இன்மை - கவிதைக்கான இணைய இதழ்

Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

கண்ணதாசன் நம் நினைவில் - ஆர்.அபிலாஷ்


கண்ணதாசன் அப்பாவில்லாமல், சரியான குடும்ப ஆதரவில்லாமல் வளர்ந்தவர். அப்படியான பிள்ளைகள் ஒன்று மிக ஒடுங்கியவர்களாக, அதீத தன்னிரக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அல்லது மிகுந்த விடுதலை உணர்வு பெற்ற பொறுப்பில்லாதவர்களாக இருப்பார்கள். கண்ணதாசனின் ஆளுமை இரண்டாவது வகையை சேர்ந்தது. அவரது “வனவாசத்தில்” தனது பொறுப்பின்மைக்கு குழந்தைப்பருவத்தில் இருந்தே பல உதாரணங்கள் தந்து கொண்டு போகிறார். வளர்ந்து சினிமா பாடலாசிரியர் ஆகும் கட்டத்தில் நிகழும் சம்பவம் ஒன்று தான் மிக சுவாரஸ்யம்.
கண்ணதாசனுக்கு ஒரு பாடல் வாய்ப்பு வருகிறது. அப்போது அவர் நிலைப்பெற்றிருக்கவில்லை. சிற்சில பாடல்கள் எழுதிய ஆரம்பநிலை பாடலாசிரியர். அழைப்பு வந்ததும் அவர் ரெயிலேறி சென்னைக்கு உடனடியாக வருகிறார். ரயில் நிலையத்தில் ஒரு அழகான பெண்ணையும் தாயாரையும் காண்கிறார். பெண் தான் அனாதரவானவள் என்று அழுகிறாள். கண்ணதாசன் மனமிரங்கி அவளை அழைத்துக் கொண்டு சென்று ஒரு வாடகை வீட்டில் தங்குகிறார். மணக்காமலே அப்பெண்ணுடன் ஆறு மாதங்கள் சுகிக்கிறார். இதனிடையே பாடல் வாய்ப்பை மறந்து போகிறார். பணம் முற்றிலும் தீர்ந்து போன பின்னரே அவர் தரைக்கு இறங்குகிறார். பாடல் எழுத வாய்ப்பு தேடி மீண்டும் கோடம்பாக்கம் கிளம்புகிறார். பல இடங்களில் சுற்றி விட்டு வீடு திரும்பினால் அவரது காதலியோ அம்மாவோ அங்கில்லை. விசாரித்து கண்டுபிடிக்கிறாள். அவள் ஒரு பரிச்சயமான ஆணின் வீட்டில் வைப்பாட்டியாக இருக்கிறாள். சில நாட்களின் இடைவெளியில் வறுமை தன் காதலை கோரமாக்கி விட்டதை உணர்கிறார் கண்ணதாசன். அவளை வெறுத்து விட்டு விலகி மீண்டும் சினிமாவில் முழு கவனம் செலுத்துகிறார். நாமெல்லாம் முக்கியமான வேலையை மறந்து சில மணிநேரங்கள் இருப்போம். ஆனால் முக்கிய வாய்ப்பை மறந்து கண்ணதாசன் ஆறுமாதங்கள் தன் போக்கில் இருப்பார்.
