கவிதை எஃப்.எம் - பா.சரவணன்

தி.பரமேஸ்வரியின் ‘தனியள்’

துண்டை வைத்து விளையாடும் மகளின் விளையாட்டைக்கூட விளையாட்டாகப் பார்க்க முடியாத மன அழுத்தத்தைத் தருகிறது கவிஞருக்கு…ஏன்?

சின்னதொரு துண்டை
திரும்பத் திரும்பக் கட்டி
அழகு பார்க்கிறாள் செல்ல மகள்
முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறாள்
ஒரு குட்டி நாற்காலியே வீடாகிவிடுகிறது
துண்டைக் கட்டிக் கொண்டு தாயாகவும்
கழற்றியவுடன் மகளாகவும்
மாறிக்கொள்ள முடிகிறது அவளால்.
துண்டு ஒன்றுதான்…
அதுவே
அவளது மகிழ்ச்சியும்
என் துக்கமும்                            

                     ***

’வீட்டை விட்டு ஓடிப்போவது’ என நாம் கூறும் உடன்போக்கு மிகப்பழமையானதுதான்; ஆனால் யாருடன் என்பதில்தான் மேலும் ஒரு திருப்பம் நிகழ்கிறது இந்தக் கவிதையில்…. :

வண்டுகள் மொய்க்கும் மாலை சூடிய
தலைவன் கையுறையாய் அளிக்கும்
இந்தத் தழையாடை
எனக்குப் பிடித்தமில்லை

செவ்வான் மேனியில் மிளிரும்
அந்த வேற்றூர்த் தலைவனும்
பன்னெடுங்காலமாய் பித்தாய் அலைபவன்

முருங்கைப்பூக்கள் சிதறிக் கிடக்கும்
என் வீட்டு முற்றத்துள்
நுழையும் காலம் கருதிக் காத்திருக்கிறான்
தொலைதூரத்து மலைத் தலைவனொருவன்

நானோ,
காயா நிறமொத்த தண்ணரும் மேனியும்
செவ்வழி நல்யாழ் பண்ணிசைக் குரலும்
நறவமன்ன இளநல முலையுமாய்க்
காந்தள் கரத்து அயலகக் கன்னியுடன்
கடுங்குரல் ஆந்தை, பருந்துகள் ஒலிக்கும்
சிறு பரற்கற்கள் மலிந்து கிடக்கும்
பாலை வழியே உடன்போக்குகிறேன்

இற்செறித்த என் நற்றாயும்
பொருள் வயின் பிரிந்திருக்கும்
அவள் தலைவனும் தவிர்த்து
               
                     ***


குழந்தைகள் உருவாக்கும் உலகம்தான் எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறது…எளிய வார்த்தைகளில் அதை வரைகிறார் கவிஞர்:

வீட்டுச் சுவர்களிலும் அலுவலகக் கோப்புகளிலும்
பாத்திரங்களிலும் கூட உன் கிறுக்கல்கள்
குட்டிப் பெண்ணின்
குவிந்த தாமரை மழலையுதிர்த்தபடி
கவனமாய் வரைந்து தள்ளுகிறது
யானையும் பூனையும்
ஆணும் பெண்ணும்
வீடும் திமிங்கிலமும்
உயிர் பெற்று வளைய வர
குழந்தை வரைந்த
ஓவிய வீட்டுக்குள் புகுந்துவிட்டேன்.
                           ***

மதுவின் போதையில் மனிதனுக்கு உள்ளிருக்கும் விலங்கு விழித்தெழுகிறதா…அல்லது விலங்கை விழித்தெழச் செய்ய மது அருந்துகிறானா… கூட்டாக மது அருந்தும் ஆண்களின் ‘சைட்டிஷ்’ஆக ஆவது யார்,:

கேளிக்கைப் பொருளாய்
மதுப்புட்டிக்குள் அடைக்கலமாகிறது பேச்சு
சொற்கள் குழறத்தொடங்கும் பொழுதில்
தோழியை அழைக்கிறீர்கள்

நட்பின் பெயரால் அழைப்பை ஏற்கும்
அவளுக்குத் தெரியாது
தன் குரல் அனைவருக்கும் பரிமாறப்படுகிறதென்று

மெதுவான தாள லயத்துடன் தொடங்கும் இசை
நேரம் செல்லச்செல்ல முறுக்கேறுகிறது
குரல்கள் தடிக்கின்றன
வார்த்தைகள் குழறி மோதுகின்றன

தட்டில் இருக்கும் சிப்ஸும் மிக்சரும் போதாமல்
தோழியின் கதைகளைப் பேசுகிறீர்கள்
நம்பிக்கையோடு சொல்லப்பட்ட ரகசியங்கள்
அற்ப சுவாரசியத்துக்காகப் பகிரப்படுகிறது

