இன்மை - கவிதைக்கான இணைய இதழ்

Showing posts with label சமகால அமெரிக்க கவிதைகள். Show all posts
Showing posts with label சமகால அமெரிக்க கவிதைகள். Show all posts

சமகால அமெரிக்க கவிதைகள் (9) - தமிழில் ஆர்.அபிலாஷ்

பிறவா குழந்தைகள்
-    ஷேரன் ஓல்ட்ஸ்



சிலநேரங்களில் என்னால் கிட்டத்தட்ட பார்க்க முடியும்
கோடையில் தெருவிளக்குகளை சுற்றி பூச்சிகள் போல
நம் தலைகளைச் சுற்றி
நமக்கு பிறக்கக் கூடிய குழந்தைகளை,
அவற்றின் மங்கலான ஜுவலிப்பை.

சிலநேரம் அவர்கள்
ஏதோ ஒரு முன்கூடத்தில் தூங்கி விழுந்தபடி
காத்திருப்பதைப் போல் உணர்கிறேன் – மணி அழைப்புக்காய் பாதி கவனத்திருக்கும் வேலைக்காரர்கள்

சிலநேரம் அவர்கள் “இறந்த கடிதங்களின் அலுவலகத்தில்”
காதல் கடிதங்கள் போல் கிடப்பதாய் காண்கிறேன்

இன்று போல் ஒர் இரவில்
ஏதோ ஒரு இருண்ட இரண்டாம் புலப்படுதலில்
அவர்களில் ஒன்றை சற்றே உணர்கிறேன்
கடல் அருகே ஒரு மலை விளிம்பில்
இருட்டில் நின்றபடி எனக்காய்

அவநம்பிக்கையின் உக்கிரத்தில் கைகளை நீட்டுவதை

சமகால அமெரிக்க கவிதைகள் (8) - தமிழில் ஆர்.அபிலாஷ்

என்னால் சரியாக சொல்ல முடியவில்லை
-                                                                                                                               -- ஷேரன் ஓல்ட்ஸ்


அந்த பேருந்தில் இருந்து குதித்தேனா என என்னால் சரியாக சொல்ல முடியவில்லை,
ஓடிக் கொண்டிருக்கும் அப்பேருந்து, கையில் குழந்தையுடன்,
ஏனென்றால் எனக்கு தெரியாது. என் கதையை தான் நான் நம்பினேன்:
நான் விழுந்து விட்டேன், அல்லது காற்றில் ஒரு கால் நின்றிருக்க
பேருந்தை சட்டென எடுத்து விட்டார்கள்.

என் முகவாய் முறுகியது,
என் நிறுத்தத்தை தவற விட்டதன் எரிச்சல்,
காற்றில் இறங்கி கால் வைத்தது,
தெருவில் ஒற்றை முட்டி பதிய நான் குதிக்கையில்
காற்றில் பராக்கு பார்க்கும் துலக்கமான குழந்தை,
முட்டி சிராய்ந்தது, திரும்பியது,
பேருந்து கிரீச்சிட்டு நின்றது, ஓட்டுநர்
குதித்து இறங்கியது, என் மகள் சிரித்தது
நினைவில் இல்லை.
இன்னும் ஒரு முறை யோசிக்கலாமா.

மீண்டும் ஒருபோதும் நான் அப்படி செய்யவில்லை,
ரொம்ப கவனமாய் இருந்திருக்கிறேன்.
அந்த அழகான இளம் அம்மா மீது
ஒரு கண் வைத்திருக்கிறேன்,
அவள் சன்னமாய் துள்ளி இறங்குகிறாள்
நகரும் வாகனத்தில் இருந்து
நிலைத்த தெருவுக்குள், அவள் வாழ்வு அவள் கைகளில்,

அவள் வாழ்வின் வாழ்வு அவள் கைகளில்

சமகால அமெரிக்க கவிதைகள் (7)