ஜெயகாந்தன் இது போல் இன்னொரு சம்பவம் சொல்லுகிறார். கண்ணதாசன் படம் தயாரிக்கிறார். ஜெயகாந்தனும் அதில் சம்மந்தப்பட்டிருக்கிறார். படப்பிடிப்பு மதியம் வரை நடக்கும். அப்போது கண்ணதாசன் உணவருந்த அமர்வார். நிறைய உணவு வகைகளோடு விருந்து. சாப்பிட்டவுடன் கண்ணதாசனுக்கு குடிக்க வேண்டும். இதனால் தினமும் படப்பிடிப்பு மதியத்துக்கு மேல் ரத்தாகிறது. படமும் பாதியில் நிற்கிறது. “”என்னடா பொல்லாத வாழ்க்கை…இதுக்கு போய் அலட்டிக்கலாமா” என்பதை வாழ்ந்தே பார்த்தவர் அவர்.
நாட்டுக்கோட்டை செட்டியார் மத்தியில் வளர்ந்த ஆண்களை இன்னொரு குடும்பத்துக்கு தத்துக் கொடுக்கும் வழக்கம். வறுமை காரணமாய் கண்ணதாசனையும் வளர்ந்த பின்னர் தத்து கொடுக்கிறார்கள். ஆடம்பரமான சடங்குகளுடன் புது வீட்டுக்கு அழைத்து போகிறார். அவரது “வனவாசத்தில்” இது ஒரு முக்கியமான இடம். “வனவாசம்” எழுத்தாளர்கள் படிக்க வேண்டிய புத்தகம். அதில் பல கதைகருக்கள் உள்ளன.
நான் கண்ணதாசனின் நாவல்கள் ஏதும் படித்ததில்லை. “அர்த்தமுள்ள இந்துமதம்” சின்னவயதில் படித்திருக்கிறேன். எட்டாம் வகுப்பு என நினைக்கிறேன். “அர்த்தமுள்ள இந்துமதம்” கண்ணதாசன் குரலில் தம்புரா பின்னணியில் ஒரு கேசட் கிடைத்தது. அதையே திரும்ப திரும்ப கேட்பேன். அவரது குரலும் தம்புராவும் மனதுக்கு நிம்மதி அளிக்கும்.
கண்ணதாசன் திரைக்கதை எழுதிய ”திருடாதே” எம்.ஜி.ஆரின் சிறந்த படம் என்பது என் எண்ணம். ஒரு பலவீனமான குற்றவுணர்வினால் அல்லல்படும், விதிவசப்பட்டு அவஸ்தைப்படும் பாத்திரமாக எம்.ஜி.ஆர் எதார்த்தமாய் இப்படத்தில் நடித்தது போல் வேறு படங்களில் நடித்து பார்த்ததில்லை. ஆனால் படம் ஓடவில்லை. கண்ணதாசனுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அது பற்றி தனியே எழுத வேண்டும்.
கண்ணதாசனுக்கு எல்லா நல்ல பாடலாசிரியர்களையும் போல இசைத்தன்மை கொண்ட வரிகளை எழுதும் லாவகம் உண்டு. அவரது பாடல்களில் வருவது ஒருவித பிரபல தத்துவம். இந்தியர்கள் இயல்பிலேயே தத்துவார்த்தமானவர்கள் என்பார் எஸ்.ரா. கண்ணதாசன் வரிகளில் உள்ள தொனி எந்த பட்டிக்காட்டானின் பேச்சிலும் உள்ளது தான். “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை” போன்ற வரிகளை வேறு வகையில் கொச்சையாக நம்மை சுற்றி மக்கள் பேசி கேட்டிருப்போம். அவரது பாடல்கள் வெற்றி பெற்றதற்கு இந்த எளிய மக்களின் தத்துவார்த்தம் ஒரு காரணம்.

