் எனது ஆரம்பப் பள்ளி
நாட்களைக் கழித்த உப்பிலிபாளையத்தைச் சேர்ந்தவர். ஞானியும் புவியும் முறையே யூனியன்
பள்ளி மற்றும் நரசிம்மலுநாயுடு பள்ளி தமிழாசிரியர்கள். சிற்பி பொள்ளாச்சி தனியார் கல்லூரித்
தமிழ்ப் பேராசிரியர்.
வானம்பாடி
தோன்றிய அறுபதுகளின் இறுதி, அது வளர்ச்சியுற்ற எழுபதுகள் என்பன உலக அளவில் பாரிஸ் மாணவர்-தொழிலாளர்
எழுச்சியும், இந்திய அளவில் நக்சலிசத்தின் தோற்றமும் நிகழ்ந்த காலம். வியட்நாமுக்கு
ஆதரவாக அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு கொழுந்துவிட்ட எரிந்த காலம். பஞ்சாலைப் பாட்டாளி
வர்க்கமும் தொழிற்சங்க இயக்கப் பலமும் நிறைந்த கோவையை ‘எம் கோவைநகர் இன்னுமொரு பெட்ரோகிராட்’
என அக்னிபுத்திரன் தனது கவிதையொன்றில் குறிப்பிட்டார்.
வானம்பாடியின்
தோற்றம் நேர்ந்த சூழல் என்பது பின்னணியாக பற்பல
கலாச்சாரப் பண்புகளைக் கொண்டிருந்தது. இந்திய
தேசிய அரசியல் உத்வேகத்தில் கவிதை எழுதிய பாரதி, திராவிட தேசிய அரசியல் உத்வேகத்தில்
கவிதை எழுதிய பாரதிதாசன் போன்றோர் அதன் முன்பு இருந்தனர். ஞானி குறிப்பிடுவது போல கம்பர்,
வள்ளுவர் போன்றோரது அறம் கோரல் கவிதை மரபாக அவர்கள் முன் இருந்தது. நக்சலிச எழுச்சி
அதன் முன்பு இருந்தது. அதன் ஆதர்சத்தில் ஆந்திராவில் எழுந்த கவிதை இயக்கமான திகம்பகர கவிகள் இயக்கமும் எண்ணற்ற வகையில் இவ்வகைக்
கவிதைகளை எழுதிய வங்கக் கவிகளும் சமகாலத்தில் இருந்தார்கள். காங்கிரஸ் தேசியம்-திமுக தேர்தல் திராவிடம் போன்றன சரிந்த
நம்பிக்கைகளாக இருந்தன. மார்க்சியம் இவர்களுக்கான உந்துதலாக இருந்தது.
இந்திய
தேசியம்-பார்ப்பனீய அக உலக தரிசனம் கொண்ட எழுத்து-மணிக்கொடிப் பரம்பரையினரின் புதுக்கவிதை
மரபு அவர்கள் முன் இருந்தது. வுடிவ அளவில் யாப்பை மீறிய, திராவிட-மார்க்சிய ஒவ்வாமை
கொண்ட இந்த மரபாளர்கள் அக உலக தரிசனங்கள் எனும் பெயரில் காமமும் இருத்தலியல் பிரச்சினைகளும்
சார்ந்த தத்துவ விசாரக் கவிதைகளை எழுதினார்கள். இவர்களது மரபு மீறல் என்பது கவிதை வடிவம்
எனும் தளத்தில்தான் இருந்ததேயொழிய, இவர்களது சமூக தரிசனம் என்பது இந்தியதேசிய-பார்ப்பனீய
கருத்துலகாகவே இருந்தது.
கவிதை
அக உலக பற்றியதுதான் எனினும் அந்த அகம் புற உலகால் உந்துதல் பெறுகிறது என்பதும், அந்தப்
புற உலகின் மீதும் அகம் விணைபுரிகிறது என்பதும் இவர்களுக்கு ஒப்பமுடியாததாக இருந்தது.