நிர்வாண பெண் மாடலாக நிற்பது
-    - கேரல் ஆன் டப்பி
-    - தமிழில் ஆர்.அபிலாஷ்

ஆறு மணிநேரம் இது போல் சில பிராங்குகளுக்காக.
வயிறு முலைக்கணு பின்புறம் ஜன்னல் வெளிச்சத்தில்,
அவன் என்னில் இருந்து நிறத்தை வடிக்கிறான். இன்னும் கொஞ்சம்
வலப்பக்கம், மேடம். அப்புறம் அசையாதீங்க.
நான் பகுப்புமுறையில் வடிவம் தரப்பெற்று பெரும்
அருங்காட்சியகங்களில் தொங்க விடப்படுவேன்.
நதி துறைமுக தேவடியாளின் பிம்பம் கண்டு
பூர்ஷுவாக்கள் வியந்து கூவுவார்கள்.
அவர்களை அதை கலை என்பார்கள். ஒருவேளை இருக்கலாம். அவனது அக்கறை எல்லாம் கன அளவு, வெளி.
எனதோ அடுத்த வேளை சாப்பாடு. மெலிந்து கொண்டு வர்றீங்க,
மேடம், இது நல்லதில்ல. என் முலைகள்
சற்று தாழ்வாய் தொங்குகின்றன, கலைக்கூடம் குளிர்கிறது.
தேயிலைகளில் இங்கிலாந்து ராணி என் வளைவுகளை
பார்வையிடுவது தெரிகிறது. பிரமாதம், அவள் முணுமுணுக்கிறாள்,
நடந்தபடி. எனக்கு சிரிப்பு வருகிறது. இவன் பெயர் ஜார்ஜஸ். இவனை ஒரு மேதை என்கிறாரகள்.
சிலவேளைகளில் அவன் கவனம் சிதறுகிறான்
என் வெதுவெதுப்புக்காக விறைக்கிறான்.
தூரிகையை மீண்டும் மீண்டும் வண்ணத்தில் முக்கியபடி
என்னை கேன்வாஸில் சொந்தமாக்குகிறான். சின்ன பையா,
நான் விற்கும் கலைகளுக்கான பணம் உன்னிடம் இல்லை.
ஏழ்மையில் நாமிருவரும் தெரிந்த விதங்களில் சம்பாதிக்கிறோம். ஏன் இதை செய்கிறாய் என அவனிடம் கேட்கிறேன்.
ஏனென்றால் நான் செய்தாக வேண்டும். வேறு வழியில்லை. பேசாதீங்க.
என் புன்னகை அவனை குழப்புகிறது. இந்த ஓவியர்கள் இருக்கிறார்களே
தம்மை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்கள்.
இரவில் நான் வைனை வயிறுமுட்ட குடித்து பார்களில் நடனமாடுவேன்.
முடிந்ததும் அவன் அதை பெருமையாய் காட்டுகிறான், ஒரு சிகரெட் பற்ற வைத்தபடி.
12 பிராங்குகள் என்று விட்டு என் சால்வையை எடுக்கிறேன்.

அது என்னைப் போல் இல்லை.


சமகால அமெரிக்க கவிதைகள் - ஆர்.அபிலாஷ்




ஒரு மரணத்துக்கு பிறகு -

-                                                                                                                                    ரூ போர்சன்
வேறு வழியில்லை
என்றாகிய பின்
அவனது இன்மையை ஒரு நாற்காலியாக
மாற்றுகிறேன்
அதில் நான் உட்காரலாம்,
ஜன்னல் வழி வேடிக்கை பார்க்கலாம்.
எனக்கு நன்றாக வருகிறதை செய்யலாம்.
பிறகு வெளியே கிளம்பி செல்லலாம்.
பிறகு நான் என வீணான காதலுடன் திரும்பலாம்,
ஓய்வெடுக்க,
நாற்காலி தான் எங்கும் போகாதே என.

பேச்சு -
-                                                           ரூ போர்சன்

கடைகள், தெருக்கள் முழுக்க தாத்தாக்கள்
இனி என்ன சொல்ல என யோசித்தபடி.
சிலநேரம், ஒரு பெண்ணைப் பார்த்தால்,
அவர்களுக்கு அந்த எண்ணம் வரும்
ஆனால் அவர்களால் தான் யாரையும் சுகிக்க முடியாதே,
அவர்கள் அதை நோக்கி பனிமூட்டம் வழி தம் பூனைப்பாதங்களால் முன்னேறுகிறார்கள்.



இளைஞர்கள் பரஸ்பரம் தோள்களை உரசி கடக்கிறார்கள்
இரு கூறாய் நின்று சொற்களை பற்றி இழுத்து போட்டியிட்டபடி.
பேச்சு அவர்களை கிளர்ச்சியடைய செய்கிறது, ஆபத்து இன்னும் புலப்படுகிறது அவர்களுக்கு.


வயதான பெண்கள், சொற்களில் கஞ்சத்தனம் காட்டுபவர்கள்,
ஆரஞ்சுகளுக்காய பேரம் பேசுகிற போது,
வாய்கள் காற்றில் தொங்கும் சொற்களை கவ்வ பார்க்கின்றன.
அவர்களுக்கு ஆரஞ்சுகளின் மதிப்பு தெரியும்.
எல்லாவற்றையும் அவர்கள் கற்க வேண்டியிருந்தது
தாமாகவே.

இளம்பெண்கள் தாம் இருப்பதிலேயே மோசம்,
யாரும் அவர்களுக்கு கற்றுத்தர வில்லை.
அவர்கள் முகங்களின் ஊடாய் மனங்கள் தெரியும்
புயலடிப்பதற்கு முன்பான சிறு ஏரிகளைப் போன்றவர்கள்.
தமது சோகம் குழப்பத்தினால் வருகிறது என அறிய மாட்டார்கள்.
சொல்லப் போனால் இது ஒரு அதிர்ஷமும் தான்,
இளைஞர்கள் இக்குழப்பத்தை திருத்தமுடியாத குணம் என நம்பி விடுகிறார்கள்
இது அவர்களுக்கு கிளர்ச்சியூட்டுகிறது, இது போல்
தமக்கு புரியாத ஒரு முகத்தை சொந்தமாக்கி
ஓய்வு கிடைக்கும் போது பழுது பார்க்கலாமே
என ஆசைப்படுகிறார்கள்.

நவீன அமெரிக்க கவிதை (4) - ஆர்.அபிலாஷ்



காதல் 20 டாலர்கள், முதல் கால்வாசி மைல் தூரம்
-                                              - கென்னத் பியரிங்


சரி தான். நான் உன்னிடமும், உன்னைப் பற்றியும் பொய் சொல்லி இருக்கலாம்
பொத்தாம் பொதுவாய் சில விசயங்கள் அறிவித்திருக்கலாம், சொல்வதானால், ஒருவேளை எல்லா பிரச்சனைகளையும் முடித்து வைக்க மறந்திருக்கலாம்,
உன் ஆர்ப்பாட்டங்களை சபித்திருக்கலாம், ரசனைகளை கேவலப்படுத்தியிருக்கலாம்,
உறவினர்களை அவதூறு செய்திருக்கலாம், உன் நண்பர்கள் சிலருக்கு
அவப்பெயர் வரும் படி பேசியிருக்கலாம்.
ஒகெ.,
இருந்தாலும், திரும்ப வந்து விடு  

வீட்டுக்கு வா. என்னைப் பற்றி சுற்றத்துக்கும் பத்திரிகைகளுக்கும் நீ
தாராளமாய் அள்ளி வழங்கிய அறிக்கைகளை மறந்திட நானும் ஒத்துக் கொள்கிறேன்,
நீ, உன் கற்பனையை, அந்த டெட்ரோயிட்டில் உள்ள பொன்வண்ண கூந்தல் கொண்ட பெண் இருக்கிறாளே, அவளை மறந்ததாய் கொள்,
நமக்கு மேல் மாடியில் வசிக்கும் உன் தோழி,
உன் பல கிராக்குத்தனமான தோழிகளைப் போலன்றி,
பைத்தியமல்ல, கொஞ்சம் புத்திசாலி தான் என நானும் ஏற்கிறேன்
அந்த பாவம் ஸ்டெயின்பெர்க் குடிகாரனோ ஏமாற்றுக்காரனோ அல்ல,
கொஞ்சம் கோணலான, ஏதோ தன் போக்கில் வாழ்ந்து போகிற எளிய மனிதன் என நீயும் ஏற்றுக் கொள்.
(கேட்கிறாயா மூதி, இது தெளிவாக புரிகிறதா உனக்கு?)

நான் உன்னை மன்னிக்கிறேன், ஆம் எல்லாவற்றுக்கும் சேர்த்து தான், என்பதால்
அழகாகவும், தாராளமாகவும் விவேகமாகவும் இருப்பதற்கும் உன்னை மன்னிப்பதால்
இன்னும் எளிதாய் சொல்வதானால், நீ உயிருடன் இருப்பதற்கே உன்னை மன்னிப்பதால்,
நீ நீயாக இருப்பதற்கே உன்னை மன்னிப்பதால்
இன்றிரவு நீ என் முடியிலும் கண்களிலும் இருப்பதால்
இந்த டாக்ஸி கடந்து போகும் ஒவ்வொரு தெருவும் மீண்டும் உன்னை, இன்னும் உன்னையே காட்டுவதால்
இன்றிரவு எல்லா இரவுகளும் கறுப்பாய் உள்ளதாய், எல்லா நாழிகைகளும் கடுங்குளிராய் இருப்பதால்
வெகு தொலைவில், இப்போது, இந்த நிமிஷம், நட்சத்திரங்கள் மிக அருகில் பிரகாசமாய் இருப்பதால்

திரும்ப வா. எல்லா கொண்டாட்டங்களையும் முடித்து வைக்க ஒரு முறை கொண்டாடுவோம் வா.
நமக்கு கீழ் குடியிருப்பில் உள்ள சவ அடக்கம் செய்வோனையும், அலுவலகத்தில் இருந்து சில நண்பர்களையும், வேறு சில நண்பர்களையும் அழைப்போம்.
அதோடு குடியை நிறுத்தி விட்ட ஸ்டெயின்பெக்கையும், மேல்மாடியில் வசிக்கும்
அந்த பைத்தியக்கார பெண்ணையும்,
ஏதாவது புது செய்தி தோன்றப் போகிறதென்றால் சில செய்தியாளர்களையும் அழைப்போம்.