இன்னொரு பக்கம் “கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததால் கொடி அசைந்ததா” போன்ற மிக நுணுக்கமான பாடல்களையும் எழுதியிருக்கிறார். இப்பாடலை சின்ன வயதில் திரும்ப திரும்ப கேட்டு சிலாகித்திருக்கிறேன். என் வாழ்வில் எதிர்பாராமல் நல்லது நடந்தாலோ கெட்டது நடந்தாலோ இப்பாடல் நினைவு வரும்.
“வாழ நினைத்தால் வாழலாம்” எனக்கு மிக பிடித்தமான இன்னொரு பாட்டு. “பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்; கதவு திறந்தால் காட்சி கிடைக்கும், காட்சி கிடைத்தால் கவலை தீரும். கவலை தீர்ந்தால் வாழலாம்” எனும் தத்துவ நிலைப்பாட்டினிடையே “கன்னி இளமை என்னை அழைத்தால் தன்னை மறந்தே வாழலாம்” போன்ற ஹிப்பி மனநிலையும் இருக்கும். இந்த ஹிப்பி மனம் தான் குறிப்பாய் கண்ணதாசனுடையது.
“கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும்” போன்ற எளிய வரிகளின் அர்த்தம் எவ்வளவு முக்கியமானது. நாம் படிப்பது தேடுவது எல்லாம் இந்த “கவலை” நீங்கத் தானே! ஆனால் இக்கவலை பிறவியிலேயே நம்மை ஒட்டிக் கொண்டதாயிற்றே! மிக சிக்கலான சில விசயங்களை அவரால் எளிதான வரிகளில் இது போல் கொண்டு வர முடியும்.
பாரதியின் கண்ணன் பாட்டில் ஒன்று இப்படி ஆரம்பிக்கும்
“ஆசை முகம் மறந்து போச்சே
இதை ஆரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
என நினைவு முகம் மறக்காலாமா?”
மிக பிடித்தவரின் முகம் மறந்து போனால் அது எப்படியான ஒரு துயரம்! ஏன் மறக்கிறது? இது மனதின் விசித்திரம். எனக்கு சிலசமயம் நிகழ்ந்திருக்கிறது. பெரும் அவஸ்தை அது. அதுவும் நினைத்து நினைத்து ஏங்கும் போது முகம் மட்டும் நினைவில் வரவில்லை என்றால்! இது போன்ற ஒரு முரண் தான் “நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா” எனும் பாட்டில் வருகிறது. மறக்க நாம் எவ்வளவு முயன்றாலும் திரும்ப திரும்ப நினைவு வலுப்படும். மனம் தொடர்ந்து கசப்பான நினைவுகளில் உழன்று துன்பத்தை தந்து கொண்டே இருக்கும். மனம் ஏன் இப்படி செய்கிறது என யாருக்கும்  தெரியாது. அதுபோல் இப்பாட்டில் வாழ்வின் பல விளக்க முடியாத முரண்களை கேள்வி கேட்டுக் கொண்டு போவார் “பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா” போன்று.
”தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு” எவ்வளவு அழகான வரி. வீடும், குடும்பமும் நாமே நமக்கு அமைத்துக் கொண்ட சிறைகள். சட்டென ஒரு நொடி ஏதேனும் ஒரு காரணம் முற்கொண்டு வெளியேறினால் உலகே ஒரு பிரம்மாண்ட வீடாக தெரிகிறது. “வெளியே போவது” என்பதே எவ்வளவு அழகான உருவகம். எனக்கு இவ்வரி கேட்கும் போதெல்லாம் ஜேக் கெரோக்கின் On the Road நாவல் நியாபகம் வரும். பயணத்தை வெளியேற்றமாக, ஆன்மீக விடுதலையாக பார்க்கிற நாவல் அது.
இப்படி எவ்வளவு எவ்வளவு வரிகள். மூவாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களில் நம் நினைவில் தேங்கி இருப்பவை சில தான். ஆனால் அவை தமிழ் மனதின் உணர்வு நிலையை, சிக்கல்களை, குழப்பங்களை, பித்துகளை பிரதிபலித்த, நம் தமிழின் பகுதியாகிப் போன வரிகள்.


ஜூன் 24 கண்ணதாசன் பிறந்தநாள். அவரது நினைவில் ஆழ்ந்திட எத்தனை எத்தனை வரிகளை கடல் அலை போல் காலம் அள்ளி வீசியபடி இருக்கிறது!

அன்புசிவனுக்கு அஞ்சலி - கணேச குமாரன்




கவிஞர் அன்புசிவன் கவிதை மீதும் சக கவிஞர்கள் மீதும் அலாதியான அன்பும் அக்கறையும் கொண்டவர். அவர் தன் 53 வது வயதில் காலமாகி நிரப்ப முடியாத வெற்றிட்த்தை ஏற்படுத்தினார். இவரின் கவிதைகள் தனிமனித உணர்வுகளை அந்தக் கண பதற்றங்களை  பதிவு செய்பவை. சமூகக் கவனம் குறித்த இவரின் கவிதைகள் கூட ஒற்றை மனிதன் வாயிலாக வெளிவந்தவையே. ஆனந்தவிகடன், கல்கி, யாவரும் டாட் காம் போன்றவற்றில் வெளிவந்த இவரின் கவிதைகள் அன்பையும் கருணையும் யாசித்து நிற்கும் எளிய மொழியில் வெளிப்படுபவை. உதாரணமாய் ஒரு கவிதை:
சுடும் நினைவுகள்

குற்றவுணர்வில்  மௌனம்
நீட்டித்துக்கொண்டிருக்கிறது.

 
தவறின்
அடிவேரைத்தேடிக்கொண்டிருக்கிறது
அவஸ்தை மனம்.

கனன்றுகொண்டிருக்கும் துயரத்தின்
கனல் சுட்டுக் கொண்டிருக்கிறது
அருவமாய்.

சுயதண்டனைக்கான தீர்ப்பை
எதிர்நோக்கிக் காத்திருக்கிறது
குற்றவாளிக்கூண்டில் மனசாட்சி.

எது ஆற்றிவிடக்கூடும்
இதயத்தின் வலியையென்று
எங்கெங்கோ உழல்கிறது தேடல்.

கையறு நிலையில் தீர்வுகளைத்
தேடிக் களைத்துப் போய் மீண்டும்
துவண்டு விழுகிறது வாழ்க்கை.
மெளனம் தன்னை நீட்டித்துக்கொண்டிருக்கிறது.

ஒருவித கையறு மன உணர்வினை வெளிப்படுத்தும் இக்கவிதை எல்லா வரிகளிலும்  ஒரே பொருளை வெளிப்படுத்தினாலும் எழுதுபவனையும் வாசிப்பவனையும் இணைக்கும் துல்லியமான புள்ளியை விட்டு விலகவில்லை. இதுவே கவிதையின் இந்த கவிதைக்காரனின் வெற்றி.  அன்புசிவனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.


மாயா ஏஞ்சலூ - அஞ்சலிக் குறிப்பு



ஒபாமாவுடன் மாயா ஏஞ்சலூ


அமெரிக்காவின் மற்றொரு கறுப்பின பண்பாட்டு சின்னமான மாயா ஏஞ்செலூ போன மாதம் 28 அன்று காலமானார். இயக்குநர், திரைக்கதையாளர், நடன கலைஞர், உரைநடையாளர் என பல பரிமாணங்கள் இருந்தாலும் அவர் பிரதானமாய் தனது “I Know Why Caged Birds Sing தன்சரிதைக்காகவே அதிகம் அறியப்பட்டார். இதன் வெற்றியைத் தொடர்ந்து இன்னும் ஆறு தன்சரிதைகள் எழுதினார். தன் ஆரம்ப கால வறிய வாழ்க்கை, விபச்சாரம், இரவுவிடுதியின் நிர்வாண நடனம், மார்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் எக்ஸுடன் சேர்ந்து கறுப்பிட விடுதலை போராட்டம் என பல விசயங்களை பற்றி சரளமாய் உணர்ச்சிகரமாய் எழுதினார். இவை கறுப்பின இலக்கியத்தில் முக்கிய பிரதிகளாய் கருதப்படுகின்றன. 
மார்டின் லூதருடன்...

இவை போக ஏஞ்சலூ ஒரு நல்ல கவிஞரும் கூட. அவரது கவிதை இறுக்கமானது அல்ல. எளிய சந்த நயத்துடன் ஒழுகும் தன்மை கொண்டவை. நேரடியான எளிய கவிதைகள் என்றாலும் கவிதைக்கு தேவையான குறிப்புணர்த்தலும் உண்டு. உதாரணமாய் ”தனியாய்” (Alone) கவிதையை சொல்லலாம். சமூக ஒடுக்குமுறையால் அவதிப்படுகிறவர்களும் சரி அது அல்லாமல் நன்றாக வசதியாக பாசாங்காக பணக்கார வாழ்க்கை வாழ்கிறவர்களும் சரி, இரு சாராருக்கும் தனியாய் எதையும் சாதிக்க முடியாது என்கிறது இக்கவிதை. அப்படி இருக்க நம் மனம் யாருடைய துணையை தேடுகிறது, அத்தனை பேரின் வாதையையும் தீர்க்கக் கூடிய அந்த துணை யார் எனும் கேள்வியை இக்கவிதை எழுப்புகிறது. நுட்பமாய் கவனிக்கிறவர்களுக்கு ஆழமான மன எழுச்சி தரக் கூடியது இக்கவிதை. 
ஏஞ்சலூவின் கவிதையில் சில கத்தியை சொருகுவது போன்ற வரிகளும், அழகான நவீன ஒப்பீடுகளும் வரும். உதாரணமாய் “ஆண்கள்” கவிதையில் தோள் உயர்த்தி நடக்கும் ஆண்களை இவ்வாறு குறிப்பிடுகிறார்:
”அவர்களின் தோள்
உயர்ந்துள்ளன
ஒரு இளம்பெண்ணின் முலைகள் போல”
இது தான் உண்மையில் பெண்மொழி என தோன்றுகிறது. ஒரு ஆணை பெண்ணின் பார்வையில் இருந்து பார்க்கையில் இப்படியான வித்தியாசமான உவமைகள் வந்து விழும். இதே கவிதையில் ஆண் வசப்பட்ட ஒரு பெண்ணை ஒருவர் கையில் வைத்திருக்கும் முட்டையுடன் ஒப்பிடுகிறார். முட்டையை முதலில் அழுத்தாமல் மென்மையாய் பிடிப்போம். ஆனால் நாம் ஆவேசம் கொள்ள கொள்ள முட்டையின் மீதான இறுக்கமும் அதிகமாகும். ஒரு கட்ட்த்தில் முட்டை நொறுங்கி விடும், காதலின் இறுதியில் பெண்ணின் நிலையும் இது தான் என்கிறார். இது மிக அழகான உவமை. பெண்கள் எப்போதும் உச்சநிலையில் இருப்பதில்லை. ஆனால் காதலின் நிறைவில் அவர்கள் உச்சம் அடைந்ததும் ஒரு ஆணைப் போல் மீண்டும் சமநிலைக்கு திரும்புவதில்லை – பொங்கி வழிந்தபடியே இருப்பார்கள். இச்சையில் உச்சத்தில் இருக்கும் பெண் தன் திருப்தியின்மையால் ஆணை இம்சை செய்வாள், கசப்புடன், வெறுப்புடன் நடந்து கொள்வாள். இது ஆணின் தவறு அல்ல. பெண் எப்போதும் ஆணால் நிறைவு செய்ய இயலாதவள், அவள் இயல்பு அப்படி. ஒரு காதல் உறவு பெண்ணை அழுத்தி உடைக்கப்பட்ட முட்டையின் சீர்செய்ய முடியாத, கசப்பான நிலைக்கு தள்ளுகிறது. தன்னைப் பற்றி தானே அருவருப்பு கொள்ள செய்கிறது. இப்படி இக்கவிதையின் ஒரு வரி மட்டுமே ஆழமான சிந்தனைகளை தூண்டுவது.
மேரி ஏஞ்சலூவின் “போதனை” கவிதை மொழியாக்கத்தில் எதேச்சையாக இன்மையில் இந்த இதழில் இடம்பெறுகிறது (ரா.பாலகிருஷ்ணன் மே மாதம் 2ஆம் தேதியே அனுப்பி விட்டார்).
மேரி ஏஞ்சலூவுக்கு தமிழ் நிலத்தில் இருந்து ஒரு ஆழ்ந்த அஞ்சலி
- இன்மை ஆசிரியர் குழு