கவிதை சமவேளையில் அகவயமானதும் சமூகவயமானதுமாக இருக்கிறது. இதற்கான சான்றுகளை தமிழக-இந்திய-உலக
நிலைமைகளில் நாம் பார்க்க முடியும். கம்பன்-வள்ளுவன், பாரதி-பாரதிதாசன், ஷெல்லி-ஆடன்
என்பவர்கள் வெகு சாதாரணமான எடுத்துக் காட்டுக்கள். இவர்களிடம் கவிதை அரசியல் தன்மையும்
பெற்றிருக்கிறது.
அகமும்
புறமுமான இந்தத் தரிசனம் மார்க்சியர்களிடம் வேறொரு உச்சபட்டசமான பாய்ச்சலைப் பெறுகிறது.
இருபதாம் நூற்றாண்டு துவக்கம் இதற்கான மகத்தான சான்றுகள் உண்டு. மயக்காவ்ஸ்க்கி, எவ்ஜனி
எவ்துசென்கோ, ரசூல் கம்சதோவ் என ரஷ்யக் கவிகள், பாப்லோ நெருதா, செஷ்ஷார் வல்லேஜா, எர்னஸ்டோ
கார்டினல் என இலத்தீனமெரிக்க தேசவிடுதலைக் கவிகள், பாப் டைலன், ஜான் லென்னான் போன்ற
யுத்த எதிர்ப்புப் பாடகர்கள், சினு அச்சேபா, வோலெ சோயிங்கா போன்ற நிறவெறி எதிர்ப்பு
ஆப்ரிக்கக் கவிகள், பால் ராப்சன், ஆத்ரே லூர்ட் போன்ற ஆப்ரிக்க-அமெரிக்கக் கவிகள்,
பாலஸ்தீனக் கவிஞனான மஹ்முத் தர்வீஷ் போன்றோர் கவிதையை சமூகமயப்படுத்தியதில் மிகப் பெரும்
பாய்ச்சலை நிகழ்த்தினார்கள்.
ஈழக்
கவிதை இந்தக் கண்ணியில் பிறிதொரு பரிமாணம். என்.டி.ராஜ்குமார், மாலதி மைத்ரி போன்றவர்கள்
இம்மரபின் தொடர்ச்சியாளர்கள்.
வானம்பாடிகள்
தொடர்பான தாக்குதலை வெங்கட் சாமிநாதன், ராஜமார்த்தாண்டன், பிரமிள் தர்மு அருப் ஜீவராம்
போன்றவர்கள் முன்னெடுத்தார்கள். ராஜமார்த்தாண்டன் : ‘வானம்பாடி இதழில் வெளியான பெரும்பாலான
கவிதைகள் மேடை முழக்கங்களாகவும் அரசியல் கோஷங்களாகவும் துணுக்குகளாகவுமே அமைந்துள்ளன.
அவற்றில் கவிதையைத் தேடுவது உமிக் குவியலில் அரிசி மணிகளைப் பொறுக்கும் வேலைதான்’ என்றார்.
வெ.சா. ‘இவர்கள் கட்சி சார் கம்யூனிஸ்ட்டுகள், இவர்களுக்குக் கவிதை வராது’ என்றார்.
‘கவிதை எழுதவேண்டாம், களையெடுக்கப் போங்கள்’ என்றார் பிரமிள். ‘கோஷங்களும் முழக்கங்களும்
கவிதைகள் ஆக முடியாது. கட்சி சார் கம்யூனிஸ்ட்டுகள் கவிதை எழுத முடியாது. புரட்சிபற்றிப்
பேசுபவர்கள் கவிதை எழுதக் கூடாது. அவர்கள் களத்தில்தான் நிற்க வேண்டும்’ என்பது இவர்தம்
நோக்குகள்.
இதனைச்
சொல்வதற்கான வெ.சா. ராஜமார்த்தாண்டன், பிரமிள் போன்றவர்க்கான தகைமைகள் என்ன? இவர்கள்
மயக்காவ்ஸ்க்கி, பெர்ட்டோல்ட் பிரெக்ட், பாப்லோ நெருதா, மஹ்முத் தர்வீஷ், ரோக் டால்டன்,
பால் ராப்சன் போன்ற புரட்சிகரக் கட்சி சார்ந்த, தேசிய விடுதலை இயக்கம் சார்ந்த, நிற
வெறி எதிர்ப்பு சார்ந்த, ஆயுத விடுதலைப்போராட்ட அரசியல் அனுபவம் சார்ந்த படைப்பாளிகள்
குறித்த இவர்களது வாசிப்பு அல்லது சொந்த அனுபவம் என்ன? வெ.சா.ராஜமார்த்தாண்டன், பிரமிள்
போன்றவர்கள் இவர்கள் குறித்து எதுவேனும் எழுதியிருக்கிறார்களா? அல்லது திகம்பர கவிகள்,
வங்கக் கவிகள் குறித்து இவர்களுக்குக் குறைந்த பட்ச வாசிப்பு அறிவேனும் இருக்கிறதா?
அல்லது பின்னாளில் ஈழ தேசியகீதம் எழுதிய பிரமிள், கவிதையை விடுத்து, ஈழத்தில் களத்தில்
துவக்கெடுத்துப் போராடப் போனாரா?
வானம்பாடிகளுக்குள்
கோட்பாட்டாளராகவும் கவிஞராகவும் இருந்த கோவை ஞானி அன்று இவர்களை எதிர்கொண்ட முறை மிகவும்
பலவீனமான அடிப்படைகளையே கொண்டிருந்தது. வானம்பாடிகள் தொடர்பான வெ.சாவின் கட்டுரைக்கு
பதில் எழுதிய அவர் (சுந்தர ராமசாமியின் மேற்பார்வையில் இருந்த ‘தெறிகள்’ இதழ் தனது
பதில் கட்டுரையை வெளியிடவில்லை என்பதை ஞானி தனது நூலில் குறிப்பிடுகிறார்) பிரமிளுக்கு,
அவர் நல்ல கவிஞர் என்பதால் அவரை எதிர்த்து எழுதவில்லை என்று சொல்கிறார். மிகமிகப் பலவீனமான
விமர்சனத் தர்க்கம் இது.
கட்சி
உறுப்பினர்களாக இருந்தால், கட்சி சார்பாளர்களாக இருந்தால் கவிதையில் அரசியல் உணர்வு
முன்னணிக்கு வந்து கவித்துவ உணர்வு இரண்டாம் பட்சமாகிவிடும் என ஞானியும் சொல்கிறார்.
இந்த நிலைபாட்டை எடுத்துவிட்டு வானம்பாடிகளில் யாரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்
இல்லை என்று வெங்கட்சாமிநாதனிடம் ஸ்தாபிப்பதற்கு ரொம்பவும்தான் சிரமப்படுகிறார். இது
தமிழ் இலக்கியவாதிகளிடமும் விமர்சகர்களிடமும் ஒரு வியாதியைப் போலப் படிந்திருக்கிறது.
‘நான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இல்லை அல்லது ஒரு விடுதலை இயக்கத்தின் உறுப்பினராக
அல்லது சார்பாளராக இல்லை‘ என்று நிரூபிப்பது ஒரு இலக்கியத்தகுதி மாதிரி ஆகியிருக்கிறது.
இது படு அபத்தமான, அறிவுக்குப் புறம்பான நிலைபாடு.
மயக்காவ்ஸ்க்கி,
பிரெக்ட், பாப்லோ நெருதா, பிக்காசோ, ஸரமாகோ, பிரைடா கலோ, ரிவைரா, தியோ ஆஞ்ஜல பெலோஸ்,
செர்காய் ஐசன்ஸ்டைன் போன்ற உலகப் புகழ் வாய்ந்த கவிகள், நாவலாசிரியர்கள், ஓவியர்கள்,
திரைப்பட இயக்குனர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாகவும் சார்பாளர்களாகவும் இருந்த
காலகட்டத்தில்தான் தமது படைப்பு உச்சங்களிலும் இருந்திருந்திருக்கிறார்கள்.
பாரதியும்
பாரதிதாசனும் தேசிய-திராவிட அரசியல் சார்பு கொண்டவர்கள் தானே? எழுத்து-மணிக்கொடிப்
பரம்பரையின் கருத்துலக சார்பு இந்திய தேசிய-பார்ப்பனீய அரசியல்-கருத்துலக சார்புதானே?
இன்குலாபும் செயப்பிரகாசமும், ஞானியே சொல்வது போல வானம்பாடியின் ஆரம்ப நாட்களில் சிற்பி,
புவியரசு உள்ளிட்ட வானம்பாடிகள் அனைவரையும் வட இந்திய வசந்தத்தின் இடிமுழக்கம் அல்லவா
ஆகர்சித்தது? சா.தமிழ்ச்செல்வனும், சு.வெங்கடேசனும், பொன்னீலனும் கம்யூனிஸ்ட் கட்சியில்
இருக்கும் காலத்தில்தானே ‘வெயிலோடு போயும்’ ‘காவல்கோட்டமும்’ ‘ஊற்றில் மலர்ந்ததும்‘
‘புதிய தரிசனங்கள்’ நாவலும் எழுதுகிறார்கள்? இதனால் இவை இலக்கியம் அல்லாது போய்விட்டதா?
இதற்கு பிரமிளிடமும் வெ.சாவிடமும் ராஜமார்த்தாண்டனிடமும் நல்வகைக் கலை இலக்கியச் சான்றிதழ்
பெறவேண்டுமா என்ன?
‘குசுவிட்டாலும்
சிவப்பாய் விடும் என் சின்ன நண்பனே’ என இன்குலாபை நக்கலடித்து ‘ஞானரதம்‘ ஒரு கவிதை
வெளியிட்டது. அதன் ஆசிரியர் தேவபாரதி ‘இன்குலாப் எழுதுபவவை கவிதைகளே அல்ல’ என்றார்.
ஞானி இன்குலாபுக்கு ஆதரவாகப் பதில் எழுதினார். இன்குலாபை ‘கவிஞர்களின் கவிஞர்’ என ஞானி
குறிப்பிட்டார். அதே ஞானி வெ.சாவுக்கான பதிலில் இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி சாராதவர்கள்
என நிரூபிக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார். வெ.சா. போன்ற அதே கண்ணோட்டம் கொண்டிருந்த
பிரமிளுக்கு அவர் நல்ல கவிஞர் என்பதனால் ஞானி பதில் எழுதவில்லை. இது ஞானியிடம் ஆரம்பத்தில்
இருந்த கோட்பாட்டுத் தளும்பல். இந்தத் தளும்பல் அவரை ஜெயமோகனது இலக்கிய ஆராதகராகவும்,
ஜெயமோகனது படுகேவலமான இந்துத்துவ ஆதரவு அரசியலை காணாது மேவிச் செல்பவராகவும் ஆக்கியிருக்கிறது.
மே 19 முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னான கொழும்பு உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
தொடர்பாக, அதனது அரசு ஆதரவுப் பண்பு தொடர்பாக இரட்டை நிலைபாடு எடுப்பவராகவும் அவரைக்
கொண்டு நிறுத்தியிருக்கிறது.
வானம்பாடியினுள்
எழுந்த முரண்பாடும் உடைவும் தொடர்பாக ஞானியின் மதிப்பீடுகளைத் தொகுத்தால் இவ்வாறாக
இருக்கும் : வானம்பாடி இதழ் ஆரம்பத்தில் எந்த ஒரு இலக்கிய இயக்கத்தின் இதழாகவும் துவங்கப்படவில்லை. ‘வானம்பாடி கவிதா மண்டலம்’ எனும் முயற்சி அக்கினிபுத்திரனால் முன்னெடுக்கப்பட்டபோது
அதனுள் முரண்பாடுகள் கூர்மையடைந்தன. படைப்பைக் கோட்பாடும் தத்துவமும் கீழ்மைப்படுத்திவிடும்
எனும் நோக்கில் சிற்பி-மேத்தா-புவியரசு போன்றோர் வானம்பாடி இதழை சிற்பியின் தனிமனித
ஆதிக்கத்தின் கீழ் கொணர்ந்து ஞானி-அக்னிபுத்திரன் போன்றவர்களை அவர்கள் வெளியேற்றினர்.
‘எம்மைத் தாங்குத் வல்லமை எந்தக் கூட்டுக்கும் இல்லை’ என வானம்பாடியில் தலையங்கம் எழுதினார்
சிற்பி.
தமிழ்நாடன்,சிற்பி,புவியரசு,சிதம்பரநாதன்,சக்திக்கனல்
போன்றவர்கள் அவசரநிலையை ஆதரித்தனர். ‘இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா’ எனும்
நிலைபாட்டுக்கு வந்தனர். அவசரநிலையை ஆதரித்த (பின்னாளில் அது தவறு என சுயவிமர்சனம்
செய்துகொண்ட) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றத்துடன்
அவர்கள் நெருங்கியவர்களாக ஆகினர்.
ஞானி
இன்னும் ஸ்தூலமாகச் சொல்லாத ஒரு பெரும் அரசியல் முரண்பாடு வானம்பாடியின் உடைவுக்குக்
காரணமாக இருந்தது. கோவை ஞானி அன்றைய நிலையில் உச்சபட்ச மார்க்சிய தரிசனம் என முன்வைத்த
மாவோயிசம் மற்றும் ஆயுதவிடுதலைப் போராட்டப் பாதை எனும் அரசியல்தான் அது. புதுக்கவிதை
ஒரு வடிவம் எனும் வகையில் வானமாமலை-கனகசபாபதி-மதுரை கலை இலக்கியப் பெருமன்றத்தினர்-திகசி
என இவர்களுக்கிடையில் நடந்து வந்த விவாதத்தின் இன்னொரு பக்கமாக சோவியத் சார்பு இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கலை இலக்கிய அமைப்பான கலை இலக்கியப் பெலுமன்றத்திற்கும்
ஞானி முன்வைத்த மாவோ சார்பு கம்யூனிசத்திற்குமான போராட்டக்களமாகவும் வானம்பாடி கவிதா
இயக்கம் இருந்தது.
வானம்பாடி
இதழ்களில் இருந்தும் வானம்பாடிக் கவிஞர்களின் தனித்தனித் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தேடுக்கப்பட்ட
கவிதைகளின் தொகுதி என்பது கவிதையை எவ்வாறு அவர்கள் சமூகவயப்படுத்தினார்கள், இடது அரசியல்
பிரக்ஞையை எவ்வாறு தமிழ்க் கவிதைக்குள் கொணர்ந்தார்கள் என்பதற்கான வரலாற்றுச் சான்றாக
இருக்கும். நகர் சார்ந்த-நடுத்தர வர்க்க அகவயம் சார்ந்த-இந்திய தேசிய மற்றும் பார்ப்பனிய
கருத்துலகு சார்ந்த புதுக்கவிதையை வானம்பாடிகள் இந்தத் தளைகளில் இருந்தெல்லாம் விடுவித்தார்கள்.
‘காதவைத் திற, காற்று வரட்டும்-கவ்விய இருளினி கலையட்டும்’ என்று புவியரசு எழுதியபோல
உலக அளவிலான, இந்திய அளவிலான அன்றைய ஒடுக்கப்பட்ட மக்களது பிரச்சினைகளை அவர்கள் தமது
கவிதைக்குள் கொணர்ந்தார்கள். கல்லூரிகளிலும் கிராமங்களிலும் அவர்கள் கவிதையைக் கொண்டு
சென்றார்கள். கவிதையை சமூகயவயப்படுத்தியதன் வழி அதனது எல்லைகளை அகலித்த அவர்கள் அதனை
ஜனநாயகப்படுத்தினார்கள்.
அரசியலையும்
கவிதையையும் பிரித்து வைத்து கவிதையை பூஜையறைப் பண்டமாக ஆக்குவது சனாதனவழி. நடுத்தரவர்க்க
வழி. கவிதை தெருவுக்கு வருவதை இவர்கள் விரும்புவதில்லை. கவிதையில் கவிச்சையும் இரத்த
வாடையும் வியர்வை நாற்றமும் இவர்களுக்கு ஒவ்வாமை. இன்றும் தமிழ்க் கவிதையில் அரசியல்
கவிதைக்கு யாரை இவர்கள் உதாரணமாகக் காட்டுகிறார்கள்? யார் இதனைக் காட்டுவது? இவர்களது
வாழ்நிலையும் வாசிப்பும் சமூகத்தேர்வுகளும் எத்தகையது? காந்திய அகிம்சையையும் இந்திய
தேசிய வன்முறையையும் ஆதரிக்கிற, சிறுபான்மையின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை,
அவர்களது வெடிப்பை தொந்தரவாக, இம்சையாக, மனப்பிறழ்வாகப் பார்க்கிற இலக்கியவாதிகளுக்கு
அரசியல் கவிதையை மதிப்பிடுவதற்கான தகைமை என்ன?
எழுத்து-மணிக்கொடி-கசடதபற-தெறிகள்
என அகவய-இருத்தலியல் புதுக் கவிதைகளை முன்னெடுத்தவர்கள் திராவிட-மார்க்சிய ஒவ்வாமை
கொண்ட இந்திய தேசிய-பார்ப்பனீய உலக நோக்கு கொண்டவர்களாக இருக்க, சமகாலத்தில் பிரச்சினை-பிரகடனம்-சிகரம்-வண்ணங்கள்-மகாநதி-
தொடுவானம்-வேள்வி-காற்று என ஒரு சிறுபத்திரிக்கை மரபு இவர்களுக்கு எதிர்திசையில் உருவாகியே
இருந்தது. வானம்பாடி இதழ் மரபை இன்றைய நிலையில் வைத்து மதிப்பிடுவதானால், அதனது இடைநிலை
சாதி இயல்பால் அது தலித் பிரக்ஞை மற்றும் தீவிர பெண்ணியம், இந்துத்துவ எதிர்ப்பு போன்ற
வெளிகளில் இன்று புறப்பட்டிருக்கும் படைப்பாளிகளின் பிரக்ஞைக்கு அவர்களால் ஈடு கொடுத்திருக்க
முடியாது எனவே சொல்லத் தோன்றுகிறது. என்றாலும், சிற்பி சோதனைபூர்வமாகச் செய்த கவிதைக்
கதைகளில் சாதியெதிர்ப்பை அவர் சித்தரிக்கவே செய்தார்.
எழுத்து
மரபுக் கவிதைகளின் அகவய-இருத்தலியல் கவிதைகளை தமது இடது தத்துவ நோக்கில் வானம்பாடிகளுக்குள்
முயன்ற ஒரு கவிஞர் புவியரசு. அவரது ‘இதுதான்‘, ‘மீறல்’ போன்ற தொகுதிக் கவிதைகள் இத்தகைய
பண்புகொண்டன. அவரது ‘ஏலி ஏலி லாமா சபக்தானி’ ஒரு சர்வதேசியப் பண்புகொண்ட கவிதை. கங்கை
கொண்டானின் ‘கூட்டுப்புழுக்கள்‘ தொகுதி, சிற்பியின் ‘சர்ப்ப யாகம்’, வைகறை வெளியிட்ட
‘வெளிச்சங்கள்‘ தொகுதிக் கவிதைகள் போன்றன அற்புதமான அகவய-சமூகவயக் கவிதைகளைக் கொண்டவை.
ஞானியின் ‘கல்லிகை’ ஒரு கவிதைச் சாதனை.
என்னளவில்
தமிழின் அரசியல் கவிதைக்கு அதனது மொழி-செயல்பாடு-பிரக்ஞை என அனைத்து வகையிலும் மிகச்
சிறந்த எடுத்துக்காட்டு கவிஞர் இன்குலாபின் கவிதைகள்தான். ‘தாஹிரா ஓ தாஹிரா’, ‘பிரமிடுகளில்
இருந்து அடிமைகள் விடுதலைப் பிரகடனம் செய்கிறார்கள்’, ‘மனுஷங்கடா நாங்க மனுசங்கடா‘
போன்ற அவரது கவிதைகள்தான் தமிழின் உன்னதமான அரசியல் கவிதைகள். இனவிடுதலை, தலித், பெண்ணியக்
கவிதைகளின் முன்னோடி அவர். ஆத்மாநாம், கழிவிரக்கமும் மனப்புழுக்கமும் கொண்ட மத்தியதர
வர்க்கத்தின் அரசியல் கவிஞன். பாப்லோ நெருதாவுக்கும் விஸ்லாவா சிம்போர்ஸ்க்காவுக்கும்
இடையிலான வித்தியாசம் போன்றது இது.
வானம்பாடிகள்,
செரபண்டராஜூ போன்ற ஆந்திர திகம்பரக் கவிகளை, சச்சிதானந்தன், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்
போன்ற மலையாள அரசியல் கவிகளை, அரசியல்-கவிதை எனப் பிரித்துப் பார்க்க முடியாத ஈழத்தின்
கவிஞர்களைத் தொகையாகத் தமிழக்குக் கொண்டு வந்தார்கள். இவர்தம் அரசியலுணர்வைத் தம்முணர்வாக
தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். முப்பது ஆண்டுகளின் பின் இன்று திரும்பிப்
பாரக்கிறபோது, எழுபது-எண்பதுகளில் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் வானம்பாடிகள் ஒரு வரலாற்றுக்
கடமையை முன்னெடுத்திருக்கிறார்கள். அந்த அரசியல் பிரக்ஞையின் தொடர்ச்சியாகவே இன்றைய
தலித்-பெண்ணிய அரசியல் கவிதைகளை என்னால் உணரமுடிகிறது. வானம்பாடிகளின் தேர்ந்தெடுத்த
கவிதைகளின் ஒரு தொகுதி நெடிய தமிழ்க் கவிதை வரலாற்றில் அவர்களது தவிர்க்கவியலாத இடத்தை
நிறுவும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு
அடுத்த
வீட்டுப் பெண்ணின் கூந்தல் உலர்த்துதலைச் சாளரத்தின் ஊடே பார்த்து ஒருவருக்கு ரோமாஞ்சலியுடன்
சில்லென ஊற்றெடுப்பதும் கவிதைதான். கொடுங்கோலனிடமிருந்து
தப்ப குதிரையிலேறி நாடு நாடாக அலைந்து, உயிர்தப்பி இறுதியில் அவனிடமே அகப்பட்டு மருத்துவமனையில்
மூச்சுத்திணறி மரணமுறும் பாப்லோ நெருதாவின் கவிதையின் அரசியலை, நீ புரிந்து கொள்ள வேண்டும்
என இவரிடம் கெஞ்சவேண்டிய அவசியம் நெருதாவின் வழிதொடர்பவருக்கு இல்லை அல்லவா?