எழுதும் கைகளின் தகர வக்கிரங்கள்
கிறுக்கப்படுகின்றன சுவரெங்கும்

நேசிக்கும் புத்தகங்களை இறுகப் பற்றியபடி
சங்கிலியால் கட்டுண்டிருக்கும் கால்களை அறியாமல்
உறங்கச் செல்கிறாள்
தானே உணவானது அறியாமல்
                           ***

மனநலம் பாதிக்கப்பட்ட நிலை குறித்த எண்ணங்களிலும் பெண்ணின் கவலை என்னவாக இருக்கிறது? ஏன் அப்படி இருக்கிறது என்ற கேள்வியை மறைமுகமாக எழுப்புகிறது இக்கவிதை:

அடுப்பில் கரியும் பாலையுணராது
ஆழ்ந்திருக்கும் புத்தகத்தை வீசியெறிந்து
அம்மா சபிப்பாள்
பைத்தியம் பிடித்து அலையப் போவதாய்

உன்மத்தம் ஏறியிருந்த பொழுதொன்றில்
ஆலிலை வயிறு புரட்டியபடி
எனக்குப் பித்தேறியிருப்பதாய்
அறிவித்தானென் காதலன்

தரையெல்லாம் பாசி படர்ந்திருக்கும்
மொட்டை மாடியின் தண்ணீர்த் தொட்டிக்கருகில்
எல்ல்ப்ப்தும் வானம் வெறித்திருக்குமென்னை
பிச்சியென வருந்தினர் நண்பர்கள்

கந்தலாடையுடன் தெருவில் அலையும் காட்சியை
இப்போதெல்லாம் மனம் காட்டியபடியிருக்க
என் எப்போதுமான கவலை
அப்போதைய உடை என் உடல் மறைக்குமா என்பதே
                     ***

பொதுவாக எழுதப்படும் வெறுமையும், துன்பமும், அச்சமும் , தன்னிரக்கமும் மிக்க ஆணின் தனிமையிலிருந்து வேறுபடுகிறது இந்தக் கவிதையில் சொல்லப்படும் பெண்ணின் தனிமை:

மலை முகட்டிலிருந்து மெல்ல இறங்குகிறேன்
உச்சியில் ஏறியதன் பெருமிதம்
முற்றிலும் அகன்று போயிருந்தது
இறங்கியதன் வருத்தத்தையும்
வழியெல்லாம் தூவியபடி வேகம் குறைத்தேன்
உருண்டு விழும் அபாயமும்
பெருகும் துக்கமும் கூட
தடை செய்தது என்னை

மழை துவங்குகிறது சிறுதூறலென
ஆகப்பெரும்துயரத்தை அடை காக்கும்
முகத்தில் மென்சிரிப்பு

என்னுடன் நனையும் மரங்களும்
சிறு இலைகளும் காய் கனிகளும்
ஆடுகளும் சிறு பெண்களும்
தங்கள் தங்கள் துக்கத்தை ஆவியாக்கி
நனைகிறார்கள் கோடை மழையில்
பெருமழையில் கரைந்தது
கோபம்
துக்கம்
வெறுப்பு
மூர்க்கம்

மெல்ல இறங்குகிறேன்
மழை என்மீது பிரியத்தைப் பொழிகிறது
அன்பைத் தூறுகிறது
எல்லையில்லாத அன்பை
அனைவருக்கும் பரிசளிக்கிறேன்
என் எல்லையெதுவென்பதை உணர்ந்தவளாய்

உடன் இறங்கும் மழையை,
வெண்பஞ்சு மேகத்தை,
பசிய தாவரங்களைப் பார்த்துச் சொல்கிறேன்
நான் தனியள்


சிறார் மனநிலையையும், தாய்மையையும், தாபத்தையும், தனிமையையும், உடலரசியலையும் பேசுபவை தி.பரமேஸ்வரியின்  ’தனியள்’ தொகுப்பில் உள்ள கவிதைகள் .இது அவரது மூன்றாவது கவிதைத்தொகுப்பு.

தனியள் ( கவிதைத்தொகுப்பு) – அகநாழிகை பதிப்பகம் - ஆகஸ்ட் 2014

1.   சின்னதொரு துண்டை..என் துக்கமும் : பக்கம் 8
2.   வண்டுகள் மொய்க்கும்…தலைவனும் தவிர்த்து : பக்கம் 17
3.   வீட்டுச் சுவர்களிலும் …புகுந்து விட்டேன்: பக்கம் 21
4.   கேளிக்கைப் பொருளாய்- பக்கம் 37
5.   அடுப்பில் கரியும்… மறைக்குமா என்பதே: பக்கம் 52

6.   மலையுச்சியிலிருந்து…நான் தனியள்: பக்கம